செவ்வாய், 24 ஜனவரி, 2012

1,075 கோடி செலவில் சென்னை வெளிவட்ட சாலை இரண்டாம் கட்ட பணிகள்

: சென்னை நகரின், வெளிவட்டச் சாலை இரண்டாம் கட்ட பணிகளை, 1,075 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்ட பணி: சென்னை நகருக்குள் நெரிசலை குறைப்பதற்காக, வண்டலூரில் துவங்கி, நசரேத்பேட்டை, நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை வெளிவட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை, 29.65 கி.மீ., சாலை பணி, தனியார் பங்களிப்போடு நடந்து வருகிறது. வரும் நவம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட பணி : இதன் தொடர்ச்சியாக, நெமிலிச்சேரியில் இருந்து, திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்சட்டி வழியாக மீஞ்சூர் வரையிலான, 32 கி.மீ., சாலை 1,075 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த பணிகள், அரசு மற்றும் தனியார் கூட்டாண்மையில், கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில், ஆண்டு ஈவுத்தொகை செலுத்தும் முறையில் செயல்படுத்தப்படும். இதன் மூலம், சென்னை நகருக்கு, பல திசைகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர்கள், நகருக்குள் நுழையாமல், எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்கள் மற்றும் சென்னை நகரை ஒட்டியுள்ள தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு, எளிதாக சென்றடைய முடியும்.

பராமரிப்புக்கு ரூ.285 கோடி : மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களுக்கான வழக்கமான காலமுறை பராமரிப்பு பணிகளுக்காக, 285 கோடி ரூபாயை, முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இந்த நிதியை, சாலை புருவங்களை சீர் செய்தல், மண் திட்டுக்களை அகற்றுதல், மழை நீர் வடிகாலுக்காக, மண் வாய்க்கால்கள் அமைத்தல், சாலையோர மரங்களை நடுதல் போன்ற பணிகளுக்காக, நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்தும்.

நிறுவன தேர்வுக்கு டெண்டர் : சென்னை நகர வெளிவட்டச் சாலை திட்டப் பணியை நிர்வகிக்கும் அமைப்பாக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 62 கி.மீ., நீளம் கொண்ட இந்த சாலை, ஆறு வழிச்சாலை மற்றும் பக்க சேவை சாலை வசதியுடன் அமைக்கப்படுகிறது. வண்டலூரில் துவங்கி, நெமிலிச்சேரி வரையிலான, 29.65 கி.மீ., நீளமுள்ள முதல் கட்ட சாலை பணியை, பெங்களூருவைச் சேர்ந்த ஜி.எம்.ஆர்., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நவம்பரில் பணிகள் நிறைவு பெறும். இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்ள, முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், பணியை மேற்கொள்ளும் நிறுவனம், டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது

கருத்துகள் இல்லை: