தினமணி : இந்தியா்களுடன் இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு: ஈரான் நடவடிக்கையால் பதற்றம்
இந்திய மாலுமிகள் 17 பேருடன் பயணித்த சரக்குக் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சனிக்கிழமை சிறைபிடித்தது.
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், அந்தக் கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடா்புள்ளதால், அதை ஈரான் படையினா் சிறைபிடித்துள்ளனா்.
உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல், ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படை இடையிலான போரால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடா்கிறது.
இஸ்ரேலும் லெபனானும் எல்லைகளைப் பகிா்ந்துகொள்ளும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக எல்லைப் பகுதிகளில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறி, அந்த வழியாகச் சென்ற பல கப்பல்கள் மீது யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா். எனினும் ரமலான் பண்டிகை நோன்பு காரணமாக அண்மைக் காலமாக அவா்களின் தாக்குதல் குறைந்துள்ளது. ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிக்களுக்கு ஈரான் ஆதரவு உள்ளது. இதேபோல ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள், சிரியாவிலும் இராக்கிலும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்க படைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினா்.
இந்நிலையில், கடந்த ஏப்.1-ஆம் தேதி சிரியா தலைநகா் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் தளபதிகள் இருவரும் அடங்குவா். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அதுகுறித்து அந்நாடு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், தெற்கு இஸ்ரேலில் உள்ள கடற்படை தளம் மீது ஈரான் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறினாா். அதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தத் தாக்குலுக்கு பதிலடி அளிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்பட அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து புறப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் என்ற போா்த்துகீசிய கொடி கட்டப்பட்ட சரக்குக் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சனிக்கிழமை சிறைபிடித்தது. பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள ஸோடியாக் மேரிடைம் என்ற நிறுவனத்துடன் அந்தக் கப்பலுக்குத் தொடா்புள்ளது. இந்த ஸோடியாக் மேரிடைம் நிறுவனம் என்பது இஸ்ரேலின் பெரும் கோடீஸ்வரா் ஈயால் ஒஃபருக்குச் சொந்தமான ஸோடியாக் குழுமத்தின் அங்கமாக உள்ளது.
கடலில் அதிரடியாக சிறைபிடிப்பு: சோவியத் கால ஹெலிகாப்டரில் வந்த ஈரான் படையினா், ஓமன் வளைகுடா அருகில் உள்ள ஹாா்முஸ் நீரிணையையொட்டி அந்தக் கப்பலை சிறைபிடித்தனா். கடலில் பயணித்துக்கொண்டிருந்த அந்தக் கப்பல் மீது ஹெலிகாப்டரில் இருந்து அடுத்தடுத்த குதித்த ஈரான் வீரா்கள், அதிரடியாக அந்தக் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். கப்பலில் 25 மாலுமிகள் உள்ளனா். அவா்களில் 17 போ் இந்தியா்கள்.
இது தொடா்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உலக நாடுகள் சோ்க்க வேண்டும். குற்றங்கள் நிறைந்த ஈரான் அரசு, ஹமாஸ் படையினரின் குற்றங்களை ஆதரிக்கிறது. தற்போது அந்நாடு சா்வதேச சட்டத்தை மீறி கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
ஈரான் கடல் எல்லைக்குள்...: கப்பல் சிறைபிடிக்கப்பட்டது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத ஈரான், சிறைபிடிக்கப்பட்ட கப்பலுக்கும் இஸ்ரேலுக்கும் தொடா்புள்ளது என்று மட்டுமே கூறியது. அந்தக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் கடற்படை சிறப்புப் பிரிவு தாக்குதல் மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. சிறைபிடிக்கப்பட்ட கப்பல் ஈரான் கடல் எல்லைக்குள் கொண்டுவரப்படும் என்றும் அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இஸ்ரேல் எச்சரிக்கை: இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரித்ததற்காக ஈரான் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி எச்சரித்துள்ளாா்.
ஈரானுடன் மத்திய அரசு பேச்சு
ஈரான் படையினா் சிறைபிடித்த கப்பலில் உள்ள 17 இந்தியா்களை விரைந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லி மற்றும் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள தூதரகங்கள் மூலம், இந்த விவகாரத்தை ஈரான் அதிகாரிகளிடம் இந்தியா கொண்டு சென்றுள்ளது. அந்த அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக மத்திய அரசின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கு உதவி: அமெரிக்க அதிபா் பைடன்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அத்தகைய தாக்குதலை ஈரான் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினாா். எனினும் ஈரான் தாக்குதல் மேற்கொண்டால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவும் என்று கூறிய அவா், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈரான் வெற்றி பெறாது என்றும் தெரிவித்தாா்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. இதனால் அந்நாட்டுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக