charuonline.com : என் வாழ்வில் இரண்டே இரண்டு அதிர்ஷ்டக்காரர்களைத்தான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்து மனிதர்கள் புதையல் என்ற விஷயத்தை நம்பினார்கள்.
கோடியில் ஒருத்தருக்குப் புதையலும் கிடைத்தது.
அதற்குப் பிறகு லாட்டரிச் சீட்டு. இது அல்லாமல் நடக்கும் அதிர்ஷ்டக் கதைகளும் உண்டு.
நம் அனைவருக்குமே தெரிந்த கதை ஒரு கன்னடத்து பஸ் கண்டக்டர் இந்தியா முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டாராக மாறியது.
ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரின் கதை அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. அவரிடம் அதீதமான திறமையும் இருந்தது.
கோடீஸ்வரனான பிறகும் அவர் கண்டக்டராக இருந்தபோது அடித்த மக்டவல் விஸ்கியையே அடித்தார் என்றாலும், மற்ற பொதுவான விஷயங்களில் அவர் ஒரு கோடீஸ்வரரைப் போலவே நடந்து கொண்டார். திடீர்ப் பணக்காரர்களுக்கு இது ஒரு தலையாய பிரச்சினை.
ஒரு உதாரணம் சொல்கிறேன். இரவு ஏழு மணிக்கு அழைத்தார் அந்த இயக்குனர். தமிழ் சினிமாவின் நம்பர் ஒன். கமல், ரஜினி இருவரையும் வாடா போடா என்று அழைக்கக் கூடியவர். ரெமி மார்ட்டினா, விஸ்கியா என்று கேட்டார்.
இயக்குனர் ஒரு வெகுளி. அதிகாலை மூன்று மணி வரை நான் அவர் கொடுத்த முதல் பெக்கையே வைத்துக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை.
இளவரசன் ஒரு திடீர்ப் பணக்காரர். கோடீஸ்வர்ர். அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, என்னிடம் ஐம்பது கார்கள் உள்ளன, நூறு வீடுகள் உள்ளன என்றெல்லாம் வெகுளியாகச் சொல்வார். சிங்கிள் டீக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்தவர் பதினைந்தே ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதி ஆனதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தனைக்கும் எந்தத் தில்லுமுல்லும் இல்லாமல் உழைப்பினாலேயே முன்னுக்கு வந்தவர்.
இளவரசனும் இன்று வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான் என்றார் இயக்குனர்.
இளவரசனும் வந்தார். சிரித்த முகம். இனிமையான பேச்சு. வெகுளியான குணம். வெளிப்படையான பேச்சு. எந்தவித பந்தாவும் பாசாங்குகளும் இல்லாத அருமையான மனிதர். இளைஞர். இளமையான தோற்றமும் கொண்டவர்.
ஆக, எல்லா விதத்திலுமே எனக்கு அவரைப் பிடித்துப் போயிற்று. ஆனால் அவர் கிளம்பி வந்திருந்த விளிம்புநிலை வர்க்கத்தை மட்டும் அவர் இன்னமும் கைவிட்டிருக்கவில்லை என்பது அவர் மது அருந்தும் விதத்திலிருந்தே தெரிந்து விட்டது. நாலைந்து ரெமி மார்ட்டின் பாட்டில்களைக் கொண்டு வந்திருந்தார். அதில் ஒன்றை எடுத்து கிளாஸில் ஊற்றினார். டாஸ்மாக்கில் கோட்டரை வாங்கி தண்ணீர் கூடக் கலக்காமல் ஒரே கல்ப்பில் அடித்து விட்டு கொஞ்சம் ஊறுகாயை எடுத்து நாக்கில் அப்பிக் கொள்வார்கள் இல்லையா, அதேபோல் ஒரே மடக்கில் கிளாஸைக் காலி பண்ணி விட்டு, தான் கொண்டு வந்திருந்த வறுத்த ராலை எடுத்துக் கடித்துக்கொண்டார். பரவாயில்லை, ஊறுகாய்க்குப் பதிலாக ரால்.
நம்ப முடியவில்லை. அரை மணி நேரத்தில் மடக் மடக்கென்று முக்கால் ரெமி மார்ட்டினைக் காலி பண்ணி விட்டு, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு கொடூரமான வாந்தியைப் போட்டார். வாந்தி எடுத்தது கூடத் தப்பில்லை. நாங்கள் மூவரும் எங்கே அமர்ந்திருந்தோமோ அதே இடத்தில் எடுத்தார். பிரக்ஞை முழுசாகப் போய் விட்டது. ஆனால் வாந்தி மட்டும் நிற்கவே இல்லை. அது பாட்டுக்கு வாயிலிருந்து வந்து கொண்டேயிருந்தது. நாலு பேர் அவரைத் தூக்கிச் சென்றார்கள்.
பத்து பேர் அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். நானும் இயக்குனரும் அந்த அரண்மனை போன்ற மாளிகையில் வேறோர் உப்பரிகைக்குப் போனோம். இயக்குனர் இது எதையும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இந்த வர்க்க மாற்றத்தையே (transformation) நான் இங்கே குறிப்பிடுகிறேன். இந்த வர்க்க மாற்றம் பெருமாள் முருகனிடம் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன் பெருமாள் முருகனுக்கும் எனக்குமான ஒரு பொது நண்பருடன் பெருமாள் முருகன் வசித்து வந்த பழவந்தாங்கலுக்குப் போவேன். அப்போது பெ.மு. ஆய்வு மாணவர்.
அப்போது இருந்த மாதிரியே இப்போதும் இருக்கிறார் பெருமாள் முருகன். அதே கட்டம் போட்ட சட்டை. அதே செருப்பு. அதே எளிமை. எல்லாம் அதே. இதைத்தான் வட இந்திய இலக்கிய தாதாக்கள் பெருமாள் முருகனின் அடக்கம் என்கிறார்கள். பெருமாள் முருகன் பற்றிய எல்லா கட்டுரைகளிலும் அவரது அடக்கம் பற்றிப் பேசுகிறார்கள்.
ஏண்டா தூமைகளா, அடக்கம் ஒரு நல்லறமாடா (virtue)? ஒரு எழுத்தாளன் என்ன மயிருக்கு அடக்கமாக இருக்க வேண்டும்?
விஷயம் என்னவென்றால், வட இந்திய இலக்கிய வெண்ணைகள்தான் இந்தியாவின் இலக்கிய நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. நான் எல்லோரையும் சொல்லவில்லை. சஞ்சய் ராய் போன்ற விதிவிலக்குகள் உண்டு. ஆனாலும் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் பெருமாள் முருகனின் அடக்கம் பற்றி சிலாகிக்கிறார்கள்.
அப்படி சிலாகிக்கும்போது என்னைப் போன்ற அடக்கமற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையும், ஒரு அச்சுறுத்தலும் தரப்படுவதாகவே உணர்கிறேன். ஓ, நாம் ஆடம்பரமாக இருக்கிறோம், அடக்கமற்று இருக்கிறோம் என்பதான ஒரு குற்ற உணர்ச்சியை எங்களுக்குள் ஏற்படுத்துகிறது.
உயர்சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரு தலித்திடம் போய், “ம் பரவாயில்லை, நீ மற்ற தலித்துகளைப் போல் இல்லை, அடக்கமாக இருக்கிறாய்” என்று மெச்சுவதைப் போன்றது இது.
அதாவது, இலக்கிய அதிகாரத்தைத் தங்கள் கரங்களில் வைத்திருக்கும் வட இந்திய இலக்கிய தாதாக்கள் தமிழ் போன்ற பிராந்திய மொழி எழுத்தாளர்களை அடிமைகளாக இருக்கச் சொல்கிறார்கள். பெருமாள் முருகனின் அடக்கம் அதனால்தான் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அடிமைச் சமூகத்தின் செல்லப் பிள்ளை.
இதன் அர்த்தம் என்ன? பச்சையான ரேசிஸம். அதாவது, மூவாயிரம் ஆண்டுகளாக கீழ் வர்க்கங்களை ஒடுக்கிக்கொண்டிருந்தவர்கள் இன்று பட்டியலின மக்களிடம் அன்பு பாராட்டுகிறார்கள் இல்லையா, அதே போன்ற செயல்தான். அதாவது, ஒடுக்கப்பட்டவனாகிய உன் மீது நான் அன்பு பாராட்டுகிறேன். உன்னை எனக்கு சமமானவனாக நினைக்கிறேன். நீ தமிழ் போன்ற ஒரு உருப்படாத மொழியில் எழுதினாலும், உனக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது என்றாலும், நான் உன்னை எனக்கு சமமாக நினைக்கிறேன். அந்த அளவுக்கு நான் ஜனநாயகபூர்வமானவன். உன் அடக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது.
இதன் அர்த்தம், நீ எனக்கு சமமாக வந்து விட்டாலும் நீ ஒரு அடிமை என்பதை உணர்ந்திருக்கிறாய். நன்று.
இதற்குப் பதிலாக, பெருமாள் முருகன் என்னைப் போல் ஆடம்பரமாக ஆடை அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் இப்படி எழுதுவார்களா?
அதிர்ஷ்டம் பற்றி ஆரம்பித்தேன். ரஜினிக்கு அதிர்ஷ்டம் இருந்தாலும் இப்போது அவர் இருக்கும் இடத்துக்கான தகுதி அவரிடம் இருக்கிறது. கமல் போன்ற ஒரு ‘உலக நாயகனை’, புத்திஜீவியை அச்சுறுத்தும் அளவுக்கு ரஜினியிடம் சக்தி இருக்கிறது.
ஆனால் பெருமாள் முருகனின் அதிர்ஷ்டம் உண்மையிலேயே விபரீத ராஜ யோகம்தான்.
விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?
ராஜா ராணி கதைகளில் வரும் ஒரு கதை இது. ராஜாவுக்கு வாரிசு இருக்காது. ராஜா செத்து விடுவார். பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் போடுவார்களோ அவரே ராஜா. இப்படியெல்லாம் நடந்ததா என்று தெரியாது. ராஜா ராணி கதைகளில் வரும்.
சில எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு என்ற மாலை அப்படி விழுந்து விடுவதுண்டு. ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் பத்ரிக் மோதியானொவுக்கு (Patrick Modiano) அப்படித்தான் விழுந்தது. பாடகரும் பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு இலக்கியத்துக்காகக் கிடைத்த நோபல் விருதும் அப்படி விழுந்ததுதான். பாப் டிலனுக்குக் கிடைத்தால் அதே காரணத்துக்காக அந்த விருது வைரமுத்துவின் கழுத்திலும் விழலாம்.
ஆனால் பத்ரிக் மோதியானோ மோசமான எழுத்தாளராக இருந்தாலும், நோபல் விருதுக்குக் கொஞ்சமும் தகுதியில்லாதவர் என்றாலும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய அளவுக்குத் தகுதியானவர்தான்.
இந்த நிலையில் விபரீத ராஜ யோகம் என்ற ஜாதக நிலைக்குத் தோதான இரண்டு பேரை என் வாழ்வில் நான் எதிர்கொண்டிருக்கிறேன். அதாவது, யானையின் துதிக்கையில் உள்ள மாலை பிச்சைக்காரியின் கழுத்தில் விழுவதுதான் விபரீத ராஜ யோகம்.
இருவரில் ஒருவர்தான் பெருமாள் முருகன். அவர் ஒரு நல்லாசிரியர் என்று அவர் மாணவர்கள் போற்றுகிறார்கள். அவர் ஒரு சிறந்த தொகுப்பாசிரியர். நானே என் ஆய்வுக் கட்டுரைகளுக்கு பெருமாள் முருகன் தொகுத்த நூல்களைத்தான் ஆதாரமாகக் கொள்கிறேன். அதை அந்தந்த நூல்களிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆனால் இலக்கியப் படைப்பாளி என்ற முறையில் பார்த்தால் இலக்கியத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் அவர் ஒரு எழுத்தாளராக உலகப் புகழ் பெற்று விட்டார். அவர் இன்று ஒரு கட்டுரை எழுதினால் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நாளை நியூயார்க்கரில் வரும்.
இரண்டாவது நபர் டோலி சாய்வாலா. நாக்பூரைச் சேர்ந்தவர். அவருக்கு அடித்த அதிர்ஷ்டம்தான் உண்மையிலேயே என் வாழ்வில் இதுவரை கண்டிராத பேரதிசயம். நாக்பூரில் ஒரு தெருவோரத்தில் தள்ளுவண்டியில் டீ விற்றுக்கொண்டிருந்தவர். இன்று லம்போர்கினி காரில் போகிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார். உடம்பு பூராவும் தங்கம் ஜொலிக்கிறது. விரிச்சூர் பாலு மாதிரி காமெடி பீஸாக அல்ல. ஜமைக்கன் பாப் பாடகர்களைப் போல் நகை அணிகிறார் டோலி சாய்வாலா. டோலியோடு உலகின் மிகப் பிரபலமான மாடல்களும் நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். மன்னர்களும் மந்திரிகளும் அவரை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள்.
பில் கேட்ஸ் இந்தியா வந்தபோது டோலியின் தள்ளுவண்டியில் டீ குடித்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். அதற்குப் பிறகு டோலியின் பெயர் மேலும் பரவலாயிற்று என்றாலும், பில் கேட்ஸ் டோலியிடம் வருவதற்கு முன்பே டோலி உலகப் பிரசித்தம் அடைந்திருந்தார். அதனால்தான் பில் கேட்ஸ் டோலியின் தள்ளுவண்டி டீக்கடைக்கு வந்தார்.
இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடி. இதில் குறைந்த பட்சம் ஐம்பது கோடி பேருக்காவது டீ போடத் தெரியும். அப்படியிருக்கும்போது டோலியின் டீயில் அப்படி என்ன விசேஷம்?
ஒரு விசேஷமும் இல்லை.
நான் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு. சாரு என்ற நான் ஒரு துப்புரவுத் தொழிலாளியாக இருந்திருந்தால் கூட என்னை உலகம் பூராவுக்கும் தெரியச் செய்திருப்பேன். எப்படி என்று கேட்பார்கள். அப்போது எனக்கு பதில் தெரியாது. ஆனால் டோலியைப் பார்த்த பிறகு தெரிந்து விட்டது.
வாழ்க்கை பற்றிய டோலியின் ஹெடோனிஸப் பார்வையும் அணுகுமுறையுமே காரணம். இதை அவர் தென்னிந்திய சினிமாவிலிருந்து தெரிந்து கொண்டதாகச் சொல்கிறார். தன் ஆடை அலங்காரத்தை ஜானி டெப்பிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்.
இந்த ஒன்றுதான் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தள்ளுவண்டி சாய்வாலாக்களிலிருந்து டோலியை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. தோற்றமும் ஸ்டைலும். இது வெறும் ஸ்டைல் சம்பந்தப்பட்டது அல்ல. ஏனென்றால், இப்போது அவர் கோடீஸ்வரர். கோடீஸ்வரர்களோடும் மன்னர்களோடும்தான் அவர் பழகுகிறார். ஆனால் ஒரே இரவில் தன்னை வர்க்க மாற்றம் செய்து கொண்டு விட்டார். அவரோடு உடனிருக்கையில் மன்னர்களும் மாடல்களும் இயல்பாகவும் சகஜமாகவும் உணர்கிறார்கள். இளவரசன் என்ற கோடீஸ்வரனோடு நான் எப்படி உணர்ந்தேன்? இளவரசன் ஒரு கோடீஸ்வரன் என்றாலும் ஒரு டாஸ்மாக் குடிகாரனைப் போல்தான் நடந்து கொண்டார். டோலி அப்படி இல்லாமல் கோடீஸ்வரர்களோடு கோடீஸ்வரனாகவே பழகுகிறார். இந்த மனோபாவம்தான் முக்கியம்.
டோலி எத்தனை வகுப்பு படித்தார், அவர் கல்வித் தகுதி என்ன என்ற விவரமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு அவரால் மாற முடிந்தது என்பதே அவரது தனித்துவம். நான் அடிக்கடி சொல்வதுண்டு, I am en emporer disguised as a beggar என்று. டோலி சாய்வாலாவாக இருக்கும்போதே அரசனாகத்தான் இருந்திருக்கிறார் என்பதை கவனிக்க முடிகிறது. அதுதான் அவரை மற்ற சாய்வாலாக்களிலிருந்து மாறுபடுத்தியிருக்கிறது. இதை வெறுமனே ‘ஸ்டைல்’ என்று குறுக்கி விட முடியாது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை பற்றிய நமது கண்ணோட்டம் என்று பார்க்கிறேன்.
ஹெடோனிஸம் என்ற வார்த்தை டோலிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு தள்ளுவண்டியில் சாயா விற்கும் ஒரு இளைஞனின் மகிழ்ச்சியான, கொண்டாட்டமான வாழ்க்கை அவனை இப்படிப்பட்ட ஒரு உயரத்தில் கொண்டு போய் உட்கார்த்தி வைத்திருக்கிறது. அவனும் அந்த உயரத்திலேயே பிறந்து வளர்ந்தவனைப் போல் நடந்து கொள்கிறான்.
நான் டோலியைப் பார்த்தால் ஹலோ சொல்ல மாட்டேன். ஆனால் நான் அவனைப் பற்றி எழுதியதைச் சொல்வேன். நான் ஒரு எழுத்தாளனாக இல்லாமல், ஒரு சாய்வாலாவாக இருந்திருந்தால் டோலியைப் போல்தான் இருந்திருப்பேன் என்பதால் மட்டுமே எனக்கு டோலியைப் பிடிக்கிறது.
பெருமாள் முருகனுக்கும் அப்படிப்பட்ட உயரம் கிடைத்தும் அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இன்னமும் பழவந்தாங்கலில் நான் கண்ட ஆய்வு மாணவனைப் போலவே இருக்கிறார் என்பதுதான் பெருமாள் முருகன் என்ற மனிதனை எனக்குப் பிடிக்காமல் போவதற்குக் காரணம். இன்னமும் அவர் ஒரு சிற்றூரில் ஒரு அரசுக் கல்லூரியில் பணி புரியும் தமிழ்ப் பேராசிரியராகவே இருக்கிறார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தேர்வு அவர்களது தனிப்பட்ட விருப்பம், சுதந்திரம். ஆனால் பொதுவாழ்வுக்கு வந்த பிறகு அது பற்றி மதிப்பீடு செய்யவும் மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பதால் மட்டுமே இதை எழுதுகிறேன். இன்னொன்று, பெருமாள் முருகனின் அடக்கம் பற்றி வட இந்திய இலக்கிய தாதாக்கள் புகழ்ந்து தள்ளுவதாலும் இதை எழுத வேண்டியிருக்கிறது. இங்கே மேற்கத்திய இலக்கிய தாதாக்கள் பற்றி எழுதவில்லை. அவர்கள் வட இந்திய இலக்கிய தாதாக்களை விட பன்மடங்கு கொடூரமான ரேஸிஸ்டுகள். அவர்களுக்கெல்லாம் பெருமாள் முருகன் ஒரு டார்லிங் பேபி. நானோ அந்த மேற்கத்திய ரேஸிஸ்டுகளுக்கு ஒரு நடமாடும் மனித வெடிகுண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக