புதன், 13 மே, 2015

Jeyalalithaaவும் உச்சாநீதிமன்றமும்? பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவன பாதுக்கக்கவேண்டும்?

உச்சநீதிமன்ற அமர்வு
பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்” என்ற பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.
ர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் ஜெயா-சசி கும்பல் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கைத் தமிழக அரசு நியமித்ததை ரத்து செய்யக் கோரி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு (டிவிஷன் பெஞ்ச்) அவ்வழக்கில் நீதி வழங்கப்பட்டதைப் போல ஒரு ஜோடனையைக் காட்டியிருக்கிறதேயொழிய, உண்மையில் அந்த அமர்வு பணம், அதிகாரம், பார்ப்பன சாதி செல்வாக்கு கொண்ட குற்றவாளியான ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்பைத்தான் அளித்திருக்கிறது.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், பிரஃபுல்லா சி. பந்த் மற்றும் தீபக் மிஸ்ரா
“பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி தவறானது. மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசின் இலஞ்ச ஒழிப்பு துறைக்குக் கிடையாது. அந்த அதிகாரம் கர்நாடகா அரசுக்குத்தான் உள்ளது. தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்குரைஞராக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டியிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பவானி சிங்கின் நியமனத்தை ரத்து செய்துள்ள அந்த அமர்வு, தமது தீர்ப்பில் ஐந்து உத்தரவுகளைப் பிறப்பித்து, அதில் ஒன்றாக, “சட்டத்திற்குப் புறம்பாக அவசர அவசரமாக வழக்கை விசாரித்த நீதிபதி, இது ஊழல் தொடர்பான வழக்கு என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது” எனக் கூறியிருக்கிறது.
உச்சநீதி மன்ற நீதிபதி மதன் லோகூர்
மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென உத்தரவிட்ட உச்சநீதி மன்ற நீதிபதி மதன் லோகூர்
“அரசு வழக்குரைஞரும் சட்டப்படி நியமிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் சட்டப்படி நடக்கவில்லை எனக் கூறும் இந்தத் தீர்ப்பின் தர்க்கரீதியான முடிவு, இந்த வழக்கில் வேறொரு அரசு வழக்குரைஞரை, வேறொரு நீதிபதியை நியமித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்” என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும்; இருந்திருக்க முடியும். ஆனால், அந்த அமர்வு பொது அறிவுக்கு எதிரான, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை நடத்தத் தேவையில்லை என்ற முடிவை அறிவிக்கிறது.
உச்சநீதி மன்றத்தில் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இந்த அமர்வுக்கு முன் விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான நீதிபதி மதன் லோகூர், பவானி சிங்கின் நியமனத்தை ரத்து செய்து, இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். “நீதிபதி லோகூரின் முடிவை நாங்கள் ஏற்கவில்லை” என்றும் டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பில் அறிவித்திருக்கிறது.
03-justice-caption-2
சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிலும் பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும் என ஜெயா கும்பல் விரும்பியதற்கு, அவர் குற்றவாளிகள் தரப்புக்கு விலை போனார் என்பது தவிர வேறு காரணம் கிடையாது. குற்றவாளிகள் தரப்பு தமது மேல்முறையீட்டு வழக்கில் தமக்கு எதிராக – அதாவது அரசு வழக்குரைஞராக யார் வாதாட வேண்டும் என்பதைச் சட்டவிரோதமாக நியமித்துக் கொண்டதோடு, இம்மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா அரசை எதிர்வாதியாகச் சேர்க்காமலும் தவிர்த்துள்ளனர்.
தற்பொழுது கர்நாடக அரசால் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா, நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்தில், “இந்த வழக்கை நடத்தியது கர்நாடகா அரசு. எனவே, வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குப் போவது என்றால் எதிர்மனுதாரராக கர்நாடகா அரசைச் சேர்த்து அவர்களது பதிலை வாங்கியிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது” என்றும் சொல்லியிருக்கிறார்.
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளான ஜெயா கும்பல் மேல்முறையீட்டு வழக்கைச் சட்டவிரோதமாகவும் சதித்தனமாகவும் நடத்தி வந்துள்ளது. இதற்கு கர்நாடகா உயர்நீதி மன்றமும் தலையாட்டியிருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ஆனால், உச்சநீதி மன்ற டிவிஷன் பெஞ்சோ, பவானி சிங்கைத் தமிழக அரசு நியமனம் செய்தது சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பதைத் தாண்டி, ஜெயாவின் இந்த கிரிமனல்தனங்களுக்குள் தலையிட மறுத்துவிட்டது.
நீதிபதி குமாரசாமி
சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயா-சசி கும்பல் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி
சிறப்பு நீதிமன்றத்திலும், மேல்முறையீட்டு வழக்கிலும் பவானி சிங் எப்படியெல்லாம் குற்றவாளிகள் தரப்புக்குச் சாதகமாக நடந்துகொண்டார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிகளும், உச்சநீதி மன்ற நீதிபதிகளும் இந்த உண்மையைப் பார்க்க மறுத்து சட்டத்திற்குள் தங்கள் முகத்தைப் புதைத்துக் கொண்டார்கள். வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கக்கூட மறுத்துவிட்டு, பவானி சிங் அரசு வழக்குரைஞராகத் தொடரும் அநீதியை அனுமதித்து வந்தனர். பவானி சிங்கின் நடத்தை குறித்து நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தது, உச்சநீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்.
ஆச்சார்யா தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்தின்படி பார்த்தால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையை மட்டுமல்ல, ஜெயா-சசி கும்பலுக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் பிணையையும் ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, கர்நாடகா அரசின் வாதங்களைக் கேட்டு ஜெயா கும்பலுக்குப் பிணை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு முடிவுகளுமே பொது அறிவுக்கோ, சட்டபூர்வ வாதங்களுக்கோ இடமின்றி, கட்டப் பஞ்சாயத்து முறையிலேயே எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு வழக்கை மறுவிசாரணை செய்யத் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளதற்கு, ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை ஒரு காரணமாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் காட்டியுள்ளனர். உச்சநீதி மன்றத்தின் இந்த அக்கறை முதலைக் கண்ணீரைவிட மோசடியானது. ஏனென்றால், ஜெயா-சசி கும்பல், சொத்துக் குவிப்பு வழக்கில் தாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாகவே, அவ்வழக்கில் விரைந்து தீர்ப்பு வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் வழக்கை இழுத்தடித்தது. இப்பொழுது தண்டனையிலிருந்து விரைந்து தப்பித்து மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் குந்த வேண்டும் என்பதற்காகவே மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்க எத்தனிக்கிறது. இந்த இரண்டு நிலைமையிலும் உச்சநீதி மன்றம் ஜெயாவின் அல்லக்கையாகவே நடந்து வருகிறது.
03-justice-caption-1சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்ட தீர்ப்பில், “இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும்; இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்” என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்திருந்தது, உச்சநீதி மன்றம். ஜெயா கும்பல் இந்த நிபந்தனைகளை மீறி வழக்கை இழுத்தடித்த பல்வேறு சந்தர்ப்பங்களில், அவருக்கு ஆதரவாக பல தீர்ப்புகளை அளித்த உச்சநீதி மன்றம், இதன் மூலம் தான் விதித்த நிபந்தனைகளைத் தானே குப்பையில் வீசியது. சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தண்டிக்கப்பட்ட பிறகு, அவருக்குப் பிணையும் வழங்கி, அவரது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாகச் செயல்பட்டது. இந்த 90 நாள் கெடுவைக் காட்டியே மேல்முறையீட்டு வழக்கில் ஜெயா கும்பல் செய்துள்ள அத்துணை முறைகேடுகளும் பூசி மெழுகப்பட்டன. சட்டவிரோதமான முறையில்தான் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றுள்ளது என்பது நிரூபணமான பிறகும், வழக்கை மறுவிசாரணையின்றி முடித்துக் கொடுக்க கூச்சநாச்சமின்றி ஆலாய்ப் பறக்கிறது. “வழக்கைத் தாமதப்படுத்துவது நீதியை மறுப்பதாகும் என்பது போல வழக்கை அவசர அவசரமாக விசாரித்து முடிக்க உத்தரவிடுவது நீதியைப் புதைப்பதற்குச் சமமானது” என்கிறார், முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு.
“இதுவொரு ஊழல் வழக்கு என்பதை நினைவில் கொண்டு நீதிபதி குமாரசாமி அச்சமின்றியும் ஊசலாட்டமின்றியும் தீர்ப்பு எழுத வேண்டும்” எனத் தமது தீர்ப்பில் அறிவுரை வழங்கியிருக்கும் நீதிபதிகள், ஊழல் குறித்து ஒரு நீண்ட பிரசங்கமே நடத்தியுள்ளனர். ஊருக்கு உபதேசம் செய்துள்ள உச்சநீதி மன்றம் இச்சொத்துக்குவிப்பு வழக்கில் எப்பொழுதுமே அப்படி கறாராக, நேர்மையாக நடந்துகொண்டதில்லை. குற்றவாளி ஜெயா பாப்பாத்தி என்பதாலேயே, தீர்ப்பு என்ற பெயரில் அவரது கிரிமினல் குற்றங்களுக்குப் பரிகாரம் செய்யும் புரோகிதராகத்தான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.
வழக்குரைஞர் பவானிசிங்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா-சசி கும்பலுக்கு விசுவாசமாக நடந்துகொண்ட வழக்குரைஞர் பவானிசிங்.
குறிப்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டதை கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி வகேலா ரத்து செய்ததை எதிர்த்து ஜெயா கும்பல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில், அவர் விரும்பியபடியே பவானி சிங்கின் நியமனத்தை உறுதிப்படுத்தியது, நீதிபதி சௌஹான் அமர்வு. சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட ஜெயாவிற்கு 21 நாட்களில் பிணை வழங்கி அவருக்குப் பரிகாரம் அளித்தார் தலைமை நீதிபதி தத்து. மேல்முறையீட்டு வழக்கில் சட்டவிரோதமாக பவானி சிங் நியமிக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பரிகாரமாக மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை என்ற சலுகை ஜெயா கும்பலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. “மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞர் இல்லாமல் நீதிபதி குமாரசாமியைத் தீர்ப்பெழுத அனுமதிப்பது சட்டப்படியான நடைமுறை கிடையாது” என வாதிடுபவர்களின் வாயை அடைக்கும் விதத்தில், “அதுதான் அன்பழகனையும், கர்நாடகா அரசையும் எழுத்துப்பூர்வமாக வாதத்தை முன்வைக்க அனுமதித்திருக்கிறோமே” என்ற பரிகாரத்தைக் காட்டுகிறது, உச்சநீதி மன்றம்.
ஜெயா, 1991-96-ல் தமிழக முதல்வராக இருந்தபொழுது, தனது வருமானத்தை மீறி முறைகேடான வழிகளின் மூலம் 66 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்துக்களை வாங்கிக் குவித்தார் என்பதுதான் இந்த வழக்கு. ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்படுவதற்கு முன்பும், தண்டிக்கப்பட்ட பிறகும் இந்த வழக்கிலிருந்து விடுபடுவதற்கு நேர்மையான வழிகளைப் பின்பற்றியதேயில்லை. பல்வேறு குறுக்கு வழிகள், முறைகேடுகள், சட்டவிரோதமான நடவடிக்கைகள், குதர்க்கமான வழக்குகள் ஆகியவற்றின் வழியாக இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்க முயன்றார், முயன்று வருகிறார். இதற்காக அவர் செலவழித்த, செலவழித்து வரும் தொகையைக் கணக்கிட்டால், அது இந்த 66 கோடி ரூபாயைவிட நிச்சயம் பல மடங்கு தேறும். இப்படி வழக்கை இழுத்தடிக்கவும், குழிதோண்டிப் புதைக்கவும் கோடிகோடியாகச் செலவழிக்க அவருக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை முன்நிறுத்தினாலே, ஜெயா கும்பல் அடித்திருக்கும் கொள்ளையின் பரிமாணத்தைப் புரிந்துகொண்டுவிடலாம்; அவரைக் குற்றவாளியென்றே தீர்மானித்துவிடலாம்.
03-jaya-cartoonஇந்தச் சட்டவிரோத, குறுக்குவழிகளுக்கு அப்பால் இந்த வழக்கிலிருந்து விடுபட அவர் தெய்வத்தையும், ஜோசியத்தையும் நம்புகிறார். இங்கேயும் இலஞ்சத்தைக் (பணத்தை) கொட்டிதான் தெய்வத்தைத் தன் பக்கம் இழுக்க முயலுகிறது, ஜெயா கும்பல். அவரது ‘வேண்டுதலுக்கு’ தெய்வம் வருகிறதோ இல்லையோ, அவரைக் காக்க தெய்வ ரூபத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் குதித்திருக்கிறார்கள். ஓட்டுக்கட்சிகளும், அரசின் பிற உறுப்புகளும் சீரழிந்து மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம்தான் மக்களின் விடிவெள்ளியாகக் காட்டப்படுகிறது. அப்படியான நம்பகத்தன்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், ஜெயாவைக் காப்பாற்றும் நோக்கில் சொத்துக் குவிப்பு வழக்கில் சுயமுரண்பாடான, மழுப்பலான, சட்டம் – நீதிமன்ற நெறிமுறைகளுக்கு எதிரான தீர்ப்புகளை அளித்து வருகிறது, உச்சநீதி மன்றம்.
இதற்கும் மேலாக, “இலஞ்சம், ஊழல், முறைகேடுகள் மூலமாக சொத்துக்குவித்த வழக்குகளில், குற்றவாளிகளுக்குச் சாதகமாக அவரது சொத்து மதிப்பில் 20 சதவீதம் வரை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான அதிகாரிகள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படாமல் ஏற்கெனவே தப்பித்துள்ளனர்” எனச் சுட்டிக் காட்டுகிறார், முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு. இந்த முன்மாதிரியைப் பயன்படுத்தி, ஜெயாவையும் உச்சநீதி மன்றம் வழக்கிலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுதலை செய்யக்கூடும்.
“பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்” என்கிறது மனுநீதி. சொத்துக்குவிப்பு வழக்கில் இந்தப் பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது என்பதை இவ்வழக்கில் அடுத்தடுத்து அது தரும் தீர்ப்புகளே எடுத்துக்காட்டுகின்றன.
- செல்வம்

‘தத்து இருக்க பயமேன்!’

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து
ஜெயாவின் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து
சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட ஜெயா-சசி கும்பலுக்கு 21-ஆவது நாளிலேயே நிபந்தனையற்ற பிணை அளித்து, சிறையிலிருந்து போயசு தோட்டத்துக்கு அனுப்பி வைத்தது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து அமர்வு. இந்த வழக்கின் எதிர்த்தரப்பான கர்நாடகா அரசின் வாதங்களைக் கேட்காமலும்; ஜெயாவிற்குப் பிணை வழங்க மறுத்த கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகராவின் வாதுரைகளுக்குப் பதிலேதும் சொல்லாமலும் நீதிபதி தத்து தன்னிச்சையாக, கட்டப்பஞ்சாயத்து முறையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குப் பிணை வழங்கினார்.
ஜெயா-சசி கும்பல் பிணை கோரி மட்டும்தான் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், நீதிபதி தத்துவோ அவர்களின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்குமாறு கர்நாடக உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டு, பார்ப்பன ஜெயாவிற்குத் தனிச் சலுகை காட்டினார்.
இந்தப் பிணை, சட்டத்திற்கும் நீதிமன்ற நெறிமுறைகளுக்கும் எதிரானது என ராஜீவ் தவான் உள்ளிட்ட பல மூத்த வழக்குரைஞர்கள் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளனர். மேலும், சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி, ஜெயாவிற்குப் பிணை வழங்குவதற்கு ஏறத்தாழ நூறு கோடி ரூபாய் இலஞ்சப் பணம் கைமாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை நீதிபதி தத்துவிடமே முன்வைத்தார்.
நீதிபதி வகேலா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையில் உள்ள நியமனக் குழுவால் சந்தேகத்திற்கிடமான முறையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்திலிருந்து ஒரிசா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட கர்நாடகத் தலைமை நீதிபதி வகேலா.
இப்படிப்பட்ட விமர்சனங்கள், சந்தேகங்கள் நீதிபதிகள் மீது எழுப்பப்படும்பொழுது அவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து தாமே விலகிக் கொள்வது மரபாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால், தலைமை நீதிபதி தத்துவோ ஜெயா-சசிக்குப் பிணை வழங்கிய பிறகும், அவர்களது பிணை மனுவை முடித்து வைக்காமல், அதனை நீட்டித்து அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவிற்கு வழங்கப்பட்ட பிணை, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது உறுதியானவுடனேயே டெல்லி உயர்நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பிணையில் வந்திருக்கும் ஜெயாவோ போயசு தோட்டத்திலிருந்தபடியே தமிழக அரசை ஆண்டு வருகிறார். இந்த பினாமி ஆட்சி குறித்து அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தும், அவரது பிணையை ரத்து செய்ய மறுத்து வருகிறார், தத்து.
பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் மதன் லோகூர்-பானுமதி அமர்வு 15-04-2015 அன்று தீர்ப்பை வெளியிட இருந்த நேரத்தில், அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக 12-04-2015 ஞாயிறு அன்று கர்நாடக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி வகேலாவை ஒரிசா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது, நீதிபதி தத்து தலைமையில் அமைந்துள்ள நீதிபதிகள் குழு. தேசிய நீதித்துறை நியமன கமிசனுக்கான அறிவிக்கை 13-0402015 அன்று வெளியிடப்படவிருந்த நிலையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்த்த வழக்கை 15-04-2015 அன்று உச்சநீதி மன்றம் விசாரிக்கவிருந்த நிலையில் வகேலா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
மூத்த வழக்குரைஞர் ஆச்சார்யா
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயாவின் சிம்ம சொப்பனமான மூத்த வழக்குரைஞர் ஆச்சார்யா.
சிறப்பு நீதிமன்றத்தில் பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பளித்தவர் நீதிபதி வகேலா. மேலும், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் அரசு வழக்குரைஞராகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டது சட்டப்படி தவறானது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இவை அனைத்தும் அவரது மாறுதல் உள்நோக்கத்துடன், அதாவது ஜெயாவின் மேல்முறையீட்டு வழக்கில் அவர் இடையூறாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செவது தொடர்பான வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்காக உச்சநீதி மன்றத்தில் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் உள்ளன. ஆனால், நீதிபதிகள் லோகூர்-பானுமதி அமர்வு பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே (16-04-2015) இவ்வழக்கை 21-04-2015 அன்று டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறது, உச்ச நீதிமன்றம். அதற்கடுத்த இரண்டாவது நாளில் (18-04-2015) அந்த அமர்விற்கான நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. “முக்கியமான ஒருவரே உச்சநீதி மன்ற பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று நேரடியாக ஏற்பாடுகளைச் செய்தார்” என தி.மு.க. தலைவர் கருணாநிதி சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கியமான நபர் தலைமை நீதிபதி தத்துவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
தலைமை நீதிபதி தத்து, தான் ஓய்வு பெற்றுப் போவதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயாவிற்குச் சாதகமாக முடித்துக் கொடுக்கும் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு இவையெல்லாம் அசைக்க முடியாத ஆதாரங்களாக உள்ளன. அந்த நம்பிக்கையில்தான் ஜெயா-சசி கும்பல் போயசு தோட்டத்து பங்களாவில் பதுங்கிக் கிடக்கிறது.
-குப்பன் வினவு.com

கருத்துகள் இல்லை: