வெள்ளி, 13 அக்டோபர், 2023

பிரிட்டன் கடற்படையிடம் சிக்கிய கன்னியாகுமரி மீனவர்கள் 32 பேர் என்ன ஆனார்கள்? -

BBC News தமிழ் Justin Antony / Jaime jose    எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்:
தமிழ்நாட்டில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் சென்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்கி மீன் பிடித்து கரைக்குத் திரும்பி வந்துவிடுவர்.
ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு 30 நாள் முதல் 45 நாட்கள் வரை தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கடலுக்குச் சென்று மீன்கள் இருக்கும் திசையை அறிந்து அங்கு சென்று மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 1400 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

  இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் உள்ளன. கன்னியாகுமரி மீனவர்களுக்கு 200 கடல் மைல் தொலைவுக்குள் மட்டுமே சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மீனவர்கள் அதை மீறி 1000 கடல் மைல்களை தாண்டிச் சென்று பிரிட்டன் கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு மற்றும் ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஓமன் போன்ற நாடுகளின் கடல் பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிப்பதாக புகார்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன.



கன்னியாகுமரி மீனவர்கள்

பட மூலாதாரம், Jaime Jose


இந்த விவகாரம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளும் கன்னியாகுமாரி மீனவர்களை அழைத்து கடல் எல்லைப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் இருந்து இரண்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை பிரிட்டன் கடற்படையினர் டீகோ கார்சியா கடற்படை தளத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த 32 மீனவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வர அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மோசமான காலநிலையால் மீனவர்கள் பிரிட்டன் எல்லைக்கு உட்பட்ட தீவுக்குச் சென்று மாட்டிக்கொண்டதாகக் கூறுகிறார் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் ஜஸ்டின் ஆன்டணி.



கன்னியாகுமரி மீனவர்கள்

இதுகுறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் மண்டலத்தில் 8 மீனவ கிராமங்கள் உள்ளன. நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவி புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் பிரபலமானவர்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடலுக்குள் தங்கி சுறா மீன் போன்ற பெரிய வகை மீன்களைப் பிடித்து வருவது இவர்களது வழக்கமாக இருந்து வந்தது,” என்று கூறுகிறார்.

“தற்போது நவீன இயந்திரங்களால் செய்யப்பட்ட விசைப் படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடலுக்குச் சென்று 30 முதல் 45 நாட்கள் வரை கடலிலேயே தங்கி மீன்களைப் பிடித்து கரை திரும்புகின்றனர்,” என்றும் குறிப்பிடுகிறார்.

கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினத்திலிருந்து சைமன் பாஸ்டின் என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளில் ஒரு படகில் 16 பேர் வீதம் 32 பேர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் தூத்தூர், கேரளா, நாகை, அசாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்.

அவர்கள், "கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ( British Indian Ocean Territory- BIOT) அமைந்துள்ள உள்ள டியாகோ கார்சியா ( Diego Carcia) என்ற பகுதிக்குள் சென்று மீன்பிடித்ததாகக் கூறி பிரிட்டன் கடல் படையினர் இரு படகுகளையும் கைப்பற்றி 32 மீனவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக" ஜஸ்டீன் ஆண்டனி நம்மிடம் தெரிவித்தார்.



கன்னியாகுமரி மீனவர்கள்

பட மூலாதாரம், Justin Antony

குடும்பத்துடன் தொலைபேசியில் பேசிய மீனவர்கள்

நம்மிடம் பேசிய அவர், “பிரிட்டன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தீவின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 32 மீனவர்கள் அக்டோபர் 3ஆம் தேதி வரை அவர்களது உறவினர்களிடம் 2 நிமிடம் பேசுவதற்கு அந்நாட்டு கடற்படையினர் அனுமதி வழங்கினர். பிறகு அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தை துண்டிக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “பிரிட்டன் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 32 மீனவர்களின் குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள். அந்த 32 பேரை நம்பித்தான் அவர்களது குடும்பங்கள் உள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பிரிட்டன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,” என்று ஜஸ்டீன் ஆண்டனி கூறுகிறார்.

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசுக்குத் தகவல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மீனவர்கள் குறித்து மத்திய அரசு தரப்பில் தன்னிடம் தகவல்களைக் கேட்டதாகவும் கூறிய ஜஸ்டீன் ஆண்டனி, “32 மீனவர்களின் ஆதார் எண்கள் உள்ளிட்ட தகவல்களை மத்திய அரசிடம் கொடுத்துள்ளேன். மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.



கன்னியாகுமரி மீனவர்கள்

பட மூலாதாரம், Jaime jose

படக்குறிப்பு,

ஜெய்மி ஜோஸ்

உறவினர்கள் என்ன கூறுகின்றனர்?

பிரிட்டன் கடற்படையிடம் சிக்குவதற்கு முன்தினம்தான் அவர்களிடம் பேசியதாகக் கூறுகிறார் சுமன் என்ற மீனவரின் உறவினரான ஜெய்மி ஜோஸ்.

“எனது தங்கச்சியின் கணவர் சுமனிடம் செப்டம்பர் 26ஆம் தேதி நான் போனில் பேசினேன். அப்போது கரையில் காற்றின் வேகம் எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டார்கள். இங்கே கரையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது என நான் கூறினேன். அதேபோல கடலின் உட் பகுதியிலும் காற்றின் வேகம் வழக்கத்திற்கு மாறாக சற்றுக் கூடுதலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பிறகு என் தங்கையிடம் போனில் பேசிய சுமன் பிரிட்டன் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அனைத்து உபகரணங்கள், கடலில் பிடித்த மீன்களைப் பறிமுதல் செய்ததாகவும், எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக அபராதத் தொகையைக் கட்டுமாறு கூறியதாகவும் தெரிவித்தார்,” என்று கூறினார்.

அபராதம் செலுத்த முடியாத சூழலில் படகின் உரிமையாளர்கள்

இதேபோல், பிரிட்டன் கடல் எல்லைப் பகுதிக்குள் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் பலமுறை அபராதம் கட்டி படகுகளுடன் ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், தற்போதைய விவகாரத்தில், ஏற்கனவே ஒரு படக்கிற்கு ரூ. 8 லட்சம் வீதம் செலவும் செய்திருப்பதால் படகின் உரிமையாளர்கள் அபராதம் கட்ட முடியாத சூழலில் இருப்பதாக ஜெய்மி ஜோஸ் கூறுகிறார்.



கன்னியாகுமரி மீனவர்கள்

பட மூலாதாரம், Justin Antony

அரசை நம்பி காத்திருக்கிருக்கும் குடும்பங்கள்

கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை மீட்டு மீண்டும் தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்நோக்கி வீட்டில் உள்ள அனைவரும் காத்திருப்பதாக மீனவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

அதிக அளவில் மீன்களைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று எல்லை கடந்து சென்று பிறநாட்டு கடற்படைகளிடம் மீனவர்கள் சிக்கிக்கொள்வதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 200 நாட்டிகல் மைல் பரப்பளவு (Exclusive Economic Zone- EEZ) சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தப் பகுதிக்குச் செல்லும் மீனவர்கள் போதிய மீன்கள் கிடைப்பதில்லை என்று கடல் எல்லைகளை மீறி ஓமன், பிரிட்டன், மடகாஸ்கர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடல் பரப்பிற்குச் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர். இதனால் பிறநாட்டின் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்.

கன்னியாகுமாரி மீனவர்கள் இதற்கு முன்பாக பிரிட்டன், மடகாஸ்கர் , ஆஸ்திரேலியா போன்ற கடல் பகுதிகளில் மீன் பிடித்து அந்த நாட்டின் கடல் படையினரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. படகின் உரிமையாளர் அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் கப்பலுடன் மீனவர்கள் விடுவிக்கப்பட்டும் இருக்கின்றனர்,” என்றார்.



கன்னியாகுமரி மீனவர்கள்

பட மூலாதாரம், X Social media

படக்குறிப்பு,

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர்

பிரிட்டன் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்கிறார் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “மீனவர்கள் நமது கடல் எல்லைப் பரப்பைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் எனப் பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் மீனவர்கள் அதைக் கேட்காமல் சில நேரங்களில் செயல்படுகின்றனர்,” என்றார்.

கடந்த முறை எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்த மீனவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மீன்வளத்துறையால் அபராதம் விதிக்கப்பட்டது. மீனவர்கள் இவ்வளவு அபராதத் தொகையைக் கட்ட இயலாது எனக் கூறியதைத் தொடர்ந்து அது 50 ஆயிரமாக ரூபாயாகக் குறைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது, கன்னியாகுமரி மீனவர்கள் பிரிட்டன் கடல் பரப்பளவில் மீன் பிடிக்கச் சென்று சிக்கியுள்ளனர்.

மீனவர்கள் கைது தொடர்பாக அவர்களது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் மீனவர்களின் விபரங்கள் பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மீனவர்களை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: