திங்கள், 12 டிசம்பர், 2022

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மாலைமலர்  : பூந்தமல்லி வங்ககடலில் உருவான மாண்டஸ்புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த பின்னரும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 3645 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து கடந்த 9-ந்தேதி முதல் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை புறநகர் பகுதியில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிககு 2,046 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22.43 அடியை எட்டியது. மேலும் தண்ணீர் இருப்பு 3,184 மில்லியன் கன அடியாக அதிகரித்தது.

தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்ததையடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பை 1000 கன அடியாக உயர்த்த மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சமாக 23 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

இன்று காலை முதல் தொடர்ந்து புறநகர் பகுதிகளில் கன மழை கொட்டி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரத்து 407 கன அடியாக அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி எரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மீண்டும் அறிவித்தார்.

அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட் டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது.

ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அடையாறு ஆற்றுகரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சிறுகளத்தூர், வழுதிலம்பேடு, திருநீர்மலை, அனகா புத்தூர் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கி றது. ஏற்கனவே கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தபோது 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் நீர்வரத்து 4200 அடியாக உயாந்தது. இதையடுத்து நீர் திறப்பு 3000 கன அடியாக உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் மழைகாரணமாக அடையாறு ஆற்றில் தண்ணீர் வெள்ளம் போல் செல்கிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது சிறு களத்தூர் அருகே குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தண்ணீர் செல்லும். இதனால் அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டு சிறுகளத்தூர், நத்தம்பேடு, அமரம்பேடு, சோமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும்.

தற்போது சிறுகளத்தூர் பகுதியில் பாலம் கட்டப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு இல்லை. எனினும் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்படும். தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என்றார்.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23அடியை நெருங்கி உள்ளதால் ஏரி தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியை பார்க்க பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். மேலும் ஏரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

கருத்துகள் இல்லை: