வியாழன், 30 ஜூலை, 2015

மியான்மரில் 6,966 கைதிகள் விடுதலை

மியான்மரில் 210 வெளிநாட்டவர் உட்பட 6,966 கைதிகள் விடுதலை
செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டவர்களில் அடக்கம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வரும் நவம்பர் மாதம் அந்நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டின் அதிபர் இந்த மன்னிப்பை வழங்கியிருப்பதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பர்மாவைச் சேர்ந்த அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டார்களா என்பது தெளிவாகவில்லை. விடுவிக்கப்பட்டவர்களில், சீனாவைச் சேர்ந்த மரம் வெட்டுபவர்கள் 150 பேரும் அடக்கம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளதன. இவர்கள் மியான்மர் அரசால் கைதுசெய்யப்பட்டது, சீன அரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. சமீப காலமாக மியான்மர் அரசு இம்மாதிரியான பொது மன்னிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

2010ஆம் ஆண்டில் ராணுவத்தின் உதவியுடன் அதிபராகப் பதவியேற்ற தெய்ன் செய்ன் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க உறுதியேற்றிருப்பதாக கூறியிருந்தார்.
மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரும்பாலான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
இருந்தபோதும் இன்னும் 150க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதாக இராவதி செய்தித்தளம் தெரிவிக்கிறது.
வியாழக்கிழமையன்று விடுவிக்கப்பட்டவர்களில் ராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எட்டுப் பேரும் அடக்கம் என ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்கள் 2004ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட 210 வெளிநாட்டவர்களும் விரைவில் நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சீனாவின் ஜிங்ஸுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சட்டவிரோதமாக மரம்வெட்ட முயன்ற குற்றச்சாட்டில் 155 பேர் சிறையிலிடப்பட்டனர். ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையின் கடுமை குறித்து, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருந்தது.
இவர்களில் 153 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 17 வயதுடைய இரண்டு இளைஞர்களுக்கு மட்டும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது bbc.com/tam

கருத்துகள் இல்லை: