வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

Bihar:கொலை மிரட்டல் வந்தது: பதவி விலகிய மாஞ்சி பேட்டி! பீகார் நெருக்கடிக்கு பா.ஜனதா பின்னணியில்?

பாட்னா, பிப். 20– பீகார் முதல் – மந்திரி மாஞ்சி இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். பின்னர் அவர் தனது வீட்டில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது மாஞ்சி கூறியதாவது:–
பீகாரில் என்னை முதல் – மந்திரி ஆக்கியதும் நிதிஷ்குமார் சொல்படி என்னை ஆட்டுவிக்க முயற்சி செய்தார். நான் அவருக்கு உடன்பட வில்லை. இதனால் என்னை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்ததால் என்னை எல்லா வகையிலும் புறக்கணித்தனர்.
சபாநாயகர் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் நிதிஷ்குமார் சொல்படி கேட்டு செயல்பட்டார். எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைப்படி செயல்படவில்லை.
என்னை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களுக்கும் எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய ஒட்டெடுப்புக்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். எனக்கு 140 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. ஆனால் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் மிரட்டலுக்கு ஆளாவார்கள்.
எனவே வேறு வழியன்றி நான் ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசு செய்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று கவர்னர் சட்டசபையை உடனே கலைக்க உத்தரவிட வேண்டும். பீகார் நெருக்கடிக்கு உடனடியாக சட்டசபை தேர்தல் நடத்துவது தான் ஒரே வழி.
இவ்வாறு மாஞ்சி கூறினார்.
மாஞ்சி முடிவு பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறுகையில், ‘‘பா.ஜனதாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது. நாங்கள் எப்போதும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பக்கம் தான் இருப்போம்’’ என்றார்.
உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, ‘‘மாஞ்சி தங்களை இக்கட்டான நிலையில் சிக்க வைத்து விட்டதாகவும், மாஞ்சி ராஜினாமா உள்கட்சி குழப்பம்’’ என்றும் தெரிவித்தனர்.
நிதிஷ்குமார் கூறுகையில், ‘‘பீகார் நெருக்கடிக்கு பா.ஜனதா பின்னணியில் இருப்பது தெரிந்து விட்டது. கவர்னர் முடிவைப் பொறுத்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் maalaimalar.com

கருத்துகள் இல்லை: