சனி, 9 மே, 2015

பிர்லாவின் காசுதான் காந்தியின் ஊடக தர்மம் ! தலித்துக்களை பிர்லாவின் பணத்தில் ஏமாற்றிய .....

ருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு செல்வோம். அம்பேத்கரின் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முறியடிக்கும் பூனா ஒப்பந்தம் 1932-ல் கையெழுத்தானது. பிறகு காந்தி தலித் மக்களின் அதிருப்தியை, அதை புரிந்து வைத்திருக்கின்ற அம்பேத்கரின் செல்வாக்கைக் குறைக்க ரூம் போட்டு யோசிக்கிறார். இந்த யோசிப்பு ஒரு ஆதிக்க சாதி ஆசார இந்து மனதின் வலிமையிலும், அதை அருளுகின்ற பௌதீக பொருளியல் வர்க்கங்களின் அரவணைப்பிலிருந்தும் உருவாகிறது.
இப்படித்தான் “ஹரிஜன சேவா சங்கமும், ஹரிஜன் பத்திரிகை”யும் உதிக்கின்றன. இங்கே நாம் பார்க்கப் போவது இந்தப் பிரச்சினை குறித்தல்ல. ஊடக அறம் குறித்த காந்தியின் நடைமுறை பரிசோதனை ஒன்றுதான் இங்கு கருப்பொருள்.
ஆங்கிலத்தில் “ஹரிஜன்” பத்திரிகை ஆரம்பிக்க எத்தனை பிரதிகள் அச்சடிப்பது, நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும், ஆசிரியர் குழு வேலைகள் என அனைத்தும் ஒரு பொன்மாலைப் பொழுதில் உற்சாகமாய் யோசிக்கப்பட்டு காந்தியால் வரைவுத் திட்டமாக முன்வைக்கப்படுகிறது.

ஹரிஜன் பத்திரிகை
ஹரிஜன் பத்திரிகை துவங்குவதற்கு உதவி கோரி காந்தி கடிதம் எழுதியது பிர்லாவுக்கு! – காந்தியின் இடப்பக்கத்தில் பிர்லா!
“ஒரு நல்ல பத்திரிகை சுய பலத்தில் நிற்க வேண்டும், அதன் ஆசிரியக் கொள்கை சரியில்லை என்றால் அப்படி ஒரு பத்திரிகையே தேவையில்லை” என்றெல்லாம் ஊடக அறங்களை காந்தி வகுக்கிறார். எப்படியும் 10,000 படிகள் அச்சடிப்பது அவரது இலக்கு.
சரி, இவ்வளவு யோசித்த மகாத்மா அடுத்து சாதாரண ஆத்மாக்களான மக்களிடம் நிதி வசூல் செய்து பத்திரிகை ஆரம்பிப்பார் என்று யோசிக்கிறீர்களா? எனில், நீங்கள் இன்னமும் சாந்தி (சாந்தி விளக்கம் பின்பகுதியில் வருகிறது) போதையில் இருக்கிறீர்கள்.
பத்திரிகையின் பெயர் ஹரிஜன். அதைத் துவங்குவதற்கு உதவி கோரி காந்தி கடிதம் எழுதியது பிர்லாவுக்கு! இந்திய காங்கிரஸ் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் இந்திய தரகு முதலாளித்துவம் அனைத்திற்கும் புரவலர்தான் இந்த கன்சியாம் தாஸ் பிர்லா – ஜி.டி.பிர்லா. மேலும் காந்தி அவர்கள் பிர்லா அவர்களுக்கு ஏதோ காசு கொடு என்று மட்டும் எழுதவில்லை. ஹரிஜன் பத்திரிகை குறித்த முழு விவரங்கள், நோக்கம், திட்டம் அனைத்தையும் முன்வைத்தே அவர் இந்த “பிச்சையை” கேட்கிறார். கடிதம் எழுதிய தேதி 25-01-1933.
ஹரிஜன் பத்திரிகை
பிர்லாவின் ஆசி இருந்ததாலோ என்னமோ பத்திரிகை நல்ல வரவேற்பை பெற்று சந்தாக்கள் வர ஆரம்பித்து விற்பனையும் சிறப்புற நடந்தது.
பிறகென்ன ஜி.டி பிர்லாவின் அருட்கொடையில் காந்திஜி பெருமையுடன் அளித்த ஹரிஜன் பத்திரிகை கோலாகலமாக 11-02-1933-ல் ரிலீஸ் செய்யப்பட்டது. பிர்லாவின் ஆசி இருந்ததாலோ என்னமோ பத்திரிகை நல்ல வரவேற்பை பெற்று சந்தாக்கள் வர ஆரம்பித்து விற்பனையும் சிறப்புற நடந்தது. உடன் காந்தி தனது கனவுத் திட்டத்தை ஏனைய மொழிகளிலும் செயல்படுத்த விரும்புகிறார். முதலில் இந்தி, அப்புறம் குஜராத்தி.
இந்தியில் பத்திரிகையின் பெயர் ஹரிஜன பந்து. இந்திதான் இந்தியாவின் எதிர்கால மொழி என்று நம்பிய காந்தி, ஹரிஜன பந்து தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆங்கிலத்தை விட இது கூடுதலாக வரவேற்பை பெறும் என்று அவர் ‘அதிசய’த்தக்க விதத்தில் கணித்தார்.
இருப்பினும் எல்லா கனவுகளும் கையோடு நனவாகி விடுவதில்லை. கூடுதல் படிகள் அச்சிட வேண்டுமானால் கூடுதல் காகிதம் வேண்டும். காகிதத்திற்கு எங்கே போவது? ஏற்கனவே பிர்லாவிடம் வெயிட்டாக வாங்கியாகி விட்டது. மேலும் அவரிடம் காகித ஆலைகள் (பேப்பர் மில்) ஏதும் அப்போது இருக்கவில்லை.
வங்கத்தில் இருக்கும் டிட்டாகர் காகித ஆலை (TITAGHUR PAPER MILLS CO LIMITED) அவரது கவனத்திற்கு வருகிறது. அந்த மில்லின் மேலாண்மை இயக்குநர் சர். எட்வர்டு பெந்தால் எனும் ஆங்கிலேயருக்கு காந்தி கடிம் எழுதி காகித உதவி கேட்கிறார். பத்திரிகை நடத்த காகித உதவி எனும் லாஜிக் படி இது சரிதான். எனினும் காகித ஆலை எட்வர்டோ இப்படி வெறுமனே காகிதம் கொடுப்பது சரி வராது என்று நினைக்கிறார்.
பத்திரிகை காகிதம்
கூடுதல் படிகள் அச்சிட வேண்டுமானால் கூடுதல் காகிதம் வேண்டும். – TITAGHUR PAPER MILLS-ல் காகிதக்கட்டுகளை இறக்கும் தொழிலாளிகள்
அதே நேரம் காந்தி கேட்ட உதவியை மறுக்கவும் விரும்பவில்லை. “ஐயா, உங்களது பத்திரிகையில் எமது பேப்பர் ஆலைகளுக்கான விளம்பரத்தை பெரிய அளவில் தொடர்ந்து தருகிறேன், அதன் மூலம் வரும் விளம்பரக் கட்டணத்தை வைத்து நீங்கள் போதுமான பேப்பரை வாங்கிக் கொள்ளலாம்” என்று ஒரு டீலை முன்வைக்கிறார்.
காந்தியோ அப்படி விளம்பரம் போடுவதற்கு பதில், “இந்த பத்திரிகை இப்படியான பேப்பர் மில் அன்பளிப்பாய் கொடுத்த காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது என்று கொட்டை எழுத்தில் போடுகிறோம், இதுவே சிறந்த விளம்பரமாக இருக்கும்” என்கிறார். எட்வர்டோ, “நேரடி விளம்பரம்தான் சரிவரும்” என்கிறார். இப்படி இந்த ஒப்பந்தம் பிரச்சினைக்குள்ளாகி நிறைவேறவில்லை.
பிறகு வேறு எதோ புரலவர்களின் கருணையினால் இந்தி “ஹரிஜன்” இதழ் வெள்ளிதோறும் வெளிவர ஆரம்பித்தது. “ஹரிஜன்களின்” நலனுக்காக பல்வேறு பார்ப்பன மற்றும் பனியா தலைவர்கள் அதில் கட்டுரைகள் எழுதினர். பிறகு காந்தி இறந்ததும் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பத்திரிகையும் நின்று போனது.
ஒரு பத்திரிகை என்பது விளம்பரங்களை சாராமல், சந்தாதாரர்களை மட்டும் சார்ந்து சுய பலத்துடன் இயங்க வேண்டுமென்று காந்தி விரும்பினாராம். மேற்கண்ட வரலாற்றுத் தகவலை எழுதிய கிருஷணமூர்த்தி இவ்வாறு புல்லரிக்கிறார். (The Indian press and the freedom struggle, p 97, Nadig Krishnamurthy, Press in India, Suresh k sharma).
காந்தி ஊடக அறம்
ஒரு பத்திரிகை ஆரம்பிக்க பிர்லா, எட்வர்டு போன்ற முதலாளிகளே முதன்மையாக தேவைப்படுவர் என்று நிரூபித்த முதல் சாதனையாளர் திருவாளர் காந்தி அவர்கள்தான். – படத்தில் பிர்லா
இதே நூலில் 1945-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளம்பர முகவர்களின் சங்கம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சங்கம்தான் பத்திரிகை மற்றும் முதலாளிகளின் விளம்பரங்களை இணைத்து ஊடகத் தொழிலை வளர்ப்பதற்கு அஸ்திவாரத்தை போட்டதாம். அது இன்று வளர்ந்து “பெய்ட் நியூஸ், அர்னாப் கோஸ்வாமி டெரர் வாய்ஸ்” வரை வந்து நிற்கிறது.
ஆனாலும் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க பிர்லா, எட்வர்டு போன்ற முதலாளிகளே முதன்மையாக தேவைப்படுவர் என்று நிரூபித்த முதல் சாதனையாளர் திருவாளர் காந்தி அவர்கள்தான். என்றாலும், ஒரு பேப்பர் முதலாளியிடமே சென்று காகிதம் கேட்டு, முதல் பக்கத்தில் “இந்த மில்லின் அன்பளிப்பாக இந்த பத்திரிகை உங்களது கைகளில் தவழ்கிறது” என்று போடுவதற்கும் முன்வந்த காந்திதான் இந்திய ஊடகங்கள் மற்றும் அவற்றின் அறங்களுக்கு முன்னோடி. இன்று கூட இந்த திரைப்படத்தை உங்களுக்கு வழங்குவோர், இந்த வெட்டிப்பேச்சை உங்களுக்கு அளிப்பவர்கள் என்று காந்தியின் மொழியில்தான் கோபிநாத்தோ, சன்.டிவியோ கூறுகிறார்கள்.
arundhati-roy-in-chennai-1
இப்பேற்பட்ட காந்திதான் இந்தியாவின் முதல் என்.ஜி.வோ என்று அருந்ததி ராய் கூறியதுமே பல்வேறு உள்ளொளி ஆத்மாக்கள் சிலிர்த்தன.
இப்பேற்பட்ட காந்திதான் இந்தியாவின் முதல் என்.ஜி.வோ என்று அருந்ததி ராய் கூறியதுமே பல்வேறு உள்ளொளி ஆத்மாக்கள் சிலிர்த்தன. அருந்ததி ராயை வசைபாடிய எழுத்துக்கள் அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து தமிழ் இலக்கியவாதிகள் வரை பெருக்கெடுத்து ஓடின.
காந்திக்கு காசருள் புரிந்த ஜி.டி.பிர்லா சாகும் வரை தலைவராக இருந்து நடத்திய “பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்” (ராஜஸ்தானில் உள்ளது) இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணியான தொழில் நுட்ப கல்வி நிறுவனமாகும். நெகிழ்வான கல்வித் திட்டம், மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, அனைவரும் விடுதியில் சேர வேண்டும் இன்னபிற சங்கதிகளுக்காக தனியார் மய ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடுவர்.
எனினும் இந்தப் பீற்றல்கள் அனைத்தும் ஃபோர்ட் பவுண்டேசன் எனும் அமெரிக்க ஏகாதிபத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் 1964-70 ஆண்டுகளில் வழங்கப்பட்ட உதவியில் நிறைவேறியவை. அதாவது அமெரிக்க எம்.ஐ.டி பல்கலையே பிர்லாவின் கல்வி திட்டம் இதர கொசுறுகளை வடிவமைத்தது. ஆக ஃபோர்ட் பவுண்டேசன், பிர்லா, காந்தி போன்ற ஆளுமைகள் அனைத்தும் எப்போதும் சேர்ந்தே இயங்கியிருக்கின்றன.
பிள்ளை வகுப்பிலிருந்து பி.ஹெச்.டி ஆய்வு வரை இந்தியாவில் அதிகம் படிக்கப்பட்ட, ‘ஆராயப்பட்ட’ ஆன்மா காந்தி மட்டுமே. இந்தத் திணிப்பின் காரணம் ஆளும் வர்க்கத்தின் ஆல்டைம் உதவியாளராக காந்தி திகழ்ந்தார். விதேசி வெள்ளையர் ஆட்சி முதல் சுதேசி கொள்ளையர் காலம் வரை காந்தி மட்டுமே நாட்டு மக்களின் கோபத்தை தணிக்கும் சாந்தியாக பயன்படுத்தப்பட்டார். இப்படிச் சொன்னால் இல்லையில்லை இது சாந்தியில்லை, சவுடலாக்கும் என்று பொது வாழ்க்கையில் ஓய்வு பெற்ற இலக்கிய, தத்துவ இன்னபிற மகான்கள் சாபமிட்டுக் கொண்டே ஓடி வருவார்கள்.
இங்கேயும் அத்தகைய ஒரு சாந்தியை தந்திருக்கிறோம். காந்தியில் கரைந்தவர்கள் என்ன சொல்வார்கள்?
-  இளநம்பி

கருத்துகள் இல்லை: