சனி, 1 நவம்பர், 2014

இலவசமாக வெங்காயத்தை அறுவடை செய்து எடுத்துகொள்ளுமாறு தேனீ விவசாயிகள் அறிவிப்பு!

தேனி,அக்.31 (டி.என்.எஸ்) தேனி அருகே உள்ளது அரைப்படித்தேவன்பட்டி கிராமம். இங்குள்ள விவசாயிகள் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வெங்காயத்தை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் தொடர்ந்து தேங்கியதன் காரணமாக வெங்காயம் அழுகி வருகிறது. மேலும் கஷ்டப்பட்டு அறுவடை செய்யப்படும் வெங்காயத்திற்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. மார்க்கெட்டில் வியாபாரிகள் 3 ரூபாய்க்கு கேட்கிறார்கள். தரமான வெங்காயமாக இருந்தால் 5 ரூபாய் விலை போகிறது. இதனால் அறுவடை கூலி, ஏற்று இறக்கு கூலி கூட கையில் இருந்துதான் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயிகள் வெங்காயத்தை பொதுமக்கள் வயலுக்கு வந்து இலவசமாக எடுத்து செல்லலாம் என அறிவித்து விட்டனர்.


இதையடுத்து தேனி மற்றும் சுற்று கிராம மக்கள் பலர் அங்குள்ள வயல்களுக்கு சென்று வெங்காயத்தை பறித்து சென்றனர். சில விவசாயிகள் வெங்காயத்தை அறுவடை செய்யாமல் வயலிலேயே உழுது விட்டனர்.

இது குறித்து தேனி உழவர்சந்தை விவசாய அலுவலர் முருகன் கூறியதாவது:

நன்கு காய்ந்த வெங்காயம் உழவர் சந்தையில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மழையில் நனைந்த வெங்காயம் 5 ரூபாய்க்கு மேல் விலை போவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலத்தில் பறிக்கப்படும் வெங்காயத்தை உலர வைக்க போதிய இட வசதி இல்லை. இதனால் சிலர் வெங்காயத்தை இலவசமாக எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர்.

வேறு சிலர் வயலில் உழுது விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழை ஓய்ந்ததும் வெங்காய விலை உயரும் வாய்ப்பு உள்ளது.tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: