நக்கீரன் : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில்,
முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
..
இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் 7 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பபட்டுள்ளது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகியுள்ளது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகியுள்ளது. நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக