செவ்வாய், 24 ஜனவரி, 2012

இந்திராவுக்கு உருவான நெருக்கடி, இந்தியாவுக்கான நெருக்கடியாக மாறிப்போனது!



ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் தொடரவேண்டும்! அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தென்னகம் இதழில் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
இன்னொரு பக்கம் தமிழகத்துக்கு வரும் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதற்கு ஒத்தாசையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது.
முதல் விஷயம், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியம். இரண்டாவது விஷயம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை. இரண்டையும் சமாளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் கருணாநிதி. ஆம், தமிழகம் வரும் ஜெ.பிக்கு திமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு தரப்படும். அதேசமயம், நாடு தழுவிய அளவில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நடத்திவரும் ஜெ.பி. தமிழகத்தில் ஏதேனும் சுட்டிக்காட்டுவாரானால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தார்.

திட்டமிட்டபடி 5 மே 1975 அன்று ராஜாஜி நினைவாலயத் திறப்புவிழாவுக்கு வந்தார் ஜெ.பி. ஆனால், அன்றைய தினம் இந்திரா காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை மிஞ்சும் அளவுக்கு திமுக கொடிகளுடன் தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஜெ.பிக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டவந்த இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்தனர்.
விஷயம் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், ‘கருணாநிதி எங்கு சென்றாலும் அதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டத் தீர்மானித்துள்ளனர். அதற்கு நானும் அனுமதி கொடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் நானும் தோழமைக் கட்சியினரும் மற்றவர்களும் ஊர்வலமாகச் சென்று கோபாலபுரத்தில் நுழைய ஆரம்பித்தால் என்ன ஆகும்?’ என்று கேள்வி எழுப்பினார். அதன் எதிரொலி சில நாள்களுக்குப் பிறகு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் நடந்த மோதல்களில் கேட்டது.
அதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இப்போது ராஜாஜி நினைவாலயத்துக்கு வந்துவிடலாம். திமுகவின் கறுப்பு சிவப்பு கொடிகளுக்கும் இந்திரா காங்கிரஸாரின் கறுப்புக்கொடிகளுக்கும் மத்தியில் விழாவில் கலந்து கொண்டார் ஜெ.பி. அப்போது ராஜாஜியின் சிலையை மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன் திறந்துவைத்தார். நினைவாலயத்தை திறந்துவைத்துப் பேசினார் ஜெ.பி.
ஜெ.பி வருவதற்கு முன்புதான் மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தியிருந்தார் கருணாநிதி. குதிரைப் பந்தயத்தையும் ஒழித்திருந்தார். அவற்றுக்கு மேடையில் பாராட்டு தெரிவித்தார் ஜெ.பி. குஜராத் மாநிலத்தில் மது கிடையாது; குதிரைப்பந்தயம் கிடையாது; லாட்டரி சீட்டும் கிடையாது; அதைப்போலவே தமிழகத்திலும் லாட்டரி சீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அண்ணா ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டுத் திட்டம் என்ற பெயரில் லாட்டரி சீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
ஏழைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கக்கூடிய லாட்டரி சீட்டுத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்ற ஜெ.பியின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கருணாநிதி, செப்டெம்பர் 15 முதல் லாட்டரி சீட்டுத் திட்டம் தமிழகத்தில் இருக்காது என்று அறிவித்தார். நினைவாலயத்தைக் காட்டிலும் இந்த அறிவிப்புகள்தான் ராஜாஜிக்கு உண்மையான அஞ்சலி என்றார் ஜெ.பி. நடந்தது அரசு விழா என்பதாலோ என்னவோ, எம்.ஜி.ஆரின் கடிதம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் மறுநாள் நடந்த பொதுக்கூட்டத்தில் அதைப் பற்றிப் பேசினார். அதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர் பத்திரிகையில் எழுதிய பகிரங்க கடிதம் ஜெ.பியிடம் நேரடியாகவும் தரப்பட்டிருந்தது.
திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். எம்.ஜி. ராமச்சந்திரனின் கடிதத்தில் உள்ள வாசகங்கள் மிகவும் தரம் குறைந்த கசப்பான வசைமாரிகள். நடைபெறுகின்ற அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாலேயே இது ஊழல் உள்ள அரசு என்றாகிவிடாது. வேறு எந்த மாநில முதல்வரும் செய்ய முன்வராத சமயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிதான் தன்னுடைய அமைச்சரவை மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு களுக்கான பதில்களை அச்சடித்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி சரிவர நடத்தவில்லை என்றும் தவறுகளைச் செய்திருக்கிறது என்றும் குறை கூறுகிறார்கள். குற்றச்சாட்டுகளைக் கூறுவது சுலபம்; அவற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம். இதுதான் எம்.ஜி.ஆரின் கடிதத்துக்கு ஜெ.பி காட்டிய எதிர்வினை.
இந்திரா காந்திக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜெயப்ரகாஷ் நாராயணனை தமிழகத்துக்கு அழைத்து விழா நடத்துவதும் அவரைப் புகழ்ந்து பேசுவதும் இந்திரா காங்கிரஸ் தலைவர்களைக் கலவரமடையச் செய்தன. அதேசமயம் அவர்களுடைய கவனத்தைக் கலைக்கும் வகையில் இன்னொரு பிரச்னை உருவானது. அது இந்திரா காந்தியின் பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்னை.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியிருந்த இந்திரா காந்தியின் மீது வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷலிஸ்ட் வேட்பாளர் ராஜ் நாராயணன். அரசு ஊழியரைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தியது, அரசுக்குச் சொந்தமான இடங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் அவர்மீது கூறப்பட்டிருந்தன. மொத்தத்தில், தேர்தல் வெற்றிக்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியிருக்கிறார் என்பதுதான் அடிப்படையான விஷயம்.
மக்களவைக்குத் தேர்வாகி ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைக் கொடுத்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123, விதி ஏழின் படி இந்திரா காந்தி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இருந்து அவர் மக்களவைக்குத் தேர்வானது செல்லாது. தவிரவும், அவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தார் நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா.
தீர்ப்பு வெளியான நொடியில் இருந்தே தேசிய அரசியலில் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. அலகாபாத் தீர்ப்புக்குத் தலைவணங்கும் வகையில் பிரதமர் இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தத் தொடங்கின. ஆனால் பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினர் இந்திரா காங்கிரஸ் தலைவர்கள். தங்கள் கட்சித் தலைவியின்மீது முழு நம்பிக்கை இருப்பதாக அவர்கள் அழுத்தந்திருத்தமாகக் கூறினர். உச்சபட்சமாக, இந்தியா என்றால் இந்திரா; இந்திரா என்றால் இந்தியா என்றார் இந்திரா காங்கிரஸ் தலைவராக இருந்த தேவ காந்த் பரூவா.
இந்திரா காங்கிரஸ் கட்சியினர் காட்டிய பிடிவாதம் எதிர்க்கட்சிகளை ஆத்திரப்படுத்தியது. பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தியை உடனடியாக நீக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் ஃபக்ருதீன் அலி அகமதுவிடம் மனு கொடுத்தனர். இன்னொரு பக்கம் அலகாபாத் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஆளும் காங்கிரஸ் இந்தியாவில் மிகப்பெரிய கட்சி. இந்தியா, உலகத்தில் மதிக்கத்தக்க மிகப்பெரிய ஜனநாயக நாடு. இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்து இப்போது மத்திய அரசில் இருப்பவர்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அந்த முடிவுதான் இந்தியாவின் எதிர்கால அரசியல் முன்மாதிரியாகத் திகழும். அவர்களாகவே ராஜினாமா செய்திருந்தால் நாங்கள் பாராட்டியிருப்போம் என்றார் கருணாநிதி. ஏன் இன்னமும் ராஜினாமா செய்யாமல்
இந்திரா காந்தி பதவியில் நீடிக்கிறார் என்பதுதான் கருணாநிதி சொன்ன கருத்தின் அர்த்தம். கவனமாகக் குறித்து வைத்துக்கொண்டனர் இந்திரா காங்கிரஸ் தலைவர்கள்.
அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா காந்தி. அந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். அவர் கொடுத்த இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் நாடாளுமன்றத்தில் ஏதேனும் வாக்கெடுப்பு நடந்தால் அதில் கலந்துகொள்ள அவருக்கு உரிமை இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
சட்ட ரீதியான சிக்கல்கள் இந்திரா காந்தியின் கழுத்தை நெரிக்கத் தொடங்கின. போதாக்குறைக்கு, எதிர்க்கட்சிகள் வேறு ஓரணியில் திரண்டு இந்திராவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. நாட்டில் நிலவிக் கொண்டிருப்பது அசாதாரணமாக சூழ்நிலை. அதைச் சமாளிக்க வேண்டும் என்றால் சட்டரீதியான, வலுவான
புதிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் பிரதமர் இந்திரா காந்தி. அதன் பெயர், எமர்ஜென்ஸி. ஆம். இந்திராவுக்கு உருவான நெருக்கடி, இந்தியாவுக்கான நெருக்கடியாக மாறிப்போனது!
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார்
http://www.tamilpaper.net/?p=5444

கருத்துகள் இல்லை: