திங்கள், 27 ஜூலை, 2015

பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அதிக இளைஞர்கள்

டிராஸ்:''பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது,'' என, ராணுவத்தின் வடக்கு பிரிவின், லெப்டினன்ட் ஜெனரல், டி.எஸ்.ஹூடா கூறினார்.
கடந்த 1999ல், கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவி, அதனால் ஏற்பட்ட போரில் இந்தியா பெற்ற வெற்றி, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26ம் தேதி, 'விஜய் திவஸ்' என்ற பெயரில் ராணுவத்தினரால் கொண்டாடப்படுகிறது.ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், டில்லி, 'அமர் ஜவான் ஜோதி' எனப்படும், மறைந்த வீரர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, கார்கில் போரில் இறந்த, 490 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


டிராஸ் பகுதியில் நேற்று நடைபெற்ற, விஜய் திவஸ் நிகழ்ச்சியில், ராணுவத்தின் வடக்கு பிரிவு பொறுப்பாளரான, லெப்டினன்ட் ஜெனரல், டி.எஸ்.ஹூடா பேசியதாவது:ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தினருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் நடைபெறும் போராட்டங்களின் போது, ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடி, பாகிஸ்தான் தேசிய கொடி காட்டப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.எங்களின் உளவுத்தகவல்களின் படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, ஒற்றை இலக்கமாக இருந்த, பயங்கரவாத அமைப்பில் சேரும், ஜம்மு - காஷ்மீர் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டிலிருந்து, இரட்டை இலக்கமாகி உள்ளது.

கடந்த ஆண்டில், 60 இளைஞர்கள், இந்த ஆண்டில், 30 - 35 இளைஞர்கள், பாகிஸ்தான் ஆதரவு மற்றும் மேற்காசிய பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்.,சில் சேர்ந்துள்ளனர். பயங்கரவாதத்தின் காலடி, கொஞ்சம் கொஞ்சமாக, ஜம்மு - காஷ்மீரில் பதிந்து வருகிறது. இது, கவலைக்குரிய விஷயம் தான். இதை எப்படி அணுகுவது என்பது ராணுவத்திற்கு தெரியும்.இவ்வாறு ராணுவ அதிகாரி ஹூடா கூறினார் dinamalar.com

கருத்துகள் இல்லை: