திங்கள், 11 மே, 2015

ஜெயலலிதா வழக்கு இன்று 11:00 மணிக்கு கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு!

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது, இன்று காலை, 11:00 மணிக்கு, கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு அளிக்க உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் வழக்கு என்பதால், இந்த தீர்ப்பு, தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெ.,யின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும், தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்று நாட்டில் நீதித்துறையின் மீது அவநம்பிக்கை நிலவுகிறது . அதை நீருபிக்க கூடிய விதமாகவே தீர்ப்பு அமையும் என்பது பொதுவான  அபிப்பிராயம் ?
 
நாளையுடன்...: இதையடுத்து, ஜெயலலிதா உட்பட நான்கு பேரும், உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமினின் அடிப்படையில், நான்கு பேரும் வெளியில் வந்தனர். இந்த ஜாமின், நாளையுடன் முடிவடைகிறது.சிறப்பு கோர்ட் தீர்ப்பு மீது கேள்வி எழுப்பி, ஜெயலலிதா உட்பட நான்கு பேரும்,
கர்நாடகா ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பாக, 41 நாட்கள் விசாரணையை நிறைவு செய்த, நீதிபதி குமாரசாமி, இன்று காலை, 11:00 மணிக்கு, கர்நாடகா ஐகோர்ட், ஹால் எண் 14ல், தீர்ப்பு வழங்குகிறார். ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் வழக்கு என்பதால், இதன் தீர்ப்பு, தேசிய மற்றும் அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தடை உத்தரவு:
பெங்களூரு போலீஸ் கமிஷனர் ரெட்டி கூறியதாவது: ஜெ.,வுக்கு எதிரான வழக்கில், தீர்ப்பு வெளியாகும் நேரத்தில், எந்தவிதமான அசம்பாவித
சம்பவங்களும் நிகழாமல் தடுக்க, கர்நாடகா ஐகோர்ட்டை சுற்றியுள்ள பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமான வழக்கு என்பதால், கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட்டுக்குள் வரும் ஒவ்வொருவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அடையாள அட்டை இருப்பவர்களும், வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்களும் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்; மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் தயார்: சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ.,க்கு, சிறப்பு கோர்ட் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தால், எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து டில்லியில், ஜெ.,வின் வழக்கறிஞர்கள், தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். ஜெ., மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக ஜாமின் கோரியும்; கர்நாடகா ஐகோர்ட்டில், ஜெ., சரணடைய விலக்கு அளிக்கக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கும், அவரின் வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். மூத்த சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் படி, தெளிவான விவரங்களுடன் மனு தயார் செய்யப்பட்டுள்ளது. ஜெ., தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து முன் ஆஜராகி, 'ஜெ.,வுக்கு இடைக்கால ஜாமின் அளிக்கும்படி, அவசர உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என, வாதிட தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார் விபத்து வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, சமீபத்தில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், சல்மான் கானுக்கு, மும்பை ஐகோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. மனு தாக்கல் செய்யும்போது, இதை சுட்டிக் காட்டவும், ஜெ., தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

வாகனங்கள் கண்காணிப்பு :

*கர்நாடகா ஐகோர்ட் வளாகத்தில் போலீசார், இரவும், பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
*ஐகோர்ட் வளாகத்துக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
*பெங்களூருக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
*தீர்ப்பின் போது, ஜெ., ஆஜராக தேவையில்லை என்ற தகவல் தெரிந்த, அ.தி.மு.க.,வினர் பலர், தங்கள் வருகையை ரத்து செய்துவிட்டனர்.எல்லையில் பாதுகாப்பு 'புஸ்' : ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஆனால், நேற்று மாலை வரை, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்படவில்லை. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களும் வழக்கம் போல் சென்று வந்தன. இதேபோல், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியிலும், நேற்று மாலை வரை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடவில்லை. கர்நாடக ஐகோர்ட்டில், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டி இருக்காது என்பதால், பெங்களூரு செல்லும் அ.தி.மு.க., நிர்வாகிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இதனால், இரு மாநில போலீசாரும், நேற்று மாலை வரை, வாகன சோதனையில் ஈடுபடவில்லை.தினமலர்.com

கருத்துகள் இல்லை: