செவ்வாய், 12 ஏப்ரல், 2022

இலங்கையின் முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயாகவும் எம்ஜியாரும்

நமது குடும்பம்  :  வருடம் 1965 - தீபாவளி.
மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் இலங்கை வந்திருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது.
கொழும்பு நகரில் இன, மத பேதமில்லாது மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட மக்கள் திலகம், தனது பிறப்பிடமான கண்டி செல்கிறார். தான் பிறந்த மண்ணை விழுந்து வணங்கி, கண்கள் கலங்க முத்தமிடுகிறார். கைக்குழந்தையாக தாய், அண்ணன் இவர்களோடு இந்தியா சென்றவர் மறுபடியும் இலங்கை வந்தது இப்போதுதான் என்பது சிறப்பு.
மறுநாள் மலையகத்தின் நுவரெலியா நகரில் குதிரைப்பந்தயத் திடலில் மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம். இந்திய வம்சாவழித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் அழகிய மலைநகரம். தொழிலாளப் பெண்களுக்கிடையே 'மலையக அழகிப் போட்டி' - சரோஜாதேவி அம்மா நடுவராகவும், மக்கள் திலகம் பரிசு வழங்குபவராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திடலின் மேடையைச் சுற்றிலும் பல மீட்டர்கள் தூரத்தில் பாதுகாப்புக்காக தடுப்புக்கட்டை வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் ஆரம்பிக்க அரை மணி நேரத்திற்கு முன்பதாக மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் மேடைக்கு வருகிறார்கள்.
மக்கள் திலகத்தைப் பார்த்த தொழிலாளத் தோழர்களோடு (நானும் இந்திய வம்சாவழித் தொழிலாளக் குடும்பத்தில் பிறந்தவன்தான். அப்போது 1965ல் எனக்கு பதினான்கு வயது. ஒன்பதாம் தரம் படித்துக் கொண்டிருக்கிறேன்.) மற்றைய அவரது ரசிகர்கள், அபிமானிகளின் கரஒலியும், "மக்கள் திலகம் வாழ்க" கோஷமும் விண்ணைப் பிளக்கின்றது.
மேடை முன்னால் நின்று கரங்களை உயர்த்தி, உணர்ச்சி வசப்பட்டு வணங்குகிறார். ஆனால் சுற்றுமுற்றும் பார்த்த அவரது முகத்திலே சிறிது கலவரம். கூட்ட ஒருங்கிணைப்பாளரை சைகை மூலம் அழைக்கிறார்.
"என்ன பண்ணிருக்கீங்க? எதுக்காக மக்கள் நிக்கற இடத்திற்கு முன்னாடி இவ்வளவு தடுப்புக் கட்டைகள் போட்டிருக்கீங்க?" - சிறிது கோபம் அவர் முகத்தில்.
"இல்லே சார், மேடைக்கு ரொம்பக் கிட்டே மக்கள் வந்துட்டா, உங்களைத் தொடறதுக்கு முண்டியடிப்பாங்க. காவல் துறைக்குக் கூட அவங்களை கன்ட்ரோல் பண்ண முடியாது. அதனாலேதான் பாதுகாப்புக்காக..............,"
இழுக்கிறார்.
"ஒன்னு சொல்றேன். இத்தினி வருஷம் கழிச்சு நான் பிறந்த நாட்டுக்கு வந்திருக்கேன். இங்கே என்னைப் பார்க்க வந்திருக்க இவங்க எல்லாமே என் சொந்தங்கள். அவங்க ஆதரவாலேதான் நான் இன்னைக்கு இந்த நிலைமைலே இருக்கேன். அவங்க இல்லேன்னா நான் இல்லே. என்ன செய்வீங்களோ தெரியாது. கொஞ்ச நேரத்திலே இந்தத் தடுப்புக் கட்டைங்கள எல்லாம் கழட்டிட்டு, மக்களை மேடை கிட்டே வரவிடுங்க. இல்லே, நான் திரும்பிப் போய்டுவேன்" - கணீரென்ற குரலில் உறுதியாகச் சொல்கிறார். (இரக்கம் மிகுந்த நம்பிக்கையூட்டும் குரலல்லவா அது?)
திகைத்த கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மற்றவர்களும் மளமளவென்று தடுப்புக்கட்டைகளை அகற்ற, "முன்னாடி வாங்க" என்று மக்கள் திலகம் கைகளை நீட்டி மக்களை அழைக்கிறார்.
உணர்ச்சி மேலீட்டால் கண்ணீர் விட்டு அழுத மக்கள் கூட்டத்தின் கரஒலியும், "மக்கள் திலகம் வாழ்க", "புரட்சி நடிகர் வாழ்க", "எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க" கோஷங்களும் விண்ணில் பட்டு எதிரொலிக்கின்றன.
அழகு ராணிப் போட்டி நிறைவு பெறுகிறது. மக்கள் திலகத்துடன், சரோஜாதேவி அம்மாவும் பரிசுகளை வழங்குகிறார். தொடர்ந்து சுமார் அரை மணி நேரமாக மக்கள் திலகம் நன்றி உரை நிகழ்த்துகிறார்.
அலை கடலென வந்த மக்கள் கூட்டம் மிக அமைதியாக அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
நிகழ்வின் இறுதியில் மேடையை விட்டிறங்கிய மக்கள் திலகம் கூட்டத்தினரின் அருகிலே சென்று அவர்களை வணங்குகிறார். தன்னைத் தொட்ட மக்களை புன்முறுவலோடு மீண்டும், மீண்டும் வணங்கி நன்றி கூறியபின் கொழும்பு புறப்படுகிறார்.

கருத்துகள் இல்லை: