திங்கள், 30 டிசம்பர், 2019

இளையராஜா இசை விழாவா, பொன்னார் பாராட்டு விழாவா?


இளையராஜா இசை விழாவா, பொன்னார் பாராட்டு விழாவா? மின்னம்பலம் : இளையராஜா இசை விழாவா, பொன்னார் பாராட்டு விழாவா? எஸ்என்எஸ் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று(டிசம்பர் 29) நடைபெற்றது.
பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப்படத்தில் ராதாரவி, ரோபோ ஷங்கர், மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழாவில் திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் பங்கேற்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், மதுமிதா உள்ளிட்டவர்களோடு பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட ராதாரவி உரையாற்றும் போது, ‘பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு உன்னதமான மனிதர் என்றால் அது பொன்னார் மட்டும் தான். அவர் தான் என்னை இங்கு அழைத்து வந்தார். அவரும் சிறந்த பேச்சாளரான வானதி ஸ்ரீனிவாசன் அவர்களும் இங்கு வந்துள்ளனர். திறமையான அவர் நாளைய தமிழக பாஜக தலைவராகவும் வரலாம். இந்திப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்களை தமிழ்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா.’ என்று கூறினார். மேலும் ‘ஒரு முறை நான் வெளிநாட்டுக்குச் சென்றபோது, என்னிடம் ஒர்க் பெர்மிட் இல்லை எனத் துரத்திவிட்டார்கள். அதே போன்று நமது நாட்டில் சட்டம் வராதா என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியான சட்டம் இப்போது தான் வந்துள்ளது. இங்கு இருப்பவனை வெளியே போக சொன்னால் தான் பிரச்னை. அது கூட இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றும் தெரிவித்தார்.

பாஜக கட்சியைச் சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் பேசும்போது, ‘கலைத்துறைக்கும், பாஜகவிற்கும் இப்போது நெருக்கம் அதிகமாகி வருகிறது. தமிழகம் ஒரே ஒரு எம்பியை மட்டும் கொடுத்துள்ள போதும் இதுவரை இல்லாத அளவிற்கு ஏராளமான நிதிகளையும், திட்டங்களையும் கொண்டுவந்தவர் பிரதமர் மோடி. என்னைப் பிரதமராக நினைக்க வேண்டாம். 130 கோடி இந்தியர்களின் சேவகனாக என்னை நினையுங்கள் என்று தான் கூறுகிறார். அவர் தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் நன்மையைத் தான் திரைத்துறையினருக்குச் செய்யும். இது ராஜாக்கள் இருக்கின்ற மேடை. திறமையான கலைஞர்கள் பங்காற்றியுள்ள இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, ‘பாரதிராஜா இளையராஜா பற்றி பேசும் போது இதற்கு மேல் யாராலும் இளையராஜாவைப் புகழ முடியாது என்று நினைத்தேன். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தாலும் இப்படித்தான் இருக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா ஒரு வேலையை எடுத்தால் அதை மிகச்சிறப்பாக முடிக்கக் கூடியவர். அவருடைய துணைவியார் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். திரைத்துறையில் இருக்கும் சில பிரச்சனைகளை சிலர் குறிப்பிட்டார்கள். நிச்சயமாக இது குறித்து உரிய அமைச்சர்களிடம் பேசுவோம். அதன் மூலம் உங்களுடன் இருப்போம் என்று சொல்லிக்கொள்கிறேன். எங்களோடு இணைந்து பயணிக்கும் திரையுலகினரை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன்.
இந்தப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என்ற உச்சத்தை தொட வாழ்த்துகிறேன். விஜய் ஆண்டனி எங்கள் ஊர்க்காரர். எங்கள் ஊர்க்காரரில் நடிகர்களில் யாரும் பெரிதாக வரவில்லை. விஜய் ஆண்டனி மிகப்பெரிய நடிகராக அடையாளம் காண வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்று கூறினார்

கருத்துகள் இல்லை: