வியாழன், 15 அக்டோபர், 2015

சகாயம் குழுவிற்கு 5 வாரம் அவகாசம்....கிரானைட் முறைகேடு குறித்த அறிக்கை... ஐகோர்ட்..

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கிரானைட் முறைகேடு புகாரை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட்டு கூறி இருந்தது. இதை தொடர்ந்து சகாயம் தனது விசாரணையை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கினார்.


இதற்காக அவருக்கு மதுரை அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் இருந்து தனது விசாரணையை தொடங்கினார். இவருக்கு உதவியாக பல்வேறு துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவினர் பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டனர். மொத்தம் 22 கட்டங்களாக விசாரணை நடத்திய சகாயம், பொதுமக்கள், விவசாயிகள், கிரானைட் தோண்டி எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினர் அளித்த புகார்களை பெற்று பதிவு செய்துகொண்டார். விசாரணை முடிவடைந்துவிட்டதால் இன்று அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்கள் தயாரிப்பு பணி நிறைவடையாததால் அறிக்கை தாக்கல் செய்வதற்கு சகாயம் அவகாசம் கேட்டார். இதுதொடர்பான வாதத்தின்போது, சகாயம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, சகாயம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 5 வாரம் அவகாசம் (நவம்பர் 23 வரை) அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னதாகவே தயார் ஆனாலும் அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள், இதற்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். எனவே, அடுத்த மாதம் நிச்சயம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: