ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பொன்னுத்தாய் எழுப்பிய நாதஸ்வர ஓசை.... ஆணாதிக்கமிக்க சமுதாயத்தில் சாதித்திருக்கிறார்

தனது நாதஸ்வர இசையால் பல கோடி உள்ளங்களைக் கட்டிப்போட்டவர் பொன்னுத்தாய். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக விடாது இவர் எழுப்பிய நாதஸ்வர ஓசை இப்போது நிரந்தரமாக ஓய்வெடுத்துவிட்டது.
‘ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும்... நாதஸ்வரத்தின் எடை, அதைக் கையாளும் ஆற்றல், அனைத்தும் ஆண்களுக்கே சாத்தியம்’ என்ற எண்ணத்தை முதன்முதலாக தகர்த்தவர் பொன்னுத்தாய்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள புது ஆயக்குடிதான் பொன்னுத்தாயின் சொந்த ஊர். சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அவரது ஒன்பதாவது வயதில் குடும்பம் மதுரைக்குக் குடிபெயர்ந்ததன் மூலம் பொன்னுத்தாயின் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது. நாதஸ்வர இசையில் பிரபலமான நடேசப்பிள்ளையிடம் தனது பத்தாவது வயதில் நாதஸ்வரம் பயிலத் தொடங்கினார்.

அசுரப் பயிற்சிக்கு அர்த்தம் சொல்லும் வகையில் தினமும் எட்டு மணிநேரப் பயிற்சி. இப்படி தொடர்ந்து மூன்றாண்டுகள் விடாது பயிற்சி பெற்றார். பதின்மூன்றாவது வயதில் மதுரை சித்திரைத் திருவிழாவின் போது ராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதாரம் நிகழ்ச்சியில் இவரது நாதஸ்வர அரங்கேற்றம் நடந்தது. ‘ஐயோ பாவம், நாதஸ்வரத்தைக் கூட தூக்கமுடியாமல் தூக்கி வருகிறாளே’ எனக் கூட்டம் முதலில் அனுதாபப்பட்டது. ஆனால் அவர் வாசிக்க வாசிக்க கூட்டம் பிரமித்தது. அதற்குப் பிறகு ஏறுமுகம்தான்.

தனது இசைத் திறமைக்காக குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், முதல்வராக இருந்த பக்தவத்சலம் ஆகியோரிடம் தங்கப்பதக்கங்கள் பெற்றிருக்கிறார். பிரதமராக இருந்த நேருவால் பாராட்டப்பட்ட அனுபவமும் உண்டு. முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோரிடமும் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

மதுரை நாதஸ்வர சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பொன்னுத்தாய். திருச்சி வானொலியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாதஸ்வர ஆர்ட்டிஸ்டாகப் பணியாற்றியிருக்கிறார். புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளையோடு இணைந்து கடம்பூர், சென்னை ஆகிய இடங்களில் நாதஸ்வர நிகழ்ச்சி நடத்திய நாட்களை தன் வாழ்நாளின் பாக்கியமாகக் கருதியவர். மதுரையில் 1960-ல் காந்தி மியூசியம் திறப்பு விழாவுக்கு ஜவஹர்லால் நேரு வந்தபோது இவரது நாதஸ்வர இசையைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனார். ‘‘எப்படியம்மா.. இவ்வளவு அழகாக வாசித்தாய்!’’ என வியந்து பாராட்டினார்.

இவரது கணவர் சிதம்பர முதலியார் மதுரை நகராட்சித் தலைவராகவும் எம்.எல்.சி.யாகவும் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்தவர். 1972-ம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின்னர் பொன்னுத்தாய் பொது நிகழ்ச்சிகளில் வாசிப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். கடைசி காலத்தில் மதுரை ஆத்திக்குளத்திலுள்ள வீட்டில்தான் வசித்து வந்தார். 83-வது வயதில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அஞ்சலி செலுத்த வந்திருந்த மூத்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், “பொன்னுத்தாய் அதிகம் ஆசைப்படாதவர். நாதஸ்வர கலைஞர்களுக்காக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் வீட்டுமனை ஒதுக்கியபோது ‘என்னிடம் போதுமான இடம் இருக்கிறது. நலிந்த கலைஞர்களுக்குக் கொடுங்கள்’ என பெருந்தன்மையாகச் சொன்னவர்.

அந்தக் காலத்திலேயே ஒரு நிகழ்ச்சிக்கு மூவாயிரம் ரூபாய் வாங்கினார்.. இவரது இசை நிகழ்ச்சிக்கு தேதி கேட்டு பணத்துடன் பலர் காத்திருந்தனர்.. கணவர் மறைவுக்குப் பின்னர் அவரிடமிருந்த சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது. தனது பெண்களின் திருமணத்துக்காக அவருக்குக் கிடைத்த 23 தங்கப் பதக்கங்களையும் விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். ஒருகட்டத்தில் அரசு கொடுத்த ஐந்நூறு ரூபாய் மாத பென்ஷனை நம்பி வாழ்ந்தார். தனது நாதஸ்வரத்தை வைக்கக் கூட வீட்டில் இடம் இல்லாமல் அதை கோயிலில் வைத்திருந்தார். ஆனால், கடைசி வரை யாரிடமும் உதவி கேட்டு அவர் போய் நின்றதில்லை...’’ எனச் சொல்லி எட்டிப்பார்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

பொன்னுத்தாயின் பேரன் (மகன் தங்கவேல் முருகனின் மகன்) விக்னேஸ்வரன் தனியார் பள்ளியில் மிருதங்க ஆசிரியராக இருக்கிறார். ‘பொன்னுத்தாய் இசையாலயா’ என்ற இசைப்பள்ளியை நடத்தி வருகிறார்.
“1950 வாக்கில் சபரிமலையில் பாட்டி (பொன்னுத்தாய்) நாதஸ்வரம் வாசித்திருக்கிறார். அதுபோல அங்கு புதிய ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யும் முன்னர் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அதனுடன் நாதஸ்வரம் வாசித்துச் செல்லும் பேறு பெற்றவர் என் பாட்டி. பாட்டியிடம் பயிற்சி பெற்றவர்கள் பலர். அமெரிக்க பல்கலைக்கழக மாணவி கரிஷ்மாகிங் என்பவர் இங்கு வந்து பாட்டியிடம் நாதஸ்வரம் பயின்று மதுரையில் அரங்கேற்றம் நடத்தினார். பாட்டி யாரிடமும் எதையும் கேட்டுப் பெறாதவர்’’ என்று பெருமையுடன் கூறினார் விக்னேஸ்வரன்.



ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆணாதிக்கமிக்க சமுதாயத்தில் ஒரு பெண் சாதித்திருக்கிறார் என்றால் பாராட்டப்படவேண்டிய ஒன்று. தனது நாதஸ்வர இசையால் கோடிக்கணக்கானோர் இதயங்களை வசமாக்கிய பொன்னுத்தாய் உடல், புதன்கிழமை மதியம் மதுரை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பொன்னுத்தாய்க்கு மாவட்ட ஆளும்கட்சி அமைச்சர், எம்.எல்.ஏ., மரியாதை செலுத்தியிருக்க வேண்டும் என்பதே நாதஸ்வரக் கலைஞர்களின் ஆதங்கம்.

படங்கள்: ராமசாமி
thanks kumudam +rajmohan aruppukottai

கருத்துகள் இல்லை: