ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

69 அடி நீளம் 500 டன் எடையுள்ள இரும்பு பாலத்தை வெட்டி கொண்டு சென்ற திருடர்கள்.. பிகாரில் சம்பவம் (பாஜக கூட்டணி ஆட்சி)

 மாலைமலர் : வீடு புகுந்து திருட்டு, கடைகளில் கொள்ளை, நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி என்று தான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் பாலத்தையே ஒருகும்பல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் சாசரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டு கால பழமையான இரும்பு பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.
 69 அடி நீளம் கொண்ட இந்த பாலம் முற்றிலும் இரும்பினால் ஆனது. இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.  புதிய பாலம் கட்டப்பட்டதால் இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அதனை பணமாக்க கொள்ளை கும்பல் திட்டமிட்டது. இதற்காக என்ன செய்யலாம் என அவர்கள் யோசனை செய்தனர். 

கியாஸ்கட்டர் மூலம் பாலத்தை அப்படியே வெட்டி எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் புல்டோசர், கியாஸ் கட்டர்களுடன் அங்கு சென்று கொஞ்சம், கொஞ்சமாக பாலத்தை வெட்டி எடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இப்படி 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அலேக்காக தூக்கி சென்று விட்டனர்.

திடீரென இரும்பு பாலம் மாயமானதை கண்டு அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளையர்கள் ஒரேநாளில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், பலநாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாலத்தை கியாஸ் கட்டர்கள் மூலம் வெட்டி இந்த புதுவகையான திருட்டை செய்ததும் தெரியவந்தது.

கடந்த ஆண்டு ரூ.200 கோடி மதிப்புள்ள மணல்களை சாசரம் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மாபியா கும்பல் தான் இந்த கொள்ளையினை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: