BBC News தமிழ் : கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 'அரிதிலும் அரிதான' ஒன்று என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு 17 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்
இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சீல்டா நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தச் சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 9, 2024 அன்று, மருத்துவமனையின் கலந்தாய்வுக் கூடத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. அதன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தின் சுகாதார சேவைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முடங்கின.
இந்தச் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஜனவரி 18 அன்று, கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற சிறப்பு நீதிபதி அனிர்பன் தாஸ், "சிபிஐ முன்வைத்த பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்கள் சஞ்சய் ராயின் குற்றத்தை நிரூபிக்கின்றன" என்று கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டம் 64 மற்றும் 103 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சீல்டா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது
படக்குறிப்பு, ஜனவரி 18 அன்று, கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது
இந்த வழக்கில், சம்பவம் நடந்த நேரத்தில் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் தாலா பகுதி காவல் நிலைய பொறுப்பாளர் அபிஜித் மண்டல் இருவர் மீதும் சிபிஐ-யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலவில்லை.
அவர்கள் இருவரும் 'குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஆதாரங்களைச் சிதைத்ததாக' குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தற்போது சந்தீப் கோஷ், அபிஜித் மண்டல் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது அறிக்கையில், சிபிஐ இந்த வழக்கை 'அரிதிலும் அரிதானது' எனக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தது.
அதேநேரம், இறந்த மருத்துவரின் பெற்றோர் சிபிஐ விசாரணையில் அதிருப்தி அடைந்து, வழக்கைக் கண்காணித்து வரும் உச்சநீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் சீல்டா சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தண்டனையை அறிவிப்பதை நிறுத்தி வைத்து, முழு விஷயத்தையும் மீண்டும் ஒருமுறை விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
வழக்கு கடந்து வந்த பாதை
ஆகஸ்ட் 9, 2024
அன்று காலையில், கலந்தாய்வுக் கூடத்தில் பெண் பயிற்சி மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இரவு உணவு சாப்பிட்ட பிறகு மருத்துவர் கருத்தரங்கு மண்டபத்தில் தூங்கிய அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் நள்ளிரவு மூன்று மணி முதல் காலை ஆறு மணிக்குள் நடந்துள்ளது.
இதன் பின்னர் மருத்துவர்கள் இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.
ஆகஸ்ட் 10, 2024
காவல்துறையினர் விசாரணைக் குழுவை அமைத்தனர். விசாரணை தொடங்கிய ஆறு மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சிசிடிவி தவிர, கலந்தாய்வுக் கூடத்தில் இருந்து உடைந்த புளூடூத் இயர்போனை போலீசார் கண்டுபிடித்தனர். அது குற்றம் சாட்டப்பட்டவரின் கைப்பேசியுடன் இணைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம், சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர்.
ஆகஸ்ட் 12, 2024
மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.
ஆகஸ்ட் 13, 2024
வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது.
ஆகஸ்ட் 15, 2024
ஆகஸ்ட் 14 மற்றும் 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், கொல்கத்தா உள்படப் பல இடங்களில், மகளிர் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் 'இரவை மீட்டெடுங்கள்' என்ற முழக்கத்தை எழுப்பி, பெண்கள் தெருக்களில் இறங்குமாறு அழைப்பு விடுத்தனர்.
ஆகஸ்ட் 14-15ஆம் தேதி இரவு, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் நடத்திய போராட்ட இடத்தை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினர்.
ஆகஸ்ட் 16, 2024
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வீதிகளில் இறங்கி பேரணி நடத்தினார். இந்தப் பேரணியை பாஜக மற்றும் பலர் விமர்சித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் தலையீடு
உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கொல்கத்தா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதோடு, ஒரு தேசிய விசாரணைக் குழுவை அமைத்தது.
ஆகஸ்ட் 21, 2024
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்புப் படை (CSIF) எடுத்துக் கொண்டது.
மருத்துவர்கள் தங்கள் 11 நாள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
ஆகஸ்ட் 27, 2024
பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு எதிராக மாநில செயலகம் நோக்கி போராட்டப் பேரணி நடத்த மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்தப் போராட்ட பேரணியின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
'பஷ்சிம் பங்கா சத்ரா சமாஜ்' என்ற புதிய மாணவர் அமைப்பு இந்தப் போராட்டப் பேரணிக்கு 'நபன்னா அபியான்' என்று பெயரிட்டது. போராட்டக்காரர்கள் முதல்வர் மமதா பானர்ஜியின் ராஜினாமாவை கோரினர்.
ஆகஸ்ட் 28, 2024
போராட்டங்களில் வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் மாணவர்கள் கைது செய்யப்படுவதற்கும் எதிராக பாஜக 12 மணிநேர வங்காள கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. மாநிலத்தில் 'அராஜகத்தை' நிலைநிறுத்த பாஜக விரும்புவதாக, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மேற்கு வங்கத்தில் புதிய சட்ட திருத்த மசோதா
செப்டம்பர் 2, 2024
சிபிஐ வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் மருத்துவமனைக்கு பொருட்களை வழங்கிய இரண்டு ஒப்பந்ததாரர்களான பிப்லாப் சிங்கா மற்றும் சுமன் ஹஸ்ரா, சந்தீப் கோஷின் மெய்க்காப்பாளர் அப்சர் அலி கான் ஆகியோர் அடங்குவர்.
இதுதவிர, உள்ளூர் தாலா காவல் நிலைய பொறுப்பாளரான அபிஜித் மண்டலை ஆதாரங்களை அழிக்க முயன்ற குற்றச்சாட்டில் சிபிஐ கைது செய்தது.
செப்டம்பர் 3, 2024
சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள், மேற்கு வங்க சட்டமன்றம் அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்க குற்றவியல் சட்டத் திருத்தம்) மசோதா, 2024ஐ ஒருமனதாக நிறைவேற்றியது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான இந்திய நீதிச் சட்டம் 2023, (BNS), இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் 2023 (BNSS) மற்றும் போக்சோ சட்டம் 2012 ஆகியவற்றில் திருத்தம் செய்யும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர் 8, 2024
இந்த விஷயத்தில் மமதா அரசும் அதன் தலைவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆர்ஜி கர் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கைத் தொடர்ந்து பொதுமக்கள் கிளர்ச்சி செய்ததைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ஜவஹர் சர்க்கார், மமதா பானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதி தனது ராஜினாமாவை வழங்கினார்.
மேற்கு வங்கத்தில் புதிய சட்ட திருத்த மசோதா
செப்டம்பர் 14, 2024
கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைச் சந்தித்தார். மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் கோரினார்.
செப்டம்பர் 17, 2024
கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் மாநில அரசால் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.
அக்டோபர் 7, 2024
முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ அக்டோபர் 7ஆம் தேதியே குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
டிசம்பர் 13, 2024
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் கொல்கத்தாவின் தாலா காவல் நிலைய பொறுப்பாளர் அபிஜித் மண்டல் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஜனவரி 18, 2025 – சீல்டா நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் ஜனவரி 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அனிர்பன் தாஸ் தெரிவித்திருந்த நிலையில், சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக