வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

சீமாந்திராவுக்கு புதிய தலைநகர்: வரிச்சலுகை ! தெலுங்கானா மசோதாவில் தகவல் !

ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா மாநிலம் அமைக்க வகைசெய்யும் ‘ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு மசோதா’ நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே அதை தாக்கல் செய்தார். மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும். பொது தலைநகரில், தற்போது கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளும் அடங்கும். சீமாந்திரா மாநிலத்துக்கு 45 நாட்களுக்குள் புதிய தலைநகரை தேர்வு செய்ய வல்லுனர் குழுவை மத்திய அரசு அமைக்கும்.


சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆந்திர கவர்னரே கவர்னராக இருப்பார். தலைநகரை நிர்வாகம் செய்வதற்காக, அங்கு வாழும் மக்களின் உயிரையும், உடைமையையும் பாதுகாக்கும் விசேஷ பொறுப்பு கவர்னருக்கு உண்டு.

சீமாந்திராவின் புதிய தலைநகரில் கவர்னர் மாளிகை, ஐகோர்ட்டு, தலைமை செயலகம், சட்டசபை, சட்ட மேலவை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு விசேஷ நிதி உதவி வழங்கும். சீமாந்திரா பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்காக வரிச் சலுகைகள் அளிக்கப்படும்.

இரு மாநிலங்களிலும் தொழில்வளம் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில பிரிவினைக்குப் பிறகு, சீமாந்திரா மாநிலத்துக்கு 25 பாராளுமன்ற தொகுதிகளும், தெலுங்கானா மாநிலத்துக்கு 17 தொகுதிகளும் ஒதுக்கப்படும். சட்டசபை தொகுதிகளைப் பொருத்தவரை, சீமாந்திராவுக்கு 175 தொகுதிகளும், தெலுங்கானாவுக்கு 119 தொகுதிகளும் ஒதுக்கப்படும்.

இரு மாநில மாணவர்களுக்கும் தரமான உயர் கல்வி பெறுவதில் சமவாய்ப்பை அளிப்பதற்காக, அங்கு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் தற்போது பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இக்கால கட்டத்தில், பொதுவான மாணவர் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படும்.

நதிநீர் பிரச்சினை எழாமல் இருப்பதற்காக, கிருஷ்ணா நதி நிர்வாக ஆணையம், கோதாவா நதி நிர்வாக ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை மேற்பார்வையிட உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்படும். அதில், மத்திய நீர்வளத்துறை மந்திரி, சீமாந்திரா முதல்-மந்திரி, தெலுங்கானா முதல்-மந்திரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

போலாவரம் நீர்ப்பாசன திட்டம், தேசிய திட்டமாக அறிவிக்கப்படும். அதை மத்திய அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்.

இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: