tamil.oneindia.com - Nantha Kumar R : டாக்கா: மம்தா பானர்ஜி மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தால் மோதலுக்கு நடுவேயும் கூட வங்கதேசம் நம் நாட்டிடம் பணிந்துள்ளது. அதன்படி வங்கதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 95 மீனவர்களை விடுதலை செய்வதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் முகமது யூனுஷ் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார். அதோடு நமக்கு எதிரியாக உள்ள பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறார்.
இதனால் தான் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. வங்கதேசம் தற்போது நம்முடன் வீரியமாக மோதலை தொடங்கி இருந்தாலும் கூட நம் நாடு இன்னும் ஸ்ட்ராங்காக எதிர்வினையாற்றவில்லை. என்ன இருந்தாலும் நாம் பார்த்து சுதந்திரம் வாங்கி கொடுத்த நாடு தானே. அண்டை நாடு தானே என்று நம் நாடு அமைதி காத்து வருகிறது.
இதற்கிடையே தான் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 95 இந்திய மீனவர்களை வங்கதேசம் கைது செய்துள்ளது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் காக்த்விப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 படகில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த நாட்டின் கடற்படையினர் 6 படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் 95 மீனவர்களை கைது செய்தனர்.
கைதான 95 மீனவர்களும் வங்கதேச சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது விவகாரம் பற்றி அறிந்தவுடன் மேற்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், வங்கதேசம் சிறை பிடித்த மீனவர்கள் 95 பேரையும், அவர்களின் படகையும் மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து மத்திய அரசு சார்பில் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று வங்கதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த அழுத்தத்தை தொடர்ந்து வங்கதேச சிறையில் அடைக்கப்பட்டுள்ள 95 மீனவர்களையும் விடுவிப்பதாக அந்த நாட்டு அரச அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் பொது பாதுகாப்பு பிரிவின் துணை செயலாளர் லுட்ஃபுன் நஹர் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக