வியாழன், 12 செப்டம்பர், 2024

போலீஸ் தாக்கியதால் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. காட்டுமன்னார்குடி

Demonstration demanding justice for the  jewelry worker in Kattumannarkoil

  nakkheeran.in  :  காட்டுமன்னார்குடி தியாகராஜ தெருவைச் சேர்ந்த காமராஜ்(50) நகை செய்யும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள அன்னை தெரசா நகருக்கு நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஆகஸ்ட் 31 ம் தேதி இரவு சென்றுள்ளார்.  
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டுமன்னார்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  காமராஜை அடித்து  மன வேதனை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.



இதுகுறித்து காமராஜ் அவரது  மகன் சந்தோஷிடம்  தொலைப்பேசி மூலம் சம்பவத்தைக் கூறியுள்ளார். பின்னர் சந்தோஷ் தந்தையை அழைத்துக்கொண்டு  மீண்டும் காவல் நிலையத்திற்குச் சென்று அப்பாவை அடித்தது குறித்து கேட்டுள்ளார் .  அதற்கு காவல்துறையினர் தந்தையும் மகனையும் அடித்து விரட்டியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த காமராஜ் அன்று இரவே நகை செய்வதற்காக பயன்படுத்தும் சையனைடு விஷயத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.  உடனடியாக இவரை மீட்டு காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக உறுதிப்படுத்தினர்.  இந்த சம்பவத்தை கண்டித்து அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இறந்த காமராஜ் குடும்பத்திற்கு நீதி கேட்டும் சம்பந்தப்பட்ட இரவு ரோந்து பணி காவலர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகே சிபிஎம் தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, வட்ட செயலாளர் தேன்மொழி, மூத்த தலைவர் மகாலிங்கம், நகர அமைப்பாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ராவணன், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறைச் செயலாளர் வில்லியம், நகர செயலாளர் நாகராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஜோதிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியன், வட்ட செயலாளர் முருகவேல், சுவாமி சகஜானந்தா பேரவை மாநில செயலாளர் தர்மராஜன், அரசியல் மீட்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் திரளாகக் கலந்து கொண்டு உயிரிழந்த காமராஜ் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

கருத்துகள் இல்லை: