புதன், 15 ஜூலை, 2015

பஹுபாலி ? மார்கெட்டிங் டெக்னிக்கில் கோகா கோலாவையும் மிஞ்சிய லோ கிளாஸ் விட்டலாச்சாரியார் சினிமா?

karundhel.com :
இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’ என்ற டாக்லைன் இப்படத்துக்குப் பொருந்துகிறதா? ‘ஒரு திரைப்படம்’ என்ற அளவில் பாஹுபலி (தெலுங்கில் பாஹுபலி. தமிழில் பாகுபலி. பாஹுபலி என்பதே சரியான வார்த்தை. பரந்த தோள்களை உடையவன் என்பது அதன் பொருள்) எப்படி?
முதலில் நான் சொல்லவிரும்பும் ஒரு விஷயம் – இப்படம் நமக்குப் பிடித்திருக்கிறது/பிடிக்கவில்லை என்பதைத்தாண்டிப் பல விஷயங்கள் உள்ளன. ஒரு படம் இப்படி நாடு முழுதும் வெறித்தனமாக மார்க்கெட்டிங் செய்யப்படும்போது, கிட்டத்தட்ட எல்லாத் திரைப்பட ரசிகர்களின் பின்னங்கழுத்தையும் பிடித்துத்தள்ளி, இப்படத்தைப் பார்க்கச் செய்யும் அளவு விளம்பரங்கள்
ஒவ்வொரு மணி நேரமும் வந்துகொண்டே இருக்கும்போது, ஒரு திரைப்பட ரசிகனாக நமது வேலை, அவற்றுக்கெல்லாம் மயங்கி, கண்மூடித்தனமாக இதுபோன்ற படங்களைப் பார்ப்பது அல்ல. ஒரு திரைப்படம் என்ற வகையில், கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை உட்பட்ட எல்லா அம்சங்களிலும் இப்படம் நம்மைத் திருப்தி செய்கிறதா என்பதைப் பிற படங்களைப் பார்த்து முடிவுசெய்வதுபோலவே இப்படத்தையும் பார்ப்பதுதான் நம் வேலையாக இருக்கவேண்டும். அப்படித்தான் எல்லாப் படங்களையும் பார்க்கவேண்டும் என்பது என் கருத்து. நான் அப்படித்தான் பார்க்கிறேன். எந்த ஹைப்பும் என்னை பாதிக்க முடியாது. எனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதன் காரணங்களை முழுதாக எழுதுவதே என் இயல்பு.
பாஹுபலியின் முதல் காட்சியே, இப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரியப்படுத்திவிட்டது. ரசனையில் நமக்கும் ஆந்திராவுக்கும் சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன அல்லவா? ஹீரோவைக் கடவுள் ரேஞ்சில் வைத்து வழிபடுவது போன்ற சில ஒற்றுமைகள் இருந்தாலும், தரைரேட் விட்டலாச்சார்யா படம் ஒன்றை நம்மால் இன்றைய காலகட்டத்தில் முழுதுமாக ரசித்தல் இயலாத காரியம். காரணம், தமிழ்ப்படங்கள் இதுபோன்ற மொக்கைகளில் இருந்து விடுபட்டு, தரமான படங்களை ஏற்கெனவே கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஒரு விட்டலாச்சார்யா படத்தின் தரத்தில் ஒரு படத்தை எடுத்து, ‘இதுதான் இந்தியாவின் பிரம்மாண்டம்’ என்று அனைவரின் மீதும் திணித்தால் அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? தண்ணீருக்குள்ளேயே தன்னிஷ்டத்துக்கு நடக்கிறாள் ஒரு அம்மணி. அவள் உயர்த்தப்பட்ட கையில் ஒரு குழந்தை. பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய அருவியோ, ஸிஜி என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படியாக, துளிக்கூட ஒன்ற முடியாத ஒரு காட்சியோடுதான் பாஹுபலி துவங்குகிறது. இந்தக் காட்சியைப் பார்த்தாலே, படத்தில் பின்னால் என்னவெல்லாம் வரப்போகிறது, படத்தின் மேக்கிங் எப்படி இருக்கப்போகிறது என்பதெல்லாம் தெளிவாகவே புரிந்துவிடும்.
இந்தக் குழந்தை யார்? அது எப்படி வளர்க்கப்படுகிறது? இதெல்லாம் படம் துவங்குமுன்னரே நமக்குத் தெரிந்த சங்கதிகளே. எனவே, இந்தக் காட்சிகளை அட்லீஸ்ட் கொஞ்சமாவது சுவாரஸ்யமாகவோ வித்தியாசமாகவோ எழுதியிருப்பார்கள் என்று நினைத்தால், பட்ட காலிலேயே மறுபடி மறுபடி மடேல் மடேலென்று அடிக்கிறார் ராஜமௌலி.
படத்தின் கதை நடக்கும் நிலப்பரப்பு எத்தகையது? அந்த நிலப்பரப்பை எப்படிக் கற்பனை செய்துகொள்வது? மிகப்பெரிய அருவி. மேலே ஒரு நாடு. கீழே சில காட்டு மக்கள். அங்கே லோக்கல் ஹல்க்காக வளர்கிறார் ஹீரோ. இதுதான் நிலப்பரப்பின் பின்னணி. அந்த நிலத்தில் திடீரென்று பனி பெய்கிறது. இந்தப் பனிக்கு சம்மந்தமே இல்லாமல் வசந்தம். இறுதிக்காட்சியின் போர்க்களம் நிகழும் இடமே அதுவரை வரவில்லை. இப்படி, தானும் குழம்பி, நம்மையும் குழப்பியுள்ளனர்.  கொஞ்சம் தள்ளி, ஹீரோயின் ஒரு பெரிய ரகசிய கும்பலுடன் புரட்சிக்காரியாக இருக்கிறார். அதுகூட எப்படி ஹீரோவுக்குத் தெரிகிறது என்றால், திடீரென ஒரு முகமூடி அவருக்குக் கிடைப்பதால்தான். அந்த முகமூடியின் பின்னணியைத் தேடிச் செல்லும் ஹீரோவுக்கு, அந்த முகமூடி இந்தப் புரட்சிக்கார கும்பலுடையது என்று தெரிகிறது.
அந்த மிகப்பெரிய அருவியின் உச்சியில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடிவுசெய்கிறார் ஹீரோ. Dark Knight Rises படத்தில் இந்தியாவில் ஒரு பாதாள சிறைக்குள் சிக்கிக்கொண்ட ப்ரூஸ் வேய்ன், கீழிருந்து மேலே வரப் போராடுவார் இல்லையா? அதுதான் இந்தப் படத்திலும் அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதிலாவது கிணறு. இதிலோ பிரம்மாண்ட அருவி. ஆனால் அதில் ப்ரூஸ் வேய்ன் கஷ்டப்பட்டதைக் கூட இதில் பிரபாஸ் செய்வதில்லை. அவர் பாட்டுக்கு சிம்பன்ஸி போல தாவித்தாவி அருவியைத் தாண்டிவிடுகிறார். அப்பட்டமான, கொடூரமான தெலுங்குப்படத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் உறுதிப்பட்டது இந்தக் காட்சியில்தான்.
புரட்சிக்காரியை சந்திக்கிறார் ஹீரோ. அவளுக்கு ஒரு நோக்கம் உள்ளது. உடனேயே இருவருக்கும் காதல். டகாலென்று காட்சிகள் மாறி, Game of Thrones சீரீஸில் மூன்றாவது சீஸனில் ஜான் ஸ்னோ யிக்ரிட்டை சுவற்றுக்கு வெளியே சென்று சந்திப்பான் இல்லையா? அந்தக் காட்சிகள் ஓடுகின்றன. தமன்னாவின் உடைகள் வேறு அப்படியே யிக்ரிட்டை நினைவுபடுத்தவும் செய்கின்றன. இந்த ஜான் ஸ்னோ-யிக்ரிட் சந்திப்பு முடிந்ததும், ஹீரோ அருவியின் மேல் இருக்கும் நாட்டுக்கு மாறுவேடத்தில் செல்கிறார். அங்கு செல்லும் ஹீரோ சும்மா இருக்காமல், அமெரிக்க சுதந்திரதேவியின் சிலை சைஸில் இருக்கும் ஒரு சிலையை சும்மா ஜாலியாகத் தூக்கி, ஹல்க்கின் மார்க்கெட்டைக் காலி செய்கிறார். உடனடியாக மக்கள் அனைவரும் ஆர்கஸம் அடைந்து ஓலமிட, கொடுங்கோல் மன்னன் ஹீரோவைப் பார்த்துக் கடுப்பாகிறான். அவனிடம் இருக்கும் ஒரு அம்மணியைக் காப்பாற்றுகிறார் ஹீரோ. அவனைத் தடுக்க வருகிறார் கட்டப்பா (சத்யராஜ்). ஆனால் ஹீரோவின் முகத்தைப் பார்த்ததும், படுபயங்கர செண்ட்டிமெண்ட் இசை முழங்க, அவனது காலைத் தூக்கித் தனது (மொட்டை)த்தலையில் வைத்துக்கொள்கிறார். அந்த சீனில் உள்ள அனைவரும் மறுபடி ஆர்கசத்தில் ஓலமிடுகின்றனர். விட்டலாச்சார்யா காலத்துப் பின்னணி இசை நம் காதைப் பதம் பார்க்கிறது.
இந்த இடத்தில் அமரேந்திர பாஹுபலி யார் என்று கிட்டப்பா..ச்சே.. கட்டப்பா விளக்குகிறார். ப்ளாஷ்பேக் துவக்கம். அதுவும் புதிதான ப்ளாஷ்பேக் இல்லை. அதே மஹாபாரதக்கதைதான். பாண்டுவுக்கும் திருதிராஷ்ட்ரனுக்கும் இடையே நிலவிய பிரச்னை. பாண்டுவுக்கு ஒரே மகன். அமரேந்திர பாஹுபலி. திருதிராஷ்ட்ரனுக்கு ஒரு மகன். பல்லாள (பல்வாள்) தேவன். தாயாக ரம்யா கிருஷ்ணன்.
இந்த ப்ளாஷ்பேக்கை அப்படியே முடித்துவிட்டால் படமே முடிந்துவிடுமே? எனவே வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்ட ஒரு போர்க்காட்சி. இந்தப் போர்க்காட்சிக்கு ஒரு காரணமே இல்லை. உதாரணமாக, த டூ டவர்ஸ் படத்திலோ அல்லது ரிடர்ன் ஆஃப் த கிங் படத்திலோ இறுதியில் வரும் போர்க்களக் காட்சிகளுக்குப் படங்களின் துவக்கத்தில் இருந்தே அருமையான பில்டப்கள் இருக்கும். ஆடியன்ஸை சிறுகச்சிறுக அப்போர்க்களங்களுக்குத் தயார்படுத்தும் முயற்சி இது. இதனால் அப்போர்கள் செயற்கையாக இரல்லாமல் மிகவும் இயல்பாகக் கதையோடு பொருந்தும். ஆனால் இது அக்மார்க் தெலுங்குப் படமாயிற்றே? அதிலெல்லாம் எங்க்கே லாஜிக் இருக்கும்? திடீரென இந்தப் போர்க்காட்சிக்கு ஓரிரு வசனங்களின் மூலமே காரணம் சொல்லப்பட்டுப் போரும் துவங்கிவிடுகிறது. இந்தப் போர்க்களத்தில் வரும் எதிரிகளோ கதையில் இல்லவே இல்லாத ஆட்கள். இந்தப் போர்க்களத்துக்காகவே உருவாக்கப்பட்ட செயற்கையான கும்பல்.
இதுதான் பாஹுபலி in a nutshell.
இதுவரை நான் எழுதியதைப் படித்தாலே பாஹுபலியின் பிரச்னைகள் என்னென்ன என்பது தெரிந்துவிடும். ஒரு துளிக்கூட ‘கதை’ என்னும் வஸ்துவே இல்லாத படம் இது. கதை இல்லாததால், இஷ்டத்துக்கு அலைபாய்கின்றன இதன் காட்சிகள். ஆடியன்ஸை நம்பவைக்கவேண்டும் என்ற முனைப்பு சிறிதும் இல்லாமல், கண்டபடி கொடூரமான கற்பனை வறட்சியில் எழுதப்பட்ட காட்சிகள் படம் முழுக்க இருக்கின்றன. ‘பிரம்மாண்டம்’ என்பது மட்டுமே இப்படத்தைக் காப்பாற்றிவிடும் என்பதுதான் ராஜமௌலியின் எண்ணம் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் சம்மந்தா சம்மந்தமில்லாத, மிகவும் ஆவரேஜான காட்சிகள் படம் முழுக்கவே இருந்தால் எப்படி? இரண்டாம் பாதியில் வரும் போர்க்காட்சிகளில் சற்றே பரவாயில்லாத ஸிஜி காட்சிகள் இருக்கின்றனதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவை இப்படம் விளம்பரப்படுத்தப்படுவதுபோல் ‘மிகச்சிறந்த’, ‘Groundbraking’ என்ற வார்த்தைகளுக்கெல்லாம் சற்றுக்கூட தகுதி இல்லாதவை. ‘தெலுங்குப்படங்களின் தரத்துக்கு இவை பரவாயில்லை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படங்களின் செய்நேர்த்திக்கு அருகேகூட பாஹுபலி வர முடியாது என்பதே உண்மை.
பாஹுபலியின் அதே genreல் எடுக்கப்பட்ட பல ஹாலிவுட் படங்களைக் கவனித்தாலே போதும் – ஒரு கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்படவேண்டும்? அது இடம்பெறும் காட்சிகள் எவ்வளவு தரமாக இருக்கவேண்டும்? ஒட்டுமொத்தமான திரைக்கதை மூலம் ஆடியன்ஸின் மனதுக்கு நெருக்கமாக எப்படி சொல்ல வரும் கதையை மாற்றுவது? என்பதெல்லாம் எளிதில் விளங்கிவிடும். அறுபதுகளில் வெளிவந்த நம்மூர் ‘கர்ணன்’ படம் இன்றும் அட்டகாசமாக இருக்கும். காரணம் ஸ்பெஷல் எஃபக்ட்கள் அல்ல. கதையும் திரைக்கதையும்தான். ஆனால் பாஹுபலியில் இவை இரண்டுமே மறக்கப்பட்டு, காட்சிகளில் பிரம்மாண்டம் என்பதுமட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. எத்தனை கோடி பட்ஜெட்டை நம்மாட்களிடம் கொடுத்தாலும், அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம், குத்துப்பாட்டு, டூயட், எரிச்சல் வரவழைக்கும் காதல் காட்சிகள், ரத்தம் காளி சிலையின் மீது தெறிப்பது போன்ற தெலுங்கு செண்டிமெண்ட்கள் இல்லாமல் படம் வராது என்பது பாஹுபலியின்மூலம் புரிந்தது.
பாஹுபலிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் மொழி பற்றியும் சில வார்த்தைகள். நம்மாட்களுக்கு ஒரு புதிய மொழியை உருவாக்குவது அத்தனை எளிது என்ற எண்ணம். டால்கீன் உருவாக்கிய எல்விஷ் மொழியைப் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள சிக்கலான வார்த்தைகள் பற்றியும், அதற்கு எத்தனை காலம் ஆனது என்பது பற்றியும் இவர்கள் கொஞ்சமாவது படிக்கவேண்டும். புதிதாக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ‘தக்கிரி பிக்கிரி’ என்று வார்த்தைகளைப் போட்டு உருவாக்கலாம். ஆனால் அவைகளைப் படத்தில் எப்படி உபயோகிக்கவேண்டும் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாவிட்டால் பாஹுபலியில் வரும் மொழி போலத்தான் ஆகும். சுருக்கமாக, பல ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் அம்சங்களை அவற்றைப்பற்றிய எந்த அறிவும் இல்லாமல் மனம்போனபோக்கில் தெலுங்கு கைமாவாக அளித்துள்ளனர்.
ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஒரு திரைக்கதை எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு நான் ஈ ஒரு மிகச்சிறந்த உதாரணம். எனது திரைக்கதை வகுப்புகளில் நான் ஈயின் சில காட்சிகளை எடுத்துக்கொண்டு விவாதிப்பது என் வழக்கம். இப்படிப்பட்ட ஒரு விறுவிறுப்பான படத்தை இயக்கிய ராஜமௌலியை பாஹுபலி போன்ற ஒரு படத்தை எடுக்கத் தூண்டியது எது? எத்தனை யோசித்தாலும் விளங்கவில்லை. பாஹுபலி ஒரு அக்மார்க் தெலுங்குப்படம் மட்டுமே. அப்படிப்பட்ட படங்களை ரசிக்கும் ஆடியன்ஸுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் மட்டும் வெளியானால் போட்ட பணத்தை எப்படி எடுப்பது? இதனால், ‘மாபெரும் ஸிஜி’, ‘இந்தியா கண்டிராத பிரம்மாண்டம்’ என்றெல்லாம் போலியாக விளம்பரம் செய்யப்பட்டு, இந்திய மக்கள் அனைவரின் தலையிலும் சுமத்தப்பட்டுள்ளது இப்படம். தமிழ் சினிமா பாஹுபலியையெல்லாம் தாண்டி எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாற்பது வருடங்கள் முன்னர் வந்திருக்கவேண்டிய பாஹுபலி போன்ற கொடூரங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வெளியாகி நம் ரசனையைப் பதம் பார்ப்பது ஒரு துன்பியல் நிகழ்வு தவிர வேறில்லை. சத்யராஜ், சில காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன், இதன் production design ஆகியவற்றைத் தவிர பாஹுபலியில் பாராட்டப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பது என் கருத்து. இத்தனை வருட உழைப்பையும் இத்தனை கோடி ரூபாய்களையும் இவ்வளவு பொறுப்பற்றவகையில் வீணடித்ததை நினைத்தால் மனம் வலிக்கிறது.
பி.கு
1. இந்தக் கட்டுரை, தரமான சினிமா வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மார்க்கெட்டிங்கினால் நாடு முழுதும் இருக்கும் திரைரசிகர்களை ஒரு அக்மார்க் தெலுங்குப்படம் பார்க்கவைத்து ஏமாற்றும் கொடுமையை எதிர்த்தே இதை எழுதியிருக்கிறேன். எனக்கும் ராஜமௌலிக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை என்பதை, இக்கட்டுரை படித்துவிட்டு ‘ஹேட்டர்’ என்று எழுதப்போகும் நண்பர்களுக்குப் புரியவைப்பதற்காகவே இந்த டிஸ்க்ளெய்மர்.
2. ‘பாஹுபலி’ எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு இதுபோன்ற சண்டைக்காட்சிகள் மட்டுமே தேவை. கதை வேண்டாம் என்னும் நண்பர்களை நான் எந்த வகையிலும் இன்ஃப்ளுயன்ஸ் செய்யவில்லை. இங்கே நான் எழுதியிருப்பது என் கருத்து மட்டுமே.
3. படத்தில் வரும் காலகேயர்களுக்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் டோத்ராகிகளுக்கும் வேற்றுமையே இல்லை. போலவே, க்ளைமாக்ஸில் நெருப்பின் உதவியால் காலகேயர்களைத் தாக்குவதற்கும், கேம் ஆஃப் த்ரோன்ஸின் இரண்டாம் சீஸனின் இறுதியில் டிரியன் ஸ்டான்னிஸின் படைகளை நெருப்பினால் தாக்குவதற்கும் தொடர்புகள் உண்டு.
4. ‘பாஹுபலி ஒரு tale. இதற்கெல்லாம் திரைக்கதையே தேவையில்லை. இந்த உண்மை கூட எனக்குப் புரியவில்லை’ என்று ஒரு நபர் – சினிமாவுக்குப் போகிறேன் என்பதைக்கூட, ‘வெண்திரையில் பளிச்சிடும் பிம்பக்கோர்வைகள் வரிசையாக சலனமடையும் ஒரு அரங்குக்கு என் கால்களின் உதவியால் சிறுகச்சிறுக நடந்து சென்றேன்’ என்று ஒரு வாக்கியத்தையே ஃபுல் ஸ்டாப் இடாமல் ஒரு முழுப் பக்கத்துக்கு வேண்டுமென்றே வலிந்து வரவழைத்துக்கொண்ட புரியாத ‘இலக்கிய’த்தரத்தில் எழுதும் ‘சினிமா கண்டிராத பேரரிஞர்’ – எழுதியிருப்பதை ஃபேஸ்புக்கில் ஸ்க்ரால் செய்யும்போது கஷ்டப்பட்டு எழுத்துக்கூட்டிப் படித்துப் புரிந்துகொண்டேன் (அவரைப் போன்றவர்களைப் பற்றி எழுதினால் ஆட்டோமேடிக்காக அவர்களின் நடை வந்துவிடுகிறது பாருங்கள்). Tale என்பதன் ஸ்பெல்லிங் கூடத் தெரியாத நபர்களிடம் சினிமா மாட்டிக்கொண்டு முழிப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. என்ன செய்வது? இதுவரை இந்தக் கட்டுரையில் நான் கொடுத்திருக்கும் உதாரணங்களைப் பார்த்தாலே போதும். குறிப்பாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ போன்றவற்றைப் பார்த்தாலே, ஒரு tale என்றால் என்ன என்பது இவர்களைப் போன்றவர்களுக்குப் புரிந்துவிடும். நம் தளத்தைப் படிப்பவர்களுக்கெல்லாம் இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அன்னாருக்கு லார்ட் ஆஃப் த ரிங்ஸ் புரியவில்லை என்றால், அது பற்றி நான் எழுதியிருக்கும் இலவச மின்புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்கலாம். மிக எளிமையான நடையில் அது எழுதப்பட்டிருப்பதால் ஒருவேளை இவர்களைப் போன்றவர்கள் அது புரியாமல் தவிக்கக்கூடும். அது பரவாயில்லை. சுருக்கமாக, பணத்தைப்போட்டு எடுக்கப்படும் எந்தப் படத்துக்கும் திரைக்கதை என்பது அவசியம் தேவை. அது எப்படிப்பட்ட படமாகவும் இருக்கலாம். திரைக்கதையே இல்லாமல் இஷ்டத்துக்குக் காட்சிகளை அமைத்து எடுக்கப்படும் படங்கள், பட்ஜெட்டை எடுத்து வெற்றிகரமான வசூலில் ஜெயித்தாலும் மிக எளிதில் மறக்கப்பட்டு விடும். அதற்குத் தமிழிலேயே பல உதாரணங்கள் உள்ளன (இந்தப் பேரறிஞரை முதலில் ignore செய்யவே விரும்பினேன். காரணம், நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சம்மந்தமே இல்லாமல் நம்மை வம்புக்கு அழைப்பவர்களை ignore செய்வதே என் பாணி. ஆனாலும், இவரது மொக்கையான அறிக்கை எத்தனை தவறானது என்பதைப் புரியவைத்தால்தான் அவருக்கே அது நன்மைகூட பயக்கலாம்; அது அவரது கண்ணோட்டத்தை மாற்றக்கூடும் என்பதால்தான் இந்த விளக்கம். இதைப் படித்துவிட்டு அந்த அறிஞர் ஒரு முழுப்பக்கத்துக்கு ஃபுல் ஸ்டாப் வைக்காமல் பதில் எழுதக்கூடும். ஆனால் என் வேலை முடிந்தது. அவர் இனி எந்தப் பதில் எழுதினாலும் அதை எழுத்துக்கூட்டிப் படிக்கும் பொறுமை எனக்கு இல்லை. செய்யவேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக உள்ளன. இவரிடம் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சம்மந்தமே இல்லாமல் என்னை ஏன் வம்புக்கு இழுக்கவேண்டும் என்பது விளங்கவில்லை

1 கருத்து:

MatureDurai சொன்னது…

“குறிப்பாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ போன்றவற்றைப் பார்த்தாலே, ஒரு tale என்றால் என்ன என்பது இவர்களைப் போன்றவர்களுக்குப் புரிந்துவிடும். நம் தளத்தைப் படிப்பவர்களுக்கெல்லாம் இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அன்னாருக்கு லார்ட் ஆஃப் த ரிங்ஸ் புரியவில்லை என்றால், அது பற்றி நான் எழுதியிருக்கும் இலவச மின்புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்கலாம்.”

நான் படிக்க விரும்புகிறேன்.URL தர இயலுமா ?
நன்றி!