வியாழன், 20 ஜூன், 2024

கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு- 16 பேர் கவலைக்கிடம்!

  BBC News தமிழ் :  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 34 பேர் இன்று காலை வரை உயிரிழந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேரும் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு பேரும் இதில் அடங்குவர்.
அடுத்தடுத்து பலர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 16 பேர் கவலைக்கிடம் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.



கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் “ இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உடற்கூராய்வை விரைவாக செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் உயிரை காப்பதற்கு திருச்சி சேலம் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து உயர் சிறப்பு மருத்துவர்கள் வந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கி, ஜூன் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று, வழக்கம் போல், உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதோடு, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவத்தால் சட்டப்பேரவை அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது என்றார் சபாநாயகர் அப்பாவு.

என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாக உறவினர்கள் கூறினர்.

இந்நிலையில், நேற்று நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் என நான்கு கிராமங்களைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், புதுச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக அமைச்சர்கள் நேரில் நலம் விசாரிப்பு

தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர் தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு அறிக்கை

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெத்தனால் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது." என்று கூறப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபி சி ஐ டிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அதிகமானோர் உயிரிழந்த கருணாபுரம் பகுதியில் பாதுகாப்பு கருதி 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகளின் இருபுறங்களும் சுண்ணாம்பு தெளித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுவரை 20 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மாற்றம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எம் எஸ் பிரசாந்த் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

10 அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி,கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்
இந்த சம்பவத்துக்கு தமிழக அரசே காரணம் என்று குற்றம் சாட்டும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். “தி.மு.க அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்திப்பதே பிரதானமாக அமைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் ஜூன் 22ம் தேதி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், "டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.” என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,ம “கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் மா சுப்ரமணியன், பொன்முடி, எ வ வேலு, முத்துசாமி ஆகியோர் பங்கேற்க அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவல்துறை, சுகாதாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

மெத்தனால் விற்பனை கண்காணிப்பு

மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனை போதைக்காக மதுவில் கலக்கும் போது, அது உயிருக்கு ஆபத்தாகும். மதுவில் மெத்தனால் எவ்வளவு கலந்துள்ளது, அந்த மெதுவை எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை பொறுத்து உயிருக்கு ஆபத்தானதாக அமையக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மெத்தனால் விற்பனை செய்பவர்களின் தகவல்களை சேகரித்து வருகிறது அரசு.

கருத்துகள் இல்லை: