புதன், 22 ஜனவரி, 2025

உலகின் முதல் சைவ நகரம் குஜராத்தில் உள்ள பாலிதானா! அசைவ உணவு விற்பதும், உண்பதுற்கும் தடை!

 tamil.asianetnews.com - SG Balan : Palitana non-veg ban: இந்த இந்திய நகரம் உலகிலேயே முதல் முறையாக அசைவ உணவை முற்றிலுமாக தடை செய்துள்ளாது. இந்த நகரம் எந்த மாநிலத்தில் உள்ளது? இறைச்சி தடைக்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.
இந்த இந்திய நகரத்தில் இறைச்சி விற்பது மட்டுமல்ல, இறைச்சி சாப்பிடுவதும் குற்றமாகும். அதாவது இந்த நகரில் இறைச்சி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் உலகில் இறைச்சிக்கு தடை விதித்த முதல் நகரம் எது தெரியுமா?
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம், இறைச்சியை முழுமையாக தடை செய்த உலகின் முதல் நகரமாகும். இறைச்சிக்காக விலங்குகளை கொல்வது, இறைச்சி விற்பது மற்றும் சாப்பிடுவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 
தற்போது பாலிதானாவில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதுடன், விலங்குகளை வெட்டுவதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விலங்கு வதையை முற்றிலும் தடை செய்த உலகின் முதல் நகரமாக உருவெடுத்துள்ளது.
 
சமணர்கள் நிறைந்த இந்நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூடக் கோரி 200 சமண துறவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. சமண துறவிகளின் போராட்டம் சமண மதத்தின் அடிப்படைக் கொள்கையான அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது.
 
இறைச்சியைப் பார்ப்பதுகூட உளவியல் ரீதியாக தொந்தரவு தருவதாகவும் பாலிதானாவில் உள்ள சமணத் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், குஜராத் நீதிமன்றம் இறைச்சிக்குத் தடை விதித்தது.

பாலிதானாவில் இறைச்சி தடைக்குப் பிறகு, குஜராத்தில் உள்ள மற்ற நகரங்களான ராஜ்கோட், வதோதரா, ஜுனாகத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் இதே விதிகளை அமல்படுத்தியுள்ளன. ராஜ்கோட்டில் அசைவ உணவுகள் தயாரிக்கவும், பொது இடங்களில் இறைச்சியை காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள சத்ருஞ்சய மலைகளில் 800க்கும் மேற்பட்ட சமணக் கோயில்கள் உள்ளன. பாலிதானா 'சமணக் கோயில்களின் நகரம்' என்றே அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் உள்ள ஆதிநாத் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள், பாலிதானாவின் ஆன்மீக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: