ஜாப்னா முஸ்லீம் : நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
"நான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும், நான் ஆரம்பிக்கவிருந்த அபிவிருத்திகளையும் முன்கொண்டு செல்ல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
அதனை அவர், தனது உத்தியோகபூர்வ முதலாவது வெளிநாட்டுப் பயணமான இந்திய விஜயத்தின்போது வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் நலன் கருதிய அநுரகுமாரவின் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அவரும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்படுவார் என்றும் நான் நம்புகின்றேன்.
இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை முழுமையாகத் தீர வேண்டும். அபிவிருத்தி முழுமை பெற வேண்டும். அதன்பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது சுலபமாக இருக்கும்.
ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்ததன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் இந்தத் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது. அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் அநுரகுமார வழங்கிய சகல வாக்குறுதிகளையும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும்.
அப்போதுதான் அவர் மீது முழு நம்பிக்கை இலங்கை மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் ஏற்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக