செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

இந்தியா - இலங்கை அணுசக்தி ஒப்பந்தம்! அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஒப்பந்தங்கள்!

தில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த  இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் நரேந்திர மோடி.:
இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமாகவும் மனிதாபிமானத்துடனும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தில்லியில் திங்கள்கிழமை இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவும், பிரதமர் நரேந்திர மோடியும் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் உறுதியளித்தனர்.
எனினும், இந்த விவகாரத்தில் இரு நாட்டு மீனவர்களும் தங்களுக்குள் பேசி பிரச்னைகள் தீர வழிகளைக் கூறினால், அதை முன்னெடுத்துச் செல்ல இரு நாட்டு அரசுகளும் தயாராக உள்ளதாகவும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

இலங்கை அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற பிறகு முதலாவது வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக மைத்ரிபாலா சிறீசேனா இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். இதையொட்டி, தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை காலையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இந்திய முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை சிறீசேனா ஏற்றுக் கொண்டதும் அவரை குடியரசுத்  தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்றார். பின்னர் ராஜ்காட் சென்ற அவர், அங்குள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இரு அரசுகளும் தயார்: அதன் பிறகு, ஹைதராபாத் இல்லத்தில் மைத்ரிபாலா சிறீசேனாவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு நல்லுறவுகள், பாதுகாப்பு, தொழில், வர்த்தகம், கலாசாரம், அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, மைத்ரிபாலா சிறீசேனா கூறியதாவது:
 கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலத்தீவுடன் இந்தியா, இலங்கை சேர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னை இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. இந்த விவகாரத்தை ஆக்கப்பூர்வமாகவும் மனிதாபிமானத்துடனும் அணுகி பிரச்னைக்குத் தீர்வு காண ஒப்புக் கொண்டோம். விரைவில் இரு தரப்பு மீனவர்களும் சந்தித்துப் பேச நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் கூடிப் பேசி வழங்கும் தீர்வை முன்னெடுத்துச் செல்லவும் இரு நாட்டு அரசுகளும் தயாராக உள்ளன என்றார் சிறீசேனா.
அடுத்த மாதம் மோடி பயணம்: இதையடுத்து நரேந்திர மோடி கூறியதாவது:
இலங்கையின் மிகப்பெரிய தொழில், வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. இலங்கையில் அதிக முதலீடுகளைச் செய்யவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது. விரைவில் இரு நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் இலங்கையில் சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைப் போரின் போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவின் நேரடி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் வீட்டுவசதி உள்ளிட்ட திட்டங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருவதற்கு சிறீசேனா திருப்தி தெரிவித்தார்.
தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கபிலவஸ்து புனித நினைவுப் பொருள்கள் இருப்பதால், அங்கு மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான இலங்கை குடிமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான பார்வையாளர் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். இலங்கை வருமாறு எனக்கு அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா விடுத்த அழைப்பை ஏற்று வரும் மார்ச் மாதம் கொழும்பு செல்லத் தீர்மானித்துள்ளேன் என்றார் நரேந்திர மோடி.
இதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா சிங்கள மொழியில் பேசுகையில் "எனது இந்திய வருகை மூலம் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த இரு நாடுகளின்  நல்லுறவு மேலும் வலுப்பெற்றுள்ளது' என்றார்.
அமைச்சர்கள் சந்திப்பு: சிறீசேனாவை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் மரியாதை நிமித்தமாக திங்கள்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை இரவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத்துடன், தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை நண்பகலில் பிகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவுக்கும், மாலையில் திருப்பதி திருமலைக்கும் மைத்ரிபாலா சிறீசேனா செல்கிறார். பின்னர், புதன்கிழமை காலையில் கொச்சி வழியாக அவர் கொழும்பு புறப்படுகிறார்.

இந்தியா - இலங்கை அணுசக்தி ஒப்பந்தம்இந்தியா - இலங்கை இடையே அமைதித் தேவைக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது உள்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் தில்லியில் திங்கள்கிழமை கையெழுத்தாகின.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தான நான்கு ஒப்பந்தங்கள் விவரம் வருமாறு:
அமைதித் தேவைக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு வழங்குதல்; 2015-18 ஆண்டு வரை இந்தியா-இலங்கை இடையே கலை, நூலகம், அருங்காட்சியகம், பழங்கால பொக்கிஷங்கள், தொல்லியல், கைத்தறி, பதிப்பகம், கலாசார ஆவணம் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குதல்; பிகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழக மேம்பாட்டு நடவடிக்கையில் இணைந்து செயல்படுதல்; வேளாண் பொருள்கள் பதப்படுத்துதல், தோட்டக்கலை, விவசாய உபகரணங்கள், வேளாண் பயிற்சிகள், கால்நடைகளைத் தாக்கும் நோய்களைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் இரு நாட்டு கல்வி நிறுவனங்களும், அரசுத் துறைகளும் இணைந்து செயல்படுதல் ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. dinamani.com

கருத்துகள் இல்லை: