செவ்வாய், 31 ஜனவரி, 2023

கடலில் பேனா வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!

 மின்னம்பலம் - Kavi :  மெரினாவில் கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு கடலில் பேனா சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க திட்டம் வகுத்தது.
மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் பேனா சின்னம் அமைக்க அனுமதி வழங்கிய நிலையில் அடுத்தக்கட்டமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை இன்று (ஜனவரி 30) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தியது.
இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். சிலர் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் பேசினர். குறிப்பாக எதிர்ப்புத் தெரிவித்து பேசும்போது சிலர் கோஷம் எழுப்பி கூச்சலிட்டனர்.


இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டார். அவர் கருத்தை தெரிவிக்க எழுந்து சென்ற போதே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனது கருத்தை தெரிவித்த சீமான், “நினைவுச் சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கடலுக்குள் வைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். கடலுக்குள் வைத்தால் சுற்று சூழலுக்கு பாதிப்பு வரும். வேறு எங்கேயாவது வைத்துக்கொள்ளுங்கள்.

இங்கு கத்துகிறீர்களே உங்களுக்காகவும் தான் இதை சொல்கிறேன். 8,551.13 மீட்டர் சதுர அளவு பரப்பளவில் சின்னத்தை வைக்கிறீர்கள். பேனாவை வைக்க வேண்டும் என்றால் கல், மண்ணை கொட்ட வேண்டும். அதனால் அழுத்தம் ஏற்படும். அங்கிருக்கும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்.
seeman against kalaignar pen

இவர்களுக்கு எதைபற்றி கவலை இருக்கிறது. இவர்களை கடற்கரையில் புதைக்கவிட்டது தப்பு. கடலில் பேனா வைத்து பாருங்கள். ஒருநாள் நான் வந்து உடைப்பேன். யாருகிட்ட…

பள்ளிகளை சீரமைக்க காசில்லை என்கிறீர்கள், கடலுக்குள் பேனா வைக்க மட்டும் எங்கிருந்து காசு வந்தது. அண்ணா அறிவாலயம் முன் வையுங்கள். நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே அங்கு வையுங்கள்.

கடலுக்குள் வைத்தால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதை நாங்கள் எதிர்க்கிறோம். சின்னம் அமைப்பதை தடுத்து நிறுத்தப்படும் வரை கடுமையாக போராடுவோம். இது உறுதி” என்று ஆவேசமாக கூறினார்.

இந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீமான் அழைத்து செல்லப்பட்டார்.

வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மக்கள் கருத்து கேட்பு கூட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தால் அமைதியாக இருக்கிறார்கள். இல்லை என்றால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். கூச்சலிடுகிறார்கள். இது அநாகரிகம்.

இப்படி செய்வதற்கு கருத்து கேட்புக் கூட்டம் என்று வைக்கத் தேவையில்லையே. கட்சிக் கூட்டம் என்று வைத்துவிட்டு போகலாம். கலைஞருக்கு பேனா சின்னம் வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கடலில் வைக்கத்தான் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.

கடலும், கரையும் சேர்த்து இந்த சின்னத்தை அமைக்க அரை ஏக்கர் எடுக்கிறார்கள்.
அதை பார்வையிட போகும் போது, மக்கள் ப்ளாஸ்டிக்கை போடுவார்கள். ஏற்கனவே கடல்நீர் ப்ளாஸ்டிக்கால் மாசடைந்துள்ளது.

அதை தின்றுவிட்டு திமிங்கலம் எல்லாம் இறந்து கரை ஒதுங்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் கடலில் சின்னத்தை வைத்தால் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
எழுதாத பேனாவுக்கு சிலை வைக்கிறார்கள். அது பகுத்தறிவாம். எழுதுகிற பேனாவை ஆயுத பூஜைக்கு வைத்து கும்பிட்டால் அது மூடநம்பிக்கையாம். இது எப்படிப்பட்ட சித்தாந்தம் பாருங்கள்.

கடலில் வைக்கப்போவது கலைஞர் ஐயா எழுதிய பேனாவா. நிதி இல்லை நிதி இல்லை என்கிறார்கள். இதற்கு மட்டும் எப்படி நிதி வருகிறது.

வள்ளுவர் சிலையை வைத்தார்கள் என்றால் அந்த இடத்தில் பாறை இருந்தது. ஆனால் இது அப்படி அல்ல கல்லை கொட்டி நிரப்ப வேண்டும். எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்” என்றார்.

அதுபோன்று உலக புகழ்பெற்ற ஆறாவது கடற்கரையான மெரினா புதைகுழியா என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியா

கருத்துகள் இல்லை: