சனி, 17 டிசம்பர், 2022

ஓசினா.. சும்மா சும்மா வருவயா!" மூதாட்டியிடம் அடாவடி பேச்சு! அத்துமீறிய நடத்துநர் மீது நடவடிக்கை

tamil.oneindia.com  -    Vigneshkumar  :  தஞ்சை: தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ள நிலையில், மூதாட்டி ஒருவரிடம் நடத்துநர் தரக்குறைவாகப் பேசிய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்தது. அதில் குறிப்பாகப் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் அறிவித்திருந்தது.
அதன்படி தேர்தலில் வென்று ஆட்சியை அமைத்த உடன் முதல் உத்தரவாகப் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இலவச பயணம்
இத்திட்டத்தின்படி, அனைத்து பெண்களும் மாநகர பேருந்துகளில் இலவசமாகப் பயணித்துக் கொள்ளலாம். மாநகராட்சியில் இயங்கும் சாதாரண பேருந்துகளில் இந்த இலவச பயணம் பொருந்தும். இந்தத் திட்டத்திற்குப் பெண்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்தனர். இந்த இலவச பேருந்து பயணம் மூலம் பெண்களால் 1012 ரூபாய் வரை சேமிக்க முடிவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது.

புகார்கள்
இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக நல்ல ஆதரவு கிடைத்துள்ள போதிலும், ஆங்காங்கே சிறு பூசல்களும் எழுகிறது. இலவசமாகப் பயணிக்கும் பெண்களை நடத்துநர்கள் சில இடங்களில் தரக்குறைவாகப் பேசுவதாகவும் முறையாக நடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நடத்துநர்கள் கண்ணியம் குறைவாக நடந்து கொள்ளக் கூடாது எனப் போக்குவரத்துக் கழகம் வலியுறுத்தியுள்ள போதிலும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அடாவடி பேச்சு
அப்படியொரு சம்பவம் தான் இன்று தஞ்சாவூரில் நடந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் மெலட்டூரில் ஏறிய மூதாட்டி ஒருவர் தஞ்சை வரை சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அதே பேருந்தில் ஏறி மெலட்டூருக்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் மூதாட்டி பேருந்தில் ஏறியதைப் பார்த்த நடத்துநர், அவரிடம் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார்.

ஒசினா அடிக்கடி வருவயா
அந்த நடத்துநர் மூதாட்டியிடம், "காசு இல்லை.. ஓசி என்றால் சும்மா சும்மா போயிட்டு போயிட்டு வருவியா" எனக் கேட்கிறார். இதற்கு அந்த மூதாட்டி ஓசி என்பதால் ஒன்றும் நான் போகவில்லை.. நான் மாலை போட்டு உள்ளேன்.. அதனால் ஊரிலிருந்து கோயிலுக்கு வந்தேன். இப்போது சாமியைக் கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், ஏன் தம்பி இப்படி கோபமாகப் பேசுகிறாய் என்றும் கேட்டுள்ளார்.

வீடியோ
இருந்த போதிலும், அந்த மூதாட்டியை விடாமல் அந்த நடத்துநர் அவதூறாகத் தரக்குறைவாகவே பேசியுள்ளார். இதை அந்த பேருந்தில் பயணித்த மற்றொரு பயணி தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வெலியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட நபர் மீது போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சஸ்பெண்ட்
மூதாட்டியிடம் மரியாதைக் குறைவாகப் பேசியவர் மானங்கோரையை சேர்ந்த நடத்துநர் ரமேஷ்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மூதாட்டியிடம் மரியாதைக் குறைவாகவும் தரக்குறைவாகவும் பேசிய அந்த நபரைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Thanjavur conductor scolds elder women who travelled in free bus travel: Thanjavur conductor suspended after video of him behaving rudely with elderly lady.

கருத்துகள் இல்லை: