கொழும்பில் இருந்து சென்னைக்கு உடலில் செல்போன்களை மறைத்து கடத்தி வந்த இலங்கை பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த ரீஸ்வியா (வயது 20) என்ற பெண்ணின் உடைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவரை சுங்க இலாகா பெண் அதிகாரிகள் தனியறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது உடல் முழுவதும் செல்போன்களை வைத்து செலோ டேப் மூலம் ஒட்டி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரது உடலில் இருந்த 70 செல்போன்களை அதிகாரிகள் எடுத்தனர். மேலும் அவருடைய சூட்கேசில் இருந்து உயர்ரக 3 சாட்டிலைட் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
இது பற்றி விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் பெரியசாமி கூறியதாவது,
இலங்கை பெண் சாட்டிலைட் செல்போன் கடத்தி வந்து உள்ளார். இது தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகும். இந்த செல்போன் யாருக்காக கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 27 ந் தேதி புறநகர் போலீசார் ரூ.2 கோடி நவரத்தின கற்களை பிடித்தாக கூறி எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த கற்களின் மதிப்பு ரூ.49 லட்சம் தான் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை விமான நிலைய சுங்க இலாகா மூலம் சுங்க தீர்வையாக ரூ2327 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் மட்டும் ரூ.422 கோடி சுங்க வரி வசூலிக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக இவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக