திங்கள், 4 மே, 2015

தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது.ஆவின் பால் கொள்முதல் குறைப்பு பன்னீர் ஆட்சியின் அவலம்!


தமிழகத்தில், தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை குறைத்ததால், பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்துக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். அத்துடன் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால், பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் ஆவின் நிர்வாகம், உற்பத்தியாளர்களிடம் பாலை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றன. இதனால், தினசரி, 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது. தமிழகத்தில், வடகிழக்கு மழை பொய்த்து, வறட்சி நிலவியதால், பால் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க, பால் உற்பத்தியில் தீவிரம் காட்டினர். ஆவின் நிர்வாகமும், பால் உற்பத்தியை அதிகரிக்க, அதிகாரிகளை களம் இறக்கி விட்டது. கடும் நஷ்டம்: தமிழகத்தில் தற்போது தினமும், 30.20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட, வட மாநிலங்களிலும் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அங்கிருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் பாலின் அளவும் கூடியுள்ளது. இதனால், ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலில், 10 முதல், 18 சதவீதம் வரை குறைப்பு செய்யும் வேலையை துவக்கி உள்ளது.
தினமும், 25.12 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஒன்றியங்கள் மற்றும் ஆவின் நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், பால் உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆவின் நிர்வாகத்தின் போக்கை கண்டித்து, சேலம், நாமக்கல், விழுப்புரம், வேலுார் மாவட்டங்களில், பால் உற்பத்தியாளர்கள், பாலை சாலையில் கொட்டி, போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் கூறியதாவது:
சேலம் ஒன்றியத்தில், முன்னர், 5.52 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, 5.02 லட்சம் லிட்டராக குறைத்து விட்டனர். தமிழகம் முழுவதும், 30.20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. ஆனால், 25.12 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்த, 2014 நவம்பர், 1ம் தேதி, பால் விலை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. எனவே, பால் கொள்முதலை அதிகரித்து காட்ட, உற்பத்தியாளர்கள் தனியாரிடம் வழங்கி வந்த பாலை, அதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக, ஒன்றியங்கள் கொள்முதல் செய்தன.வசதி இல்லை: தென் மாவட்டங்களில் பெய்த மழையால், நடப்பு ஆண்டு பயிர் செழித்து, பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால், பாலை பதப்படுத்தவோ, அதை மாற்று பொருளாக மாற்ற தேவையான வசதியோ ஆவினில் இல்லை.இதனால் அதிகாரிகள், பால் கொள்முதல் அளவை குறைத்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களுக்கு பால் கேன் அனுப்பப்படுவது இல்லை. விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலில், 15 சதவீதம் கொள்முதல் செய்யப்படுவதில்லை. பாலில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் தயாரித்தால், நஷ்டம் ஏற்படவே வாய்ப்பு அதிகம். குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள், பாலை, அப்படியே பதப்படுத்தப்பட்ட திரவ பாலாக மாற்றி, வெளி மாநிலங்களில் விற்பனை செய்கின்றன. தங்கள் மாநில உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளன.தமிழகத்தில், பால் உற்பத்தி, 2010--11ல், 21.40 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது, 30.20 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆனால், பால் விற்பனை அதிகரிக்கப்படவில்லை. பால் கொள்முதலில், ஒரே நிதியாண்டில், ஐந்து லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. விற்பனையில், 12 ஆயிரம் லிட்டர் மட்டுமே அதிகரித்துள்ளது. இதனால், ஆவின் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பிரச்னை தீர, தற்போது உற்பத்தியாகும் பாலை, அப்படியே கொள்முதல் செய்ய வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், பால் பவுடர், திரவ பால் ஆகியவற்றை பள்ளி குழந்தைகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். ஆவின் மறுப்பது ஏன்? தமிழகத்தில், பால் உற்பத்தி அளவு, ஜனவரி முதல் அதிகரித்து வருகிறது. நான்கு மாதமாக, ஆவின் நிர்வாகம் மறுப்பு இன்றி பாலை கொள்முதல் செய்து வந்தது. தற்போது கோடை காலம் என்பதால், பாலை பதப்படுத்த, சேமித்து வைக்க செலவு அதிகரிக்கும். எனவே, நஷ்டத்தை குறைக்க, பால் கொள்முதலை குறைக்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, ஆவின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் முழு கொள்முதலும் நிறுத்தம்: திருச்சி மாவட்டத்தில், 10 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் உள்னனர். இவர்களிடம், 300 கூட்டுறவு சங்கங்கள் மூலம், பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும், 3.60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. திருச்சி ஆவின் நிறுவனத்தில், தினமும், 1.60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, பதப்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதி உள்ளது. பெரம்பலுாரில், 1 லட்சம் லிட்டர்; கரூரில், 50 ஆயிரம் லிட்டர் பாலை விற்பனைக்கு தயார்படுத்த முடியும்.திருச்சி மற்றும் பெரம்பலுார் ஆவின் நிறுவனத்துக்கு, கூடுதலாக பால் வரத்து உள்ளதால், நேற்று முழுமையாக கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக, பால் கூட்டுறவு சங்கங்கள், உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து, பாலை வாங்க மறுத்துள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை, மருங்காபுரி மற்றும் வையம்பட்டி யூனியன்களில், மொத்தம், 94 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மணப்பாறை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் மட்டும் தினமும், 18, 500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், நகர பகுதியில் விற்பனையாகும், 7,500 லிட்டர் பால் மட்டுமே, நேற்று காலை கொள்முதல் செய்யப்பட்டது. மீதமுள்ள, 9,000 லிட்டர் பாலை, உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய மறுத்து விட்டனர். இதனால், நேற்று காலையில் மட்டும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் சேர்த்து, 50 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான பால், உற்பத்தியாளர்களிடமே தேக்கமடைந்தது.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ராமநாதன் கூறியதாவது:பால் வரத்து அதிகரித்துள்ள காரணமாக, ஆவின் கொள்முதலை குறைத்து விட்டதால், தினமும், 1 லட்சம் லிட்டர் வரை, பால் தேக்கமடைகிறது.சில சங்கங்கள், 'பால் கொண்டு வர வேண்டாம்' என்றே உற்பத்தியாளர்களிடம் கூறி விட்டன. இதனால், தினமும் கறக்கும் பாலை என்ன செய்வது, என்று தெரியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். ஆவின் முன் போராட்டம் நடத்துவது, குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.>கொள்முதல் நிறுத்தப்படவில்லை-அடித்து சொல்கிறார் அமைச்சர் :''விவசாயிகளிடம் இருந்து, பால் கொள்முதல் நிறுத்தப்படவில்லை,'' என, பால்வள துறை அமைச்சர் ரமணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த நவம்பர் மாதத்திற்கு முன் வரை, தினமும், 22.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இது, தற்போது, 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு, கொள்முதல் விலை உயர்த்தி கொடுக்கப்பட்டதே, இதற்கு முக்கிய காரணம். அவர்களுக்கு, உடனுக்குடன் பணம் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில், பால் பவுடர் விலை, வெகுவாக குறைந்துள்ளதால், தனியார் பால் நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து, பால் கொள்முதல் அளவு மற்றும் விலையை குறைத்துள்ளன. இதனால், விவசாயிகள், ஆவின் நிறுவனத்திற்கு, அதிகளவில் பால் சப்ளை செய்கின்றனர். எந்த விவசாயிகளிடம் இருந்தும், பால் கொள்முதல் நிறுத்தப்படவில்லை. விவசாயிகளிடம் இருந்து, பாலை பெற்று, தனியார் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்த விற்பனையாளர்கள், தற்போது, விலை குறைவால், ஆவின் நிறுவனத்தின் பக்கம் திரும்புகின்றனர். அவர்களிடம் இருந்து தான், பால் பெறப்படவில்லை. அவர்களிடம் இருந்து பெறப்படும் பால், தரமானதாகவும் இல்லை. ஆவின் நிறுவனத்தில், நாள்தோறும், 35 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. கொள்முதல், 30 லட்சம் லிட்டராக அதிகரித்த சூழலில், கொள்முதலை நிறுத்துவதாக கூறுவது தவறு. கொள்முதல் அதிகரிக்க, அதிகரிக்க, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். ஊழலால் நம்பிக்கை இழப்பு! நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்ததால், தேவைக்கு அதிகமாக பால் கிடைக்கிறது. எனவே தான், சில மாவட்டங்களில், சொசைட்டிகள் பாலை கொள்முதல் செய்யமறுக்கின்றன. ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் டேங்கர் லாரியில், 12 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. இதில், 2,000 லிட்டர் பாலுக்கு பதில், தண்ணீர் கலக்கின்றனர். இதனால், ஆவின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது. ஊழல் நடந்தாலும், உற்பத்தி அதிகரித்தாலும், அது விவசாயிகளை மட்டுமே பாதிக்கிறது.
- கள் இயக்க தலைவர் நல்லசாமி. ''தனியாருக்கு பால் வினியோகம் செய்த விவசாயிகள், அதிக உற்பத்தியால், வேறு வழியின்றி சொசைட்டிக்கு கொண்டு வருகின்றனர். இதனால், கூடுதலாக பால் வருகிறது. பால் வரத்து அதிகரித்தும், பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் ஆவினில் இல்லை. எனவே, வேறு வழியின்றி, 10 சதவீதம் வரை, பால் கொள்முதலை நிறுத்த வாய்மொழி உத்தரவு சொசைட்டிகளுக்கு வந்துள்ளது.தமிழக அரசு, 'விவசாயிகளிடம் இருந்து, 1.50 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும்' என, ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது, 30 லட்சம் லிட்டரை வாங்கவே திணறுகிறது.எனவே, சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு பாலையும் சேர்த்து வழங்குவது மற்றும் விலையை குறைத்து, பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும்.
- தமிழக விவசாயிகள் சங்க அமைப்பு செயலர் லோகுசாமி.

தனியார் பிரச்னை என்ன?

தமிழகத்தில், விலையை எதிர்பார்த்து தனியாருக்கு விவசாயிகள் பாலை வழங்கினர். ஆந்திராவில் இருந்து வரும் தனியார் பால் நிறுவனம், மிக குறைந்த விலைக்கு பாலை விற்பனை செய்வதால், விவசாயிகளிடம் இருந்து வாங்கி கர்நாடகாவிற்கு அனுப்பும் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்தி விட்டன. ரோட்டில் கொட்டுவது சரியா? சாதாரண நாட்டு இன மாடுகளில், 1 லிட்டர் பால் உற்பத்தியாக, குறைந்த பட்சம், நான்கு மணி நேரமும்; உயர்ரக கலப்பின மாடுகளில், இரண்டு மணி நேரமும் ஆகிறது. ஆனால், போராட்டம் என்ற பெயரில், சில நிமிடங்களில் பல லிட்டர் பாலை, ரோடுகளில் கொட்டி விடுகின்றனர். ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, மாடுகளுக்கு தீவனத்திற்கு, 12 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. எனவே, பாலை கீழே கொட்ட வேண்டாம் என, பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கறவை மாடுகளுடன் போராட்டம்: தமிழகத்தில், சில நாட்களாக, 17 பால் கூட்டுறவு ஒன்றியங்களிலும், பால் கொள்முதல் நிறுத்தப்பட்டு வருகிறது. திருச்சியில், 40 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், ஐந்து லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் மறுத்து வருகிறது.ஆவினில், 30 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்த வசதி இருந்தும், 25 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே பதப்படுத்த முடிகிறது. இப்பிரச்னையை, பால் வளத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். பிரச்னையை தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளார். இல்லாவிடில், இந்த மாத கடைசி வாரத்தில், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அதற்கு முன், பால் கொள்முதலுக்கு மறுக்கும் ஒன்றியங்களில், கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்தப்படும்.
- தமிழக பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் முகமது அலி. ரகசிய உத்தரவு : பால் கொள்முதலை குறைக்கும்படி, ஆவின் நிறுவனத்திற்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளிடம் இருந்து, பால் கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன், மதுராந்தகத்தில், விவசாயிகள், 40 கேன் பாலை கீழே ஊற்றி போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும், இந்த நிலை உள்ளது.
செந்தில்வேலன்,
பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர்

பால் கொள்முதலை குறைக்கும்படி, ஆவின் நிறுவனத்திற்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளிடம் இருந்து, பால் கொள்முதல் குறைக்கப்பட்டு உள்ளது. மதுராந்தகத்தில், விவசாயிகள், 40 கேன் பாலை கீழே ஊற்றி போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும், இந்த நிலை உள்ளது
செந்தில்வேலன்
மாநில பொருளாளர்,
பால் உற்பத்தியாளர் சங்கம்

கருத்துகள் இல்லை: