புதன், 13 ஏப்ரல், 2022

பாலிடெக்னிக் மாணவர்கள் அண்ணா பல்கலையில் சேரலாம்: பொன்முடி

 மின்னம்பலம் : நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாலிடெக்னிக் முடித்தவர்கள் இரண்டாம் ஆண்டில் சேரலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர், மரகதம் குமரவேல், "விவசாயிகள் அதிகம் வசிக்கக்கூடிய மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி மாணவர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர முடியவில்லை. எனவே இவர்கள் அரசு கல்லூரியில் தொழில்நுட்ப படிப்புகளில் சேர வேண்டுமானால் 60 கிலோமீட்டர் தொலைவு பயணித்து செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை உருவாகிறது.

எனவே அச்சிறுப்பாக்கம் பகுதியில் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இவரது கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் 51அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 406 சுயநிதி கல்லூரிகள், 40 அரசின் இணைவு பெற்ற கல்லூரிகள் என மொத்தம் 59 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரைத் தனியார் கல்லூரிகளில் 5010 இடங்கள் உள்ளன. ஆனால் இதில் 1879 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 3031 இடங்கள் காலியாக உள்ளது. எனவே உறுப்பினர் கூறியதைப் போல் கொஞ்சம் கட்டணம் அதிகமாக இருந்ததால் கூட மாணவர்கள் சேராமல் இருக்கலாம். தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த மானிய கோரிக்கையில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 5 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நேரடியாகச் சேரலாம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்று சேர்க்கை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் முதல்வர் ஆணையின்படி பாலிடெக்னிக் முடித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் இந்த ஆண்டு முதல் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர முடியும்.

பாலிடெக்னிக் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேலை வாய்ப்பை பொறுத்துத்தான் எந்த கல்லூரி படிப்பும் அதிகரிக்கிறது. எனவே தொழில் துறை, தொழிலாளர் நலத் துறை, உயர் கல்வித்துறை ஒன்றாகச் சேர்ந்து வேலை வாய்ப்பை அதிகரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: