பேச்சிலிருந்து விலகும் எண்ணமே கிடையாதாம்!
EPDP அழைப்பு விடுத்தால் ஆசன குறைப்பு தொடர்பாக பேசவும் TNA தயாராம்!அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்கிடையிலான பேச்சுக்களின் போது அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கூட்டமைப்பின் எழுத்து மூல கோரிக் கையை முன்வைக்க அரசு காலத்தை இழுத் தடித்தாலும், கூட்டமைப்பு பேச்சுக்களை முறித்துக்கொண்டு வெளியேறாது என கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அரசு, கூட்டமைப்பிற்கிடையே நடந்து முடிந்த 10 சுற்றுப் பேச்சுக்களின்போதும் கூ டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதற்கும் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் பேச்சுக்களை மேலும் முன்னெடுப்பதாயின், ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பங்கிடப்படும் விடயங்கள், அவற்றின் செயற்பாடுகள், நிதி மற்றும் நீதியாகிய மூன்று அதிகாரங்கள் தொடர்பிலும் இரண்டு வார காலத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்து அடுத்த கட்டப் பேச்சுக்கள் குறித்து திகதி தீர்மானிக்காமல் கூட்டமைப்பு கடந்த பேச்சுக்களை முடித்திருந்தது.இந்நிலையில் அரச தரப்பு பேச்சுகளில் தலைமைத்துவம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தன குறித்த கோரிக்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகள் குறித்து அரசு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்திலேயே நேர்மையாக நிலைத்திருக்கக் கூடிய தீர்வினை எட்டமுடியும். எனவே கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல் உடனடியாக தீர்வினை முன்வைக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். எனவே இது குறித்து கூட்டமைப்பு தரப்பினரிடம் நாம் கேட்டபோது, ஏற்கனவே ஆறு மாத காலத்தை வீணடித்துள்ள அரசிற்கு மேலும் ஒரு மாத காலம் தேவை என்றால் அதையும் வழங்க நாம் தயாராக உள்ளோம், ஆனால் இதனை சாட்டாக வைத்து ஒரு வருட காலத்திற்கு பேச்சுக்களை மேலும் இழுத்தடிக்க அரசு முனைந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க நாம் தயாராக இல்லை, அதேவேளை பேச்சுக்களில் இருந்து நாம் விலகும் உத்தேசம் இல்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைப்பு தொடர்பாக எந்த நேரத்திலும், எந்தவோர் அரசியல் கட்சியுடனும் பேச்சுகளை நடத்தி விரைந்து செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாகவும் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஆனால், இதுவரையில் தமக்கு ஈ. பி. டி. பி. யினராலோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியினராலோ எதுவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைக்கப்படும் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமெனவும் அவர் தெரிவித்தார்.
யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படு மானால் யாழ். மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களது கோட்டா எண்ணிக்கையில் வீழ்ச்சி, அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புகள் போன்றவை குறைக்கப்படுவதுடன், மேலும் பல பாரிய பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இது தொடர்பில் ஜனாதிபதியின் கனத்திற்கு கொண்டு வந்து குறித்த விவகாரத்திற்கான தீர்வொன்றினைப் பெற அனைத்து தமிழ்க் கட்சிகளும், பழையவற்றை மறந்து பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும் என ஈ. பி. டி. பி.யினர் ஒரு பொது அழைப்பினை விடுத்துள்ளனர்.
எனவே இவ் அழைப்பு தொடர்பில் அனைத்து தமிழ் அரசியல் தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட்டு தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியும் என ஈ. பி. டி. பி. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஜான்சி யோசப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக