புதன், 1 பிப்ரவரி, 2023

சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஒடிசா மந்திரியை 15 நாட்களில் 5 முறை பின் தொடர்ந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர்

மாலைமலர் : புவனேஸ்வர்  ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மந்திரி நபா கிஷோர் தாஸ் கடந்த 26-ந் தேதி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜார்சுகுடா மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவரை, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் என்பவர் சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க., காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் கடந்த 15 நாட்களில் மட்டும் 5 முறை மந்திரி நபா கிஷோர் தாசை பின்தொடர்ந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் ஒருவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட கோபால்தாஸ், கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை ஜார்சுகுடாவில் உள்ள நபா கிஷோர்தாசின் இல்லத்திற்கு அருகில் காத்திருந்து மந்திரி உள்ளே இருக்கிறாரா அல்லது வெளியில் சென்று உள்ளாரா என அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது மந்திரி வீட்டில் இல்லை என்றாலும் சப்-இன்ஸ்பெக்டர் ஒவ்வொருமுறையும் தனது துப்பாக்கியுடன் தான் மந்திரி வீட்டிற்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு மந்திரியின் பயண திட்டத்தை அறிந்துள்ளார்.

எனவே அவர் திட்டமிட்டு தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதுகிறோம். கோபால் தாஸ் தனது உறவினருக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், தன்னை வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் மந்திரி நபா கிஷோர்தாசை 3 மாதங்களுக்கு முன்பே அணுகி உள்ளார். அப்போது மந்திரி நபா கிஷோர்தாஸ் சப்-இன்ஸ்பெக்டரை அவமதித்தாக அவர் கருதியுள்ளார்.

இந்த ஆத்திரத்தில் தான் அவர் அமைச்சரை சுட்டிருக்கலாம் என சந்தேகிக்றோம். அவர் மனநலம் பாதிப்பிற்கு மருந்து எடுத்துக்கொண்டது குறித்து அவரது குடும்பத்தினர் கூறும் வரை எங்களுக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: