மாலை மலர் : 18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
அதாவது, தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டுவதால், காலையிலேயே அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் நண்பகல் மற்றும் மதிய நேரத்தில் பல இடங்களில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலையில் மீண்டும் வேகமெடுத்தது.
இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதேநேரம் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.
இந்த முதற்கட்ட தேர்தலில் கடைசியாக கிடைத்த தகவலின்படி 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
அதன்படி, நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக