சனி, 13 செப்டம்பர், 2014

கல்லூரி மாணவியர் மீது அமிலம் வீச்சு

திருமங்கலம்:மதுரை, திருமங்கலம் காமராஜ் பல்கலை உறுப்புக் கலைக் கல்லூரி மாணவிகள் இருவர் மீது வாலிபர் ஒருவர் 'ஆசிட்' ஊற்றிவிட்டு தப்பினார். 'சைக்கோ' போன்ற தோற்றத்தில் இருந்த அவரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, பேரையூர் சின்னபூலாம்பட்டியை சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா, 17. பி.ஏ., ஆங்கிலம் முதல் ஆண்டு படிக்கிறார். நேற்று மதியம் 1:30 மணிக்கு கல்லூரி முடிந்ததும், வளாகத்தில் சக மாணவியருடன் சாப்பிட்டார். பின், டவுன் பஸ் ஸ்டாண்ட் செல்ல, பெருமாள் கோயில் அருகே குறுகிய சந்தில் தோழிகளுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.எதிரே நடந்து வந்த 35 வயது நபர், மதுபாட்டிலில் இருந்த 'ஆசிட்டை' மீனா மீது ஊற்றினார். அதிர்ச்சி அடைந்த மீனா அலறித்துடிக்க, அவரது தோழி சின்னபூலாம்பட்டி அங்காளஈஸ்வரி, 18, தடுத்த போது, அவர் மீதும் 'ஆசிட்' ஊற்றிவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விஜயேந்திர பிதரி எஸ்.பி., டி.எஸ்.பி., அரசு விசாரிக்கின்றனர்.r /> நமது நிருபரிடம் எஸ்.பி., கூறுகையில், ''பேசும் மனநிலையில் மாணவியர் இல்லை.
அவர்களிடம் விசாரித்த பிறகே முழு விபரம் தெரியவரும். உறவினர்களுக்கு இடையிலான பிரச்னையா அல்லது வேறு பிரச்னையா? என விசாரித்து வருகிறோம். சில 'க்ளூ' கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

பாதிக்கப்பட்ட அங்காளஈஸ்வரி கூறுகையில், ''ஆசிட் ஊற்றியவர் ஜீன்ஸ் பேன்ட், நீலநிற சட்டை அணிந்திருந்தார்; மொட்டை அடித்திருந்தார். 'சைக்கோ' மாதிரி தெரிந்தார். தூரத்தில் அவரை பார்த்தபோது 'குடிகாரர்' என நினைத்தோம்,'' என்றார்.

22 நாளில் மீண்டும் சோகம் '
ஆசிட்' ஊற்றியதால் பாதிக்கப்பட்ட மீனாவின் குடும்பத்தினருக்கு, சில நாட்களுக்குள் ஏற்பட்ட 2வது சோகம் இது. கடந்த 22 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மீனாவின் தந்தை உதய சூரியன் இறந்தார். இதற்குள் மீனா மீது 'ஆசிட்' தாக்குதல் நடந்தது, சின்னபூலாம்பட்டி கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

'யாரோ' போல் வந்தார்; நிதானமாக 'ஆசிட்' ஊற்றினார் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவி பிரியா கதறல்:''யாரோ போல் வந்த நபர், நிதானமாக நின்று ஆசிட் ஊற்றினார்,'' என திருமங்கலத்தில் மதுரை காமராஜ் பல்கலைகழக உறுப்புக் கல்லூரி மாணவி மீனா மீது ஆசிட் ஊற்றியதை நேரில் பார்த்த சக மாணவி பிரியா தெரிவித்தார்.

கை வீசி வந்தார்:
பிரியா (சம்பவத்தை நேரில் பார்த்த சகமாணவி): குறுகிய சந்தில் மீனாவும், அங்காள ஈஸ்வரியும் முன்னே செல்ல, நானும் இன்னும் 2 பேரும் பின்னால் நடந்து வந்தோம். சந்து முனையிலிருந்து பேன்ட் சட்டை அணிந்து வந்த கருப்புநிறமுடைய 35 வயது நபர் கைவீசி நடந்து வந்தார். முன்னே சென்ற மீனா, அங்காளஈஸ்வரி வழிவிட முயன்ற போது, மீனாவின் முன்பாக நின்று ஆசிட்டை எடுத்து முகத்தில் ஊற்றினார். மீனா கதறிய போது மீண்டும் ஆசிட் ஊற்றியதில் தடுக்க முயன்ற அங்காளஈஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கு முன் இவரை நாங்கள் பார்த்ததில்லை. பஸ்சில் வந்ததும் இல்லை.

பத்மாவதி, மாணவி: வழக்கமாக நான் மீனாவுடன் தான் வருவேன். நேற்று வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்ததால், கூடப் போகவில்லை. கல்லூரித் துவங்கி இரண்டு மாதமாகத் தான், மீனா திருமங்கலம் வந்து செல்கிறார். யாரும் கேலி செய்ததாகவும் மீனா எங்களிடம் சொல்லவில்லை.

சார்லஸ், மாணவர்: கல்லூரி மதியம் 1.20 மணிக்கு முடிந்துவிடும். சின்ன பூலாம்பட்டிக்கு மதியம் 2.30 மணிக்குத் தான் பஸ் வரும். அதனால் இந்த மாணவிகள் கல்லூரியிலேயே சாப்பிட்டு நிதானமாக வந்து பஸ் ஏறுவர். சிறிய சந்தில் இருந்து வெளியே வந்தால் பஸ் ஸ்டாப். ஆனால் சந்துப்பகுதியில் மதியநேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால், எங்களுக்கு உடனடியாகத் தெரியவில்லை.



எம்புள்ள பொழைக்கணும்:
மீனாவின் அம்மா முருகேஸ்வரி பேசுகையில், எம்புள்ள படிச்சு என்ன காப்பாத்தும்னு நினைச்சேன். காட்டுவேலை பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு இப்படிச் சொல்றாங்க. எங்களுக்கு யாரும் விரோதியில்ல. யாரும் வம்பு பண்ணதாவும் சொல்லலையே. 'எம்புள்ள பொழைக்கணும்' என்றபடி கதறியழுதார்.பாதிக்கப்பட்ட மாணவிகளை மதுரை கமிஷனர் சஞ்சய் மாத்தூர், ஐ.ஜி., அபய்குமார் சிங், கலெக்டர் சுப்ரமணியன் விசாரித்தனர், ஆறுதல் கூறினர்.

ஐ.ஜி., கூறுகையில், 'அடையாளம் தெரியாத நபர் அமிலம் ஊற்றியதாக மாணவிகள் கூறுகின்றனர். பகல் நேரத்தில் சம்பவம் நடந்ததால், தடயம் கிடைக்க வாய்ப்புள்ளது. சம்பவ இடத்தில் எஸ்.பி., விஜயேந்திர பிதரி விசாரித்து வருகிறார். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,' என்றார்.

கலெக்டர் கூறுகையில்,'உரிய சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருப்பதால், இங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படும். பாதிக்கப்பட்ட மீனாவின் கண்களை பரிசோதித்த கண் டாக்டர்கள், பார்வையில் பிரச்னையில்லை என்பதை உறுதி செய்தனர்,' என்றார்.

டீன் சாந்தகுமார் கூறுகையில்,'மீனாவின் முகத்திலும் இரு கைகள் மற்றும் முதுகுப்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 30 சதவீத அளவுக்கு காயம்பட்டுள்ளது. அங்காளஈஸ்வரிக்கு 15 சதவீதம் வரை காயம் ஏற்பட்டுள்ளது. நன்றாக பேசுகின்றனர்,' என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவி பாண்டீஸ்வரி கூறியதாவது: நானும், பத்மா என்ற மாணவியும் ஆசிட் வீச்சிற்குள்ளான மீனா, அங்காள ஈஸ்வரி பின்னால் நடந்து வந்தோம். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. நாங்கள் அலறினோம். இதனால் எங்கள் மீதும் ஆசிட் ஊற்ற முயற்சித்தான். பொதுமக்கள் கூட, ஓட்டம் பிடித்த அந்த ஆள், சந்தில் புகுந்து அங்கிருந்த டூவீலரில் தப்பிச்சென்றார், என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: