செவ்வாய், 13 டிசம்பர், 2022

தாத்தா கலைஞர் வழியில் 45 வயதில் பதவிக்கு வரும் உதயநிதி- ஒரு செங்கல்லை கையில் ஏந்திய பிரசார பீரங்கி!

மாலைமலர் : சென்னை தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர் நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
கிண்டி கவர்னர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதன் மூலம் தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து கணக்கிட்டால் தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆகும்.
கவர்னர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயலகம் வரும் உதயநிதி ஸ்டாலின் தனது துறையின் பொறுப்புகளை ஏற்க உள்ளார். அவருக்கு இளைஞர் நலம்- சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.


குறுகிய காலத்தில் அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதை அறிந்து கட்சியினர் வரவேற்று வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் சென்னை லயோலா கல்லூரியில் பி.காம். படித்தவர். இவரது மனைவி பெயர் கிருத்திகா. இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர். இன்பநிதி தற்போது வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி 45 வயதை தொட்டிருக்கும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் திரையுலக தயாரிப்பாளராக பொதுவெளியில் தோன்றினார். 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

'குருவி', 'சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர். 2009-ம் ஆண்டு ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

2012-ல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் மூலம் உதயநிதி கதாநாயகனாக அறிமுகமானார். 'இது கதிர்வேலன் காதல்', 'மனிதன்', 'நண்பேன்டா', 'நெஞ்சுக்கு நீதி', 'கலக தலைவன்', 'மாமன்னன்' என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

தி.மு.க.வின் செயல் தலைவராக 2017-ல் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது வெள்ளக்கோவில் சாமிநாதன் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் குறுகிய காலமே இந்த பதவியில் இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உதயநிதி தீவிர அரசியலில் இறங்கினார்.

அப்போது 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த சமயத்தில் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்காக தீவிர பிரசாரம் செய்தார்.

தேர்தல் சமயத்தில் கருணாநிதியைப் போல் அடுக்கு மொழியில் பிரசாரம், அனல் கக்கும் பொதுக்கூட்ட பேச்சுக்கள் என தி.மு.க.வில் இன்று யாரும் செய்ய முடியாத நிலையில் மாறி வரும் தலைமுறைகளுக்கு ஏற்ப உதயநிதி தனது பிரசாரத்தை தனித்துவமான பாணியில் மேற்கொண்டார்.

அதாவது சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அவரது ஹை லைட்டே 'செங்கல் பிரசாரம்' தான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு சரி, ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. இதோ அடிக்கல் நாட்டிய அந்த செங்கல்லை எடுத்து வந்திருக்கிறேன் என்று ஒரு செங்கல்லை கையில் ஏந்தி பிரசாரத்தில் காண்பித்தார்.

உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அப்போது இந்த பிரசாரம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. சமூக வலை தளங்களில் டிரெண்டானது.

தேர்தல் நேரத்தில் உதயநிதி தங்கை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த போது, தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு வாருங்கள் என்று தனது வீட்டின் முகவரியை தெரிவித்து வருமான வரித்துறையை வீட்டுக்கு அழைத்ததெல்லாம் பிரசாரத்தின் உச்சம்.

இந்த 2021 தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி 93,285 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

சட்டசபையிலும் தனக்கே உரித்தான பாணியில் கலகலப்பை உருவாக்கி நகைச்சுவையாக பேசி எதிர்க்கட்சியினரையும் சிரிக்க வைத்தார். தனது தொகுதியிலும் தெரு தெருவாக நடந்து சென்று மக்கள் குறை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வந்தார்.

இப்படியாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

அரசியலில் தீவிரமாக இருந்தாலும் திரைத்துறையிலும் அவர் முழு கவனம் செலுத்தி வந்தார். 'விக்ரம்', 'லவ் டுடே', 'கட்டா குஸ்தி" உள்ளிட்ட ஏராளமான படங்களை வாங்கி வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலில் 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவருக்கு அரசியலில் முக்கியத்துவம் அதிகமானது.

தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள்.

உதயநிதியின் மக்கள் பணி தமிழகம் முழுவதும் சென்றடைய அமைச்சர் பதவி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் தர்பார் ஹாலில் உதயநிதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட 300 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 45-வது பிறந்த நாளை உதயநிதி கொண்டாடிய கையோடு அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவரது தாத்தாவும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியும் அண்ணா மறைவுக்கு பிறகு இதே 45-வது வயதில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்-அமைச்சரவையில் மதிவேந்தன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் 45 வயதுக்கு குறைவான இளம் வயது அமைச்சர்களாக உள்ளனர். அந்த வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார்.
 

கருத்துகள் இல்லை: