புதன், 6 பிப்ரவரி, 2013

புதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை

இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தமிழக அரசு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இன்று புதன் கிழமை(6.2.13) இடைக்காலத்தடை விதித்தது,
தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்காக கட்டப்பட்ட புதிய வளாகம்
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்ததாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார்.
அம்மனு சென்னையில் இயங்கும் தீர்ப்பாயத்தின் தென்னிந்தியப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றத்தினையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதென்ற அஇஅதிமுக அரசின் முடிவில் தலையிடமுடியாதென வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, கடந்த ஜனவரி 30ஆம் நாளன்றுதான் ஓமந்தூரார் வளாகத்தில் நோயாளிகளுக்கு முதற்கட்ட சோதனை நடத்தி அறிவுரை வழங்கும் பிரிவினை அரசு தொடங்கியது.
இந்நிலையில் நேற்று பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வீரமணியின் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எம்.சொக்கலிங்கம் மருத்துவமனையாக மாற்ற வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிக்கெதிரான மனு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது அங்கே மருத்துவமனை தொடங்க அவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்று அரசைக் கடிந்துகொண்டார்.
மேலும் இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை நாளைக்குள் தீர்ப்பாயத்தின் முன் தெரியப்படுத்தவேண்டுமெனவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டிருந்தார்.
தங்கள் மனுவில் அரசு, மருத்துவமனை ஒன்றும் தொடங்கப்படவில்லை, அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனை மட்டுமே அளிக்கப்படுகிறது, ஏழைமக்களின் நலன் கருதி அவ்வாறு செய்யப்படுகிறது, என்று வாதிட்டது.
ஆனால் வீரமணியின் தரப்பில் எதுவாயிருந்தாலும், வழக்கு நிலுவையில் இருக்கையில் அரசின் அத்தகைய நடவடிக்கைகள் தவறுதான் என்று வாதிடப்பட்டது.
நீதிபதி சொக்கலிங்கம் மற்றும் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் வீரமணி தொடுத்துள்ள வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை ஓமந்தூரார் வளாகத்தில் பழைய நிலையே தொடரவேண்டும் என்று உத்திரவிட்டது.
அதே நேரம் நாளை முதல் வழக்கு விசாரணை துவங்கும் எனவும் தீர்ப்பாயம் அறிவித்திருக்கிறது,

bbc.com

கருத்துகள் இல்லை: