வியாழன், 23 ஜனவரி, 2025

கேரள மரண தண்டனையை கொண்டாடும் பெண்களே நீங்கள் அனைவரும் ஆண்களுக்கு கீழானவர்கள்தான்

May be an image of 2 people and text

சுமதி விஜயகுமார் :  சம்பவம் 1 : அந்த பெண்ணிற்கு 30 வயது. உடலில் 38 இடங்களில் காயங்கள். பாதி குடல் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.
கேரளா அரசு அவரின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடாக அறிவித்தது.

சம்பவம் 2 : 33 வயதான வெளிநாட்டு பெண். போதைமருந்து அளிக்கப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது கேரளா நீதி மன்றம்.


சம்பவம் 3 : 23 வயதான தலித் கூலி தொழிலாளி பெண். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டு, உடல் சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு குளத்தில் வீசப்பட்டார். அவரின் மரணம் தொடர்பாக 2 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றனர். 8 ஆண்டுகள் கழித்து அதில் ஒருவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை ஆனார். குற்றம் செய்தவர்களான அந்த பெண்ணின் முதலாளியும் அவனின் நண்பனும் இன்னும் சுதந்திரமாக தான் இருக்கிறார்கள்.

சம்பவம் 4 : 18 வயது தலித் பெண். தனது 13 வது வயதில் இருந்து 18 வயது வரை 64 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். அதில் 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இதில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் இரவில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றதாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை காவல்துறை encounter செய்தது. டெல்லி நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த இரண்டு நிகழ்வின் போதும் நாடே அதை கொண்டாடியது.
இதில் குற்றம் சாட்டப்பட்டு இறந்த அத்தனை ஆண்களும் தலித்துகள்.
தலித் அல்லாத ஆண்கள் இதை விட கொடுமையாக பெண்களை சித்ரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்திருக்கிறார்கள். அதில் குறைந்தபட்ச கைது நடவடிக்கை கூட இருந்ததில்லை.

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளுக்கும் இன்னொரு ஒற்றுமை கூட இருக்கிறது. இரண்டு நிகழ்வுகளிலும் பொது மக்களிடையே போராட்டம் வெடித்தது.
அதை தொடர்ந்தே கொலைகள் (மரண தண்டனையும் கொலை தான்) நிகழ்த்த பட்டன.
ஒருவேளை இந்த இரண்டு நிகழ்வுகளின் போதும் பொது சமூகம் அமைதியாய் இருந்திருக்குமேயானால் அந்த குற்றவாளிகளும் ஆயுள் தண்டனை தான் பெற்றிருப்பார்கள்.

தன் காதலனுக்கு விஷம் வைத்து கொன்ற செயல் நியாயமானதா இல்லையா என்பதை தாண்டி, இதுவே ஒரு ஆண் இதை செய்திருந்தால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்குமா என்பதே தலையாய கேள்வி.

இந்த மரண தண்டனையை கொண்டாடும் பெண்கள் பெரும் ஆச்சர்யத்தை கொடுக்கிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு கற்பு என்பதெல்லாம் இல்லை என்ற பொழுதிலும்,
ஒரு ஆண் அவளின் விருப்பமும் அனுமதியும் இல்லாமல் அவளுள் நுழையும் அந்த வன்கொடுமை,கொலைக்கு எந்த விதத்திலும் குறைந்த வலி இல்லை.

இதை ஆண்கள் புரிந்து கொள்வது கடினமாக கூட இருக்கலாம். ஆனால் பெண்கள்!!!!!!
இது போன்ற இரு தர காதல்கள், திருமணங்கள், திருமணம் மீறிய உறவுகளில் ஆண்களை கொலை செய்யும் பெண்கள் மிக மிக குறைவு. சட்ட வழியில் பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை அல்லது நியாயமான முறையில் பிரிந்து சென்ற காதலியை கொடூரமாக கொன்ற ஆண்களில் எத்தனை பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது !!!!!!

இந்த மரண தண்டனையை கொண்டாடும் பெண்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த உயிர் ஜாதியில் பிறந்திருந்தாலும் சரி, நீங்கள் அனைவரும் ஆண்களுக்கு கீழானவர்களாகத்தான் பார்க்கப்படுகிறீர்கள். அந்த வகையில் நாம் எப்போதுமே ஒரு தலித் தான்.

ஆணுக்கு ஒரு நீதி பெண்ணிற்கு ஒரு நீதி வழங்கும் ஒரு உலகில், அந்த அநீதியை ஆதரிக்கும் பெண்கள் இருக்கும் வரை பெண்கள் விடுதலை எப்படி சாத்தியமாகும்.
மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும். கூடவே பாலின பேத சட்டங்களும் தீர்ப்புகளும்.

கருத்துகள் இல்லை: