வியாழன், 16 பிப்ரவரி, 2017

124 எம் எல் ஏக்களின் ஆதரவு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் தெரிவிப்பு !

ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு, அதிமுகவைச் சேர்ந்த 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 10 பேர் கொண்ட அமைச்சர்கள், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை புதன்கிழமை சந்தித்துப் பேசினர். இரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிஷங்கள் வரை நீடித்தது.
124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரிவித்தோம்.
சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமிக்கு, அனைத்து பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
இந்த நிலையில், எங்களை (அதிமுக) ஆட்சி அமைக்க அழைத்து சட்டப் பேரவையின் ஜனநாயக மான்புகளைக் காக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம். எனவே ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜனநாயகத்தைக் காப்பார்; நிச்சயம் காப்பார் என்ற நம்பிக்கையை அவரிடம் தெரிவித்தோம். எங்களை வியாழக்கிழமை (பிப்.16) எங்களை அழைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு செல்வதாகத் தெரிவித்தோம். இதற்கு ஆவன செய்வதாக ஆளுநர் தெரிவித்தார். ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு ஆளுநரைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறோம் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
124 பெரிதா, 8 பெரிதா? முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். அவர்களும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனரே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எங்களுக்கு 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. 124 பெரிதா, எட்டு பெரிதா. ஆந்திரத்தில் என்.டி.ராமாராவ் ஆட்சியின் போது, 10 எம்.எல்.ஏ.க்களுடன் பாஸ்கர் ராவ் ஆட்சி அமைக்க முயற்சித்தார்.
ஆனால், சட்டப்பேரவையில் நம்பிக்கையை இழந்தார். என்.டி.ராமாராவ் முதல்வராக வந்தார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு தொடர வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் 124 பேரும் எடப்பாடி பழனிசாமியை சட்டப் பேரவை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து பட்டியலைக் கொடுத்துள்ளோம். ஆளுநர் அழைப்பார். ஜனநாயகத்தைக் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்  மாலைமலர்

கருத்துகள் இல்லை: