கூட்டுறவுச் சங்க அதிகாரிகளின் மெத்தனத்தால், உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், 4 மாதங்களாக கூலி கிடைக்காமல் நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக கொள்முதல் செய்த சேலைகளுக்கு கூலி வழங்காமல் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நெசவுத் தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் நெசவாளர்கள் சிலர் கூறியது: ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் வேஷ்டியும், தேனி மாவட்டத்தில் சேலையும் உற்பத்தி செய்யப்பட்டு இலவச வேஷ்டி, சேலைத் திட்டத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை சிலர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டுறவுச் சங்கத்துக்கு சேலைகளை அனுப்பி வைக்கின்றனர். நூல், கோன் கண்டை மூலதனமாகக் கொடுத்து, ஒரு சேலையை உற்பத்தி செய்ய ரூ. 80-ஐ கூலியாக அரசு நிர்ணயம் செய்துள்ளது.
இதில் பசை போடுதல், நூல் சுற்றுதல், பாவு ஓட்டுதல் என ரூ. 35 செலவு ஏற்படுகிறது. மீதம் ரூ. 45 கூலியாகக் கிடைக்கிறது. கைத்தறி நெசவு மூலம், ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு சேலையை உற்பத்தி செய்வதே கஷ்டம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 700 பேருக்கு, பெடல் தறியை அரசு இலவசமாக கொடுத்தது. இதில் மின் மோட்டாரை இணைத்து, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று சேலைகள் உற்பத்தி செய்து வருகிறோம்.
ஒரு மாதத்துக்கு சராசரியாக 30 ஆயிரம் சேலைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திக்கு தகுந்தாற்போல, வாரந்தோறும் அந்தந்த கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
ஆனால், கடந்த 4 மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், அரசு பணம் கொடுக்கவில்லை, நீங்கள் உற்பத்தி செய்த சேலைகள் கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு நிதி ஒதுக்கும் போது பணம் தருகிறோம். என்று தெரிவிக்கின்றனர். இதனால் கூலி இல்லாமல் கடந்த 4 மாதங்களாக சிரமப்பட்டு வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்க அதிகாரி ஒருவர் கூறியது: ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை தமிழக அரசு கூட்டுறவுச் சங்கங்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். இந்த முறை பணம் வழங்க சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கூலி வழங்கப்படும் என்றார். /tamil.thehindu.com/