ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

சுதந்திரமாக செயல்பட வேண்டிய சி.பி.ஐயை அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது.

டெல்லி, பிப். 9- மத்திய புலனாய்வு துறையை (சி.பி.ஐ.) அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்தும் கலையில் காங்கிரஸ் கட்சி ஆசானாக மாறி விட்டது என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
‘இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் கூட்டாளி அமித் ஷாவின் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகிழ்ச்சியடைந்திருக்கும்’ என சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கூறியதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
அந்த செய்தியை மேற்கோள் காட்டி, பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி காங்கிரஸ் கட்சியை தனது ‘பிளாக்’கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது:-

சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் வாயில் இருந்து தவறி வெளிப்பட்ட வார்த்தையில் இருந்து 2004-ம் ஆண்டு முதல் 2014 வரை கடந்த 10 ஆண்டுகளாக சுதந்திரமாக செயல்பட வேண்டிய சி.பி.ஐ. அமைப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக, ஆளும் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு வந்துள்ளது என்ற உண்மை தற்போது தெளிவாக புரிகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு மக்கள் விடையளித்து வீட்டுக்கு அனுப்பும் நேரத்தில் ரஞ்சித் சின்ஹா வெளியிட்டுள்ள இந்த தகவல், அரசியல் ஆதாயத்துக்காக அரசு இயந்திரத்தை- குறிப்பாக சி.பி.ஐ. போன்ற முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்பை தவறாக பயன்படுத்தும் கலையில் காங்கிரஸ் கட்சி ஆசானாக மாறி விட்டது என்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

சி.பி.ஐ. வசம் ஒப்படைகப்படும் அனைத்து விசாரணைகளிலும் தலையிட்டு, நியாயமான நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு உதவி செய்யும் சி.பி.ஐ. அதிகாரிகளை பணி ஓய்வுக்கு பின்னர் வேறு ஏதாவது கவுரவமான பதவியில் அமர்த்துவதாக ஆசை காட்டி, எதிர்க்கட்சியினருக்கு எதிரான வழக்குகளை ஜோடிக்க செய்து காரியம் சாதித்து கொள்கிறது.
maalaimalar.

கருத்துகள் இல்லை: