வியாழன், 14 ஏப்ரல், 2022

அம்பேத்கர் பிறந்தநாள்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

 மின்னம்பலம் : அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கர் படத்துக்கு இன்று (ஏப்ரல் 14) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்துக்குச் சென்றார்.
அப்போது வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவச் சிலையை விசிக எம்பி திருமாவளவன் முதல்வரிடம் வழங்கினார்.


இதைத்தொடர்ந்து அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், புகைப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.
"சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்.

சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என முதல்வர் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை: