செவ்வாய், 24 ஜனவரி, 2012

IIT Saarang ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!

நடுத்தர​, மேட்டுக்குடி வர்க்கங்களது கலாசாரமும் – சமூகப் பொருளாதார​ விழுமியங்களை ஒட்டுமொத்த​ சமூகத்தினதுமாக​ சித்தரிப்பதில் சாரங் போன்ற கலாச்சார​ நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக​ முக்கியமானது.










    ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் இணைந்து வழங்கும் ஐ ஐ டி  சாரங்க் விழா!ஐஐடியின் கலாச்சாரப் பெருவிழாவான ’சாரங்க்’ (SAARANG) – கின் காதைச் செவிடாக்கும் ஓசைகளுக்கிடையே இந்த கட்டுரையை எழுதுகிறேன். பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்து பத்தாயிரக்கணக்கில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெருத்த ஆராவாரமும் சீழ்க்கை ஒலிகளும், மின்னணுக் கருவிகளிலிருந்து செயற்கையான முறையில் கிளம்பும் இசை வன்முறையாய் காதையும், மனதையும் கிழித்துக் கொண்டிருக்கிறது. நெஞ்சில் இடிபோல் இறங்கும் ட்ரம்ஸ் பீட்டின் இசைக்கேற்ப தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்களும் இளைஞர்களும். ‘தன்னிலை மறத்தல்’ – இதுதான் சாரங்கின் இலக்கு.

    1950 களில் தேசிய​ முக்கியத்துவம் வாய்ந்த​ அமைப்புகளாக​ சென்னையின் இருபெரும் நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன​. ஒன்று ஐ.சி.எப், இன்னொன்று ஐ.ஐ.டி. முதலாவது நிறுவனம் தொழிலாளி வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், பார்ப்பனியக் கோட்டையான  ஐ.ஐ.டி சென்னையோ  கடந்த​ 20 ஆண்டுக்காலத்தில் படிப்படியாக​ நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்துவிட்டு ஒப்பந்த​ கூலிகளைக் கொண்டு நிரப்புவதோடு மட்டுமன்றி, அந்த​ அமைப்புசாரா தொழிலாளர்களை அடிமாடு போல​ நடத்துகிறது. கல்வி தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக இருப்பதோடு மாணவர்களையும் மிக மோசமாக ஒடுக்கிவருகிறது. ஐஐடி மாணவர்களுக்கான கேண்டின் வசதி, ஹாஸ்டல் வசதிகள் பற்றி கேட்டால் ‘ஐஐடி ஒன்றும் தர்மாஸ்ரமமல்ல’ என்று சொல்லும் நிர்வாகம்தான் பல கோடிகளில் இக்கேளிக்கைச் சீரழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
    ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!ஐஐடி சென்னை வருடம் தோறும் ஜனவரி மாதத்தில் நடத்தும் சாரங்க் உயர் கல்விநிறுவனங்களில் நடத்தப்படும் கலாச்சார​ திருவிழாக்களிலே பெயர்போனது. நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஐஐடி மாணவர்கள் மட்டுமன்றி தென்னிந்தியாவிலுள்ள​ பெரும்பாலான​ கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்கள் உட்பட​ சுமார் 50,000 பேர் கலந்து கொள்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கான​ கலாச்சார​ நிகழ்ச்சியாக​ சித்தரிக்கப்பட்டாலும், இது இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க​ இளைஞர்களை ஒன்றிணைக்கும் தளமாகவும் உள்ளது. முழுமையாகவே மேற்கத்திய​ கலாச்சாரத்திற்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும்  இந்நிகழ்ச்சியில் உண்மையில் இரண்டுமே இருப்பதில்லை. மேற்கத்திய சீரழிவு கலாச்சாரக் கழிவுகளையும், பார்ப்பனியக் கலைகளான​ பரத​ நாட்டியம், குச்சுப்புடி, கர்நாடக​ இசை வழியாக​ இந்து புராணக் கட்டுக்கதைகளும்தான் அரங்கேறும்.
    இந்த​ ஆண்டும் வழக்கம் போல​ ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிவரைக்கும் நடந்திருக்கிறது இவ்விழா. சாரங்க் மாணவர்களால் மாணவர்களுக்காக​ நடத்தப்படும் இலாபநோக்கற்ற​ நிகழ்ச்சி என்று வெளியே கூறப்பட்டாலும், இந்த​ நான்கு நாட்களாக நடத்தப்படும் ‘ஷோ’க்களுக்கான​ நுழைவுக்கட்டணம், அதன் புரவலர்களான​ விளம்பரதாரர்கள், பங்கேற்கும் கலைகுழுக்கள் எனக் கோடிகளில் புரளும் இந்த நிகழ்ச்சியை பற்றி விரிவாகப் பார்த்தால் தான் இதன் பின்னாலிருக்கும் சமூகப் பொருளாதார​ இலாப​ நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள​ முடியும்.
    இந் நிகழ்ச்சியின் முதல்நாள் கிளசிக்கல் நைட். அதில் சசாங்க் சுப்பிரமணியத்தின் புல்லாங்குழலுடன், மலேசியா நடனக் குழுவின் ஒடீசியோடு ஆரம்பித்தது சாரங்க். இந்து புராண கட்டுக்கதையான காளீயமர்த்தனத்தையும், மீரா கிருஷ்ணனின் மேல்வைத்த ஒருதலைக் காதலையும் பல்வேறு இசை வடிவங்களில் மேடையேற்றிய பின்னர் மோகினி வேடமிட்டு அசுரர்களிடமிருந்து அமுதத்தை ஆட்டைய போட்ட விஷ்ணுவிடம் மோகம் கொண்ட சிவனின் லீலைகளும் (ஹரி-ஹர லீலை), தாந்திரிகக் கதைகளில் வரும் யோகினியின் சுடலை நடனமும் ஒடீசி நடன வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது.  அடுத்தடுத்த​ நாட்களில் கொறியோ நைட், போப்புலர் நைட் (தேவி சிறீ பிரசாத் மற்றும் விஸால் அன் சேகர்) மற்றும் ரோக் ஷோ (வித்ஜர்தா, சுவீடன்) என்று மேற்கத்திய​ மற்றும் இந்திய​ மேல்தட்டு வர்க்க கலைகளின்​ கூட்டுக்கலவையாக​ நடைபெற​ உள்ளது.
    இந்த​ ஆடம்பர கவர்ச்சிகரமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கான​ நுழைவுச் சீட்டுகள் இன்டெர்நெட்டிலிருந்து சென்னை நகரத்தின் பீட்சா கார்னர்கள் வரைக்கும் கூவிக்கூவி விற்கப்படுகிறது. இப்படி கூவிக்கூவி விற்கிறார்களே ஒரு நிகழ்ச்சிக்குப் போய் பார்க்கலாமென்றால், கட்டணம் 200 ரூபாயில் ஆரம்பித்து 1,500 ரூபாய் வரைக்கும் சில்வர், கோல்ட், பிளாட்டினம் என்று அவற்றின் இன்றைய​ சந்தை நிலவரம் போன்றே விலைவைக்கப்பட்டுள்ளது. சராசரியாக​ 30,000 பேர் பார்க்கும் இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக்கட்டணம் தலைக்கு சராசரி 400 ரூபாய் போட்டாலும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணத்திலிருந்து மட்டும் வருகிறது.
    ‘‘பெரிய​ பெரிய​ குரூப்பெல்லாம் வறாய்ங்க. ஐய்யோ பாவம் மாணவர்களால​ இலாபநோக்கமே இல்லாம​ நடத்தப்படுதே. அதனால​ தான் இம்புட்டு பைசா போலருக்குண்ணு’’ என்ன​ மாதிரியே நீங்களும் நெனச்சீங்கண்ணா​ எமாந்திட்டீங்க​. சாரங்க் ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. இதன் புரவலர்களான​ விளம்பரதாரர்கள் யாரென்றால், நோக்கியா, டாடாவின் குரோமா, ரிலையன்ஸ், பீட்சா கார்னர், பேஸ்புக், லாஜிடெக், மக் டொனால்ட்ஸ், டொயோடா, ஹிந்து, கொக்கோ கோலா போன்ற​ ‘சின்ன​’ கம்பெனிகளிலிருந்து, பிரான்ஸ் எம்பசியின் அல்லயன்ஸ் பிராஞ்சைஸ் , யுஎஸ் கண்சுலேட்,  இஸ்ரேல் எம்பசி, கொதெ இன்ஸ்டிடுட்/மாக்ஸ்முல்லர் பவன் போன்ற ஏகாதிபத்திய புரவலர்கள்  என்று பட்டியல் விரிகிறது.
    இந்த​ கார்பரேட்-ஏகாதிபத்தியப் புரவலர்கள் ஆதாயமில்லாமல் இந்நிகழ்ச்சிக்கு முதலீடு செய்வதில்லை. ஏற்கனவே புதிய​ தாராளவாதக் கொள்கைகளின் பகுதியாக​​ உயர்கல்வித் துறை தனியார்மயமாக்கப்பட்டு இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இந்திய​ உயர்கல்வித் துறை கொண்டவரப் பட்டிருக்கிறது. இச் சூழலில் ஐஐடிக்களை தனியார்மயமாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள​ நிலையில் இதைப் பற்றி சற்றும் பிரக்ஞையற்ற ஐஐடி மாணவர்களும் பேராசிரியர்களும் வழக்கம்போல​ ‘ஊழல்’தான் இந்த நாட்டின் முதன்மையான​ பிரச்சனையென்று அண்ணா ஹசாரே பின்னால் ஆட்டுமந்தைகள் போல் மெழுகுவர்த்தியுடன் பேரணி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  தன்னுடன் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக​ தற்கொலை செய்யும் போது கூட​ எதிர்வினையாற்றும் திராணியற்று விட்டேத்தியாக​ இருக்கும் அளவிற்கு இம்மாணவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த​ மனநிலைக்கு சாரங்க் போன்ற​ கலாச்சார ​ நிகழ்ச்சிகள் ஆற்றும் பங்கும் முதன்மையானது.
    படம் - இந்து நாளிதழ்
    அதற்கு சாரங்கின் வரலாற்றை கொஞ்சம் புரட்டுவோம். 1960 களில் அமெரிக்க இளைஞர்களிடமிருந்து தொற்றுநோய் போல் கீழைநாடுகளிலும் திட்டமிட்டு பரப்பப்பட்ட​ ஹிப்பி கலாச்சாரம் கீழைநாட்டுப் பிற்போக்கு தத்துவங்களையும் உள்வாங்கி  புது வகை உதிரிக் கலாச்சாரமாகப் பரிணமித்த​ போதே 1973-74 லிருந்து ஆண்டுதோறும் ஐஐடி சென்னையும் ‘மார்திக்ரா’ (Mardi Gras)  என்ற ​ பெயரில் இந்த​ களியாட்டங்களை அரங்கேற்றி வருகிறது. 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட​ புதிய​ தாராளமயக் கொள்கைகள் நாட்டை சூறையாட​ ஆரம்பித்ததும் இந்த​ களியாட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன​. அப்படித்தான் 1996-ல் மார்திக்ரா என்ற​  அராஜகவாதிகளின் களியாட்டம் சாரங்க் என்று பெயர் மாற்றப்பட்டது. 90களில் ஆரம்பித்த​ இந்த​ இரண்டாம் தலைமுறை ஹிப்பிகளின் (New Ager) மிகப்பெரிய​ சங்கமமாக​ தென் இந்தியாவில் சாரங்க் விளங்குகிறது. இதற்கு   இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்து Students Activity center (SAC) முன்புறம் தலைவிரிக்கோலத்தில் கறுப்புடை அணிந்து நாள்முழுதும் ஆடி, அண்டம் கிழியக் கத்தும் ட்ரூப்புகளைப் பார்த்தால் புரியும்.
    நாட்டில் 90% உள்ள​ உழைக்கும் பெரும்பான்மை மக்களின் கலாசாரமும் பொருளாதார​ நிலைமைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெறும் 10% நடுத்தர​, மேட்டுக்குடி வர்க்கங்களதும் பார்ப்பனர்களதும் சமூகப் பொருளாதார​ விழுமியங்கள் ஒட்டுமொத்த​ சமூகத்தினதுமாக​ சித்தரிப்பதில் இம்மாதிரி கலாச்சார​ நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக​ முக்கியமானது. மேற்கத்திய​ களிவெறி இசையுடன் கூட்டணி சேர்ந்துள்ள​ பார்ப்பனிய​ இசையானது, ஏகாதிபத்தியத்துடன் கள்ள​ உறவு வைத்துள்ள​ ஆர்.எஸ்.எஸ் ஐத்தான் நமக்கு நினைவூட்டுகிறது. சாரங்க் மட்டுமன்றி ஐஐடி வளாகத்துக்குள் இயங்கும் விவேகானந்த​ வாசகர் வட்டம், இஸ்கான் என்ற​ ஹிப்பி கும்பல், மியூசிக் கிளப், ஆத்ம​ ஞான​ யோகா போன்றவை மூலமும், Extra Mural Lectures வாயிலாக​ ராஜிவ் மல்கோத்ரா (உடையும் இந்தியா ஆசிரியர்), வாழும் கலையின் (Art of Living) ஐ.என்.கே. போன்றவர்களை உரையாற்ற​ அழைப்பதன் மூலமும் இந்துத்துவத்துவதை கட்டமைக்கும் வேலையிலும் அதனூடாக​ பார்ப்பனிய​ கலாச்சாரத்திற்கு முட்டுக்கொடுக்கும் வேலையிலும் ஐஐடி பார்ப்பனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு  ஐஐடி உணவு விடுதிகள் இன்றும் தீட்டுப்படாமல் சைவ​ உணவகங்களாக​ இருப்பதும், பெரும்பாலான மாணவர்கள் அசைவப் பிரியர்களாக​ இருந்தும் இந்தியாவின் தேசிய​ உணவாக​ சைவத்தை சித்தரிப்பதும் உதாரணம்.
    உயர்கல்வி தனியார்மயமாக்கலின் முதல் இலக்கான ஐஐடி கடந்த பத்தாண்டுகளில் மாணவர்கள் தங்கள்  நியாயமான உரிமைகளான உணவு விடுதிப் பிரச்சனைக்கோ அல்லது வாத்தியார்களின் தனிப்பட்ட பாழிவாங்குதலுக்கு எதிராகவோ முணுமுணுத்தால் கூட அதை தன் இரும்புக் கரங்களான பேராசிரியர்களை வைத்து ஒடுக்கிவருகிறது. இதன் கடந்தகால ரத்தசாட்சிகளான நிதின் குமார் மற்றும், அனூப்பின் தற்கொலைகள் இந்த அமைப்பின் கோரமுகத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியும், இந்த அமைப்பினை எதிர்த்து கேள்வி கேட்க்கும் உணர்வுகூட இல்லாததால் இம்மாணவர்களின் காதுகளில் ஒலிக்கும் சகமாணவனின் மரண ஓலம்கூட இன்று சாரங்கின் காக்கஃபோனி இசையின் இரைச்சலில் கரைந்து போயுள்ளது.
    ஏற்கனவே இந்த​ கல்விமுறையால் சுயசிந்தனையற்றவர்களாக​ ஆக்கப்பட்ட​ மாணவனை கலாச்சார​ நிகழ்ச்சிகள் என்ற​ பெயரில் நடத்தப்படும் சாரங்க் போன்றவை மூலம் எதிர்காலத்தில் பொழுதுபோக்கு சந்தையின் வரைமுறையற்ற​ நுகர்வோனாவதற்கு​ தயாரிக்கப்படுகிறான்.  ஒரு டாலருக்கும் குறைவாக​ தினக்கூலியாகப் பெறும் 65% மக்கள் வாழும் நாட்டில் கூத்தாடுவதெற்கென்றே பல​ கோடிகள் செலவு செய்யும்   கேவலம் தான் இங்கே நடைபெறுகிறது. இத்தகைய​ கலாச்சாரத் தாக்குதல்களால் சீரழிவுக்காளான ​ மாணவன் கல்லூரியை விட்டு வெளியேறும் போது சமூகப் பிரக்ஞையற்றவனாக​ மாறுவதோடு ஏகாதிபத்தியத்தின் அடியாளாகவும் கொ.ப.செ.யாகவும் மாறுகிறான். ஒரு பக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பறித்து அடிமைகளாக்குவதுடன் இன்னொரு பக்கம் சாரங்க் போன்ற கலாச்சார சீரழிவுகள் மூலம் சுயசிந்தனையற்ற யுப்பிகளை உருவாக்குவது தான் சாரங்கின் புரவலர்களான கார்பரேட், ஏகாதிபத்திய தூதரகங்கள் மற்றும் திரைமறைவில் செயல்படும் சாரங்கின் பின்னாலுள்ள அதிகாரவர்க்க​ மூளைகளின் இலக்கு. சாரங்க் நிகழ்வு நடைபெற்ற பகுதியில் புரவலர்களின் விளம்பர மற்றும் விற்பனை அங்காடிகளில் ஒன்றாக டூயுரக்ஸ் ஆணுறை நிறுவனமும் இருந்தது சூசகமாக இதைத்தான் சுட்டுகிறது – F*CK their minds… but Play it Safe!
    ____________________________________________________
    - ராஜன்www.vinavu.com

    கருத்துகள் இல்லை: