பெண்கள் மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது என்று கூறி காஷ்மீரில் மூன்று பள்ளிப் பெண்கள் நடத்தி வந்த “பெண்கள் இசைக்குழு” வுக்கு எதிராகப் பத்வா பிறப்பித்திருக்கிறார் காஷ்மீரின் தலைமை மதகுரு பஷீருத்தீன் அகமது.
ஸ்ரீநகரில் நடந்த ஒரு இசை விழாவில், “ப்ரகாஷ்” (காலை ஒளி) என்ற தங்களது இசைக்குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தினார்கள் இந்தப் பெண்கள். உடனே இணையத்தில் இவர்களைப் பற்றிய கேவலமான விமரிசனங்கள் தொடங்கின.
“இசை இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் வீட்டில் வேண்டுமானால் பாடலாம், மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது” என்று இதற்கு விதவிதமான வியாக்கியானங்கள் தரப்பட்டன.
“இந்த தேவடி…களை டில்லியில் செய்தமாதிரி செய்யணும்” என்பன போன்ற அநாகரிகமான ஏச்சுகள் வரையில் விதவிதமான நச்சு அம்புகள் இணையத்தில் இந்த சிறுமிகளுக்கு எதிராக எய்யப்பட்டன. வளர்ப்பு சரியில்லை என்று இவர்களது பெற்றோரை சிலர் வசை பாடினார்கள்.
“ஆண்களுக்கு எதிரில் இளம்பெண்கள் பர்தா அணியாமல் தோன்றினால், மனித ஆசைகளை கட்டுக்குள் வைக்க முடியுமா?
நீங்கள் இதை சுதந்திரம் என்று சொல்கிறீர்களா?” என்று தொலைக்காட்சியில் கேள்வி எழுப்பினார் காஷ்மீரின் தலைமை மதகுரு.
ஆயிஷா ஆந்த்ரபியின் தலைமையிலான “துக்காதர்ன் ஏ மிலாத்” என்ற இசுலாமிய தீவிரவாத பெண்கள் அமைப்பு, இந்த மாணவிகளை சமூகப்புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தது. இத்தாக்குதல்களைக் கண்டு பீதியடைந்த அந்த மாணவிகள் உடனே தலைமறைவானார்கள்.
ஏனென்றால், இங்கே காதலை மறுத்தால் மூஞ்சியில் ஆசிட் ஊற்றும் காதலர்கள் போல, பர்தாவை மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றி புகழ்பெற்ற அமைப்புதான் ஆந்த்ரபியின் அமைப்பு.
இனிமேல் அந்தப் பெண்கள் அங்கே வாழ்வது கடினம். நோமா நசீர், ஃபரா தீபா, அனீகா கலீத் என்ற இந்த மூன்று பத்தாம் வகுப்பு மாணவிகளும் இசைக்குழுவைக் கலைத்துவிட்டதாக நேற்று இணையத்தில் அறிவித்துவிட்டார்களாம்.
முதல்வர் பரூக் அப்துல்லாவும், பிடிபி தலைவரை மகபூபா மப்தியும் இப்பெண்களின் உரிமை பறிக்கப் படுவதை ஒப்புக்கு கண்டித்திருக்கின்றனர். வீட்டில் கேபிள் டிவியில் எல்லா கேவலமான சானல்களையும் பார்த்துக் கொண்டு, இந்த பள்ளிப் பெண்களின் உரிமையைப் பறிப்பதா என்று ஒரே ஒரு பேராசிரியை மட்டும் மதவெறியர்களின் முரண்பாட்டை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்து பத்வா பிறப்பிக்கப் பட்டிருப்பதற்கு எதிராக அங்கே ஒரு கிரிமினல் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. அறிவுத்துறையினரோ வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்.
ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.
“மலாலா படித்தாள் என்பதற்காக அவளைச் சுடவில்லை. அவள் மதச்சார்பின்மையைப் பிரச்சாரம் செய்தாள். அதனால்தான் சுட்டோம். அதுவும் கூட எங்கள் விருப்பம் அல்ல. இஸ்லாம் எங்களுக்கு விதித்திருக்கும் கடமை” என்று மலாலாவைச் சுட்ட தலிபான் அமைப்பினர் குர் ஆனிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
பாடலாமா கூடாதா, படிக்கலாமா கூடாதா, எப்படி உட்கார வேண்டும், எப்படி எழுந்திருக்கவேண்டும் என்று மனிதர்களுக்கு உத்தரவிடும் சாட்டைக்குச்சியாகவே மதத்தை சித்தரிக்கிறார்கள் இந்து, இசுலாமிய மதவாதிகள். மனுதருமம் என்பது திரிசூலம் என்றால், ஷரியத் என்பது வாள். நாம் மதிப்பளிக்க வேண்டியது மக்களின் இறைநம்பிக்கைக்குத் தானேயொழிய மதச்சட்டங்களுக்கு அல்ல.
பார்ப்பன மதத்துக்கு எதிரான சித்தர் மரபைப் போல, கடுங்கோட்பாட்டு இசுலாமுக்கு இணையான சுஃபி மரபொன்று இசுலாத்தில் இருக்கிறது. சுஃபி இசுலாம் மரபு, இசையுடன் இணைந்தது. அதுதான் உலகமுழுதும் உள்ள இசுலாமிய மக்களின் இறை நம்பிக்கையுடன் கலந்திருப்பது. முக்கியமாக காஷ்மீரில் செல்வாக்கு செலுத்தியது சுஃபி மரபு என்பதனால்தான், இத்தனை ஆண்டுகளாக இசுலாமிய தீவிரவாத இயக்கங்களின் கடுமையான முயற்சிக்குப் பின்னரும் அங்கே பர்தாவைத் திணிக்க முடியவில்லை.
இந்த மரபை ஒழிப்பதுதான் வகாபி இசுலாமிய தீவிரவாதிகளின் நோக்கம்; மலாலாவை சுட்ட தலிபான்களின் நோக்கம். தமிழகத்தின் டி.என்.டி.ஜே உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகளின் நோக்கம்.
காஷ்மீர் பெண்கள் ஸ்ரீநகரில் பாடிய பல பாடல்கள், சுஃபி ஞானி புல்லே ஷாவின் பாடல்கள் என்கிறார் அந்த இசைக்குழுவின் இயக்குநர் அத்நான் மாட்டூ.
“மசூதியை இடி, கோவிலை இடி, எதை வேண்டுமானாலும் இடி,
ஆனால் மனித இதயத்தை இடித்துவிடாதே,
அங்கேதான் இறைவன் குடியிருக்கிறான்”
என்று பாடியவர் பாபா புல்லே ஷா.
சுஃபி ஞானிகளின் பாடல்களுக்கும் தமிழகத்தின் சித்தர் பாடல்களுக்கும் இடையிலான ஒற்றுமை அதிசயிக்கத்தக்கது.
“நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”
என்று பாடிய சித்தர் மரபையும் பாபா புல்லே ஷாவின் இந்தப் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மத உணர்வுக்கும் மதவெறிக்கும் இடையிலான வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இதோ, பாகிஸ்தானின் புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகி அபிதா பர்வீன், பாபா புல்லே ஷாவின் பாடலைப் பாடுகிறார்.
O beloved one:
If God were to be found by bathing and washing,
then God would be found by fish and frogs.
If God were to be found by roaming in jungle,
then God would be found by cows and buffaloes.
O Mian Bulleh
God is found by hearts righteous and pure.
You have read a thousand books
but have you read your ‘self’?
You rush to mosques and temples
in indecent haste,
have you tried to enter your ‘self’?
You are engaged in
needless battle with Shaitan
have you ever fought with your ‘nafs’?
You have reached the sky
But have failed to reach
what’s in your heart!
Come to my abode, My friend
morning, noon and night!
Destroy the mosque,
destroy the temple
do as you please;
do not break the human heart
for God dwells therein!
I search for You in jungle and wilderness
I have searched far and wide.
Do not torment me thus My Love
morning, noon and night!
Come to my abode, My Love
morning, noon and night!
தங்கள் இறை நம்பிக்கைக்கு எந்த மரபை வரித்துக் கொள்வது என்பதை இசுலாமிய மக்கள் முடிவு செய்யவேண்டும். “மத உணர்வு” என்று எதை அங்கீகரிப்பது என்பதனை மதச்சார்பற்றவர்களும் விளங்கிக் கொள்ளவேண்டும்.