செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

அரசியல்வாதிகள் பாலியல் குற்றம்; விசாரிக்க முடியாது!; சிதம்பரம்

 ராணுவத்துக்கு, ராணுவ கோர்ட் இருக்கு, ஆனா பொலிசாருக்கு சக பொலிசார் கேசே பதிய மாட்டாங்களே? அது எங்க போயி சொல்வீங்க?
"பாலியல் வன்முறைகளுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டுள்ள அவசர சட்டம், முடிவானது அல்ல; ஒரு துவக்கமே. நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் அனைத்தும், அவசர சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றாலும், எந்த ஒரு பரிந்துரையும் நிராகரிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, விரைவு கோர்ட் அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில், கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பாலியல் வன்முறைகளை தடுக்க, மத்திய அரசு, நேற்று முன்தினம் அவசர சட்டம் ஒன்றை அமல்படுத்தியது.< இந்த அவசர சட்டம் பற்றி, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று கூறியதாவது: 


கருத்தொற்றுமை : பாலியல் குற்றங்களை தடுக்க, புதிதாக அவசர சட்டம் அமலாகியுள்ளது. இந்த அவசர சட்டம், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். இந்தச் சட்டத்தை, மத்திய அரசு தயாரித்த போது, இன்னென்ன அம்சங்கள், சட்டத்தில் இடம் பெற வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்தனர். அதில், சில அம்சங்களில் கருத்தொற்றுமை காணப்பட்டது; மற்ற சில அம்சங்களில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அனைத்தையும், அரசு கவனத்தில் கொண்டு, அதனடிப்படையில், அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கருத்தொற்றுமை உள்ள அம்சங்கள் எல்லாம், சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம், பாலியல் குற்றங்களுக்கு எதிரான, ஒரு துவக்கமே; இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம், அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கருத்தொற்றுமை இல்லாத அம்சங்களிலும், ஒரு முடிவு காண, முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இந்த அவசர சட்டம் ஒப்புதலுக்காக, பார்லிமென்டில் தாக்கலாகும் போது, விவாதம் நடைபெறும்; அப்போது, எம்.பி.,க்கள் பலரும், தங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவிப்பர். அவற்றையும் பரிசீலித்து, அவற்றிலுள்ள நன்மை தரும் அம்சங்கள், சட்டத்தில் சேர்க்கப்படும். அத்துடன், அனைத்து அரசியல் கட்சிகளிடமும், யோசனை கேட்கப்பட்டு, அவையும், சட்டத்தில் இணைக்கப்படும்.

பாலியல் வன்முறைக்கு எதிரான, முந்தைய சட்டங்களின் முக்கிய அம்சங்களும், புதிய சட்டத்தில் சேர்க்கப்படும்.பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் சிறாராக இருந்தால், அவர்களுக்கு தண்டனை வழங்குவதில், வயது ஒரு பிரச்னையாக உள்ளது. தற்போது சிறாருக்கான வயது வரம்பு, 18 ஆக உள்ளது. இதை, 16 ஆக குறைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில், குறைக்க கூடாது என்றும் சில தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.எனவே, இந்த வயது வரம்பு விஷயத்தில், அரசு அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்க முடியாது. அதனால், இது தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சிகளில், மத்திய உள்துறை அமைச்சகமும், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளன.

ராணுவத்தினர் - போலீசார் : பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க, அரசு தயக்கம் காட்டுவதாக கருத வேண்டாம். இந்த குற்றங்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும், தண்டனை அளிக்க, அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து, ராணுவ அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் தீவிரமாக கலந்து ஆலோசித்து வருகின்றன; விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும்.அரசியல்வாதிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, தனியாக விரைவு கோர்ட் அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.-நமது டில்லி நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை: