புதன், 12 பிப்ரவரி, 2014

valentine day ஒசூரிலிருந்து 1.80 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு !

மலர்கள் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலூர், அமுதகொண்டப்பள்ளி, கக்கதாசம், தளி, சேவகனாப்பள்ளி, கெலமங்கலம், ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டு ரோஜா மலர்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா மலர் சாகுபடிக்கு உகந்த நிலையில் உள்ளது.
பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களும் ஒசூர் வட்டாரத்தில் ரோஜா மலர் சாகுபடி செய்து, கொய்மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
ஒசூர் பகுதி விவசாயிகள் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரோஜா மலர்களைச் சாகுபடி செய்கின்றனர்.

குறிப்பாக தாஜ்மஹால், ரெட் ஜயன்ட், கஞ்ஜன் ஜங்கா, டெட்ரா வெக்ட்ரா, ரெட் ரோஸ், கார்னேஷன், கார்வென்ட், மிக்ரா போன்ற ரோஜா ரகங்கள் தற்போது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
பசுமைக் குடில் அமைத்து சாகுபடி செய்யப்படுவதால் அதிக வெப்பமும், குளிரும் இல்லாமல் ரோஜா செடிகள் நன்றாக செழித்து வளர்கின்றன.
இந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் பறிக்கப்பட்டு, ஒசூர் அருகே அமுதகொண்டப்பள்ளியில் உள்ள டான்ஃபுளாரா நிறுவனத்தில் உள்ள குளிர்சாதனக் கிடங்குக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவை 7 நாள்கள் வரை வைக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன.
பின்னர், அந்த நிறுவனத்திலேயே 30 செ.மீ. நீளம் தண்டு உள்ள ரோஜா மலர்கள் முதல் 90 செ.மீ. நீளம் தண்டு வரையுள்ள ரோஜா மலர்களை கொய்து, ரகம் பிரித்து, 10 ரோஜாக்களை ஒரு கொத்தாக கட்டி, ஒரு பெட்டியில் வைத்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தப் பெட்டிகளை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாரிகளில் ஏற்றி, பெங்களூருவுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து விமானத்தில் வெளிநாடுகளுக்கு விவசாயிகளே நேரடியாக ஏற்றுமதி செய்கின்றனர்.
இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ள டான்ஃபுளாரா நிறுவன நிர்வாக இயக்குநர் நஜீம் அகமது கூறியது:
வருகிற வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடந்த 10-ஆம் தேதி வரை அறுவடை செய்யப்பட்ட கொய்மலர்களை ஏற்றுமதி செய்துவிட்டோம்.
அவை குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நிகழாண்டு காதலர் தினத்துக்காக 2 கோடி மலர்கள் ஏற்றுமதி செய்ய முன்பதிவு (ஆர்டர்) வந்தது. எங்களால் போதுமான அளவு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை 1.80 கோடி கொய் மலர்களை ஏற்றுமதி செய்துள்ளோம். போதிய அவகாசம் இல்லாததால், எங்களால் 20 லட்சம் கொய் மலர்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. ஆண்டு முழுவதும் ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்தாலும், காதலர் தின கொண்டாட்டத்தின் போது ஒரு கொத்துக்கு ரூ.400 வரை கிடைப்பதால் இந்த வாய்ப்பை ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தி ஏற்றுமதி செய்கிறோம். கடந்த ஆண்டு 1.5 கோடி மலர்கள் ஏற்றுமதி செய்தோம். அடுத்த ஆண்டு இன்னும் கூடுதலாக ஏற்றுமதி செய்ய முன்கூட்டியே திட்டமிடுவோம் என்றார் அவர்.dinamani.com/

கருத்துகள் இல்லை: