LR Jagadheesan : மிரட்டப்பட்டாரா திருமா? வாருங்கள் விவாதிப்போம்
வெளியில் தெரியாமல் மிரட்டல் விடுவதும் பணியவைப்பதும் எப்படின்னு உலகத்துக்கே பாடம் எடுத்தவை/எடுப்பவை அதிமுகவும் திமுகவும். அதிலும் ஜெயலலிதா அதில் பிதாமகி. இன்றளவும் அவருக்கு ஈடு வைக்க ஆளில்லை. இன்றைய ஆட்சியாளர்களும் கடுமையாக முயல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவை நெருங்க முடியவில்லை.
தற்போதைய திமுக அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஸார் எம்ஜிஆர்இறந்தபோது ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்தார். பின் அவர் தலைமையிலான அதிமுகவில் சேர விரும்பினார். அவரும் அவர் மனைவியும் போயஸ்தோட்டம் வந்து ஜெயலலிதாவிடம் நேரில் மன்னிப்பு கோரினால் அவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அவருக்கு “அறிவுறுத்தப்பட்டது”. அவரும் மனைவியோடு போயஸ்தோட்டம் போனார்.
அங்கே போனபின் “அம்மா” காலில் விழும்படி சொல்லப்பட்டது. அவர் மட்டுமல்ல. அவர் மனைவியும் விழவேண்டும் என்பது குறிப்பாக சொல்லப்பட்டது. பொறியில் சிக்கிய எலியாக இருவரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள். பின்னால் இருந்து அந்தகாட்சி வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
அதன்பின் இத்தகைய மிரட்டல்களில் ஜெயலலிதா புதிய புதிய வரலாறுகளை உருவாக்கிக்கொண்டே போனார். தராசு தாக்குதலில் இருவர் பலி, சந்திரலேகாமீதான ஆசிட்வீச்சு, நீதிபதிமருமகன் மீதே கஞ்சா வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் இல்லாத நிகழ்வாக சொந்த கட்சியின் மகளிர் அணியினர் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக நடத்திய சேலை உயர்த்தும் போராட்டம், செரினா மீதான வழக்குகள், சொந்த ஆடிட்டரையே வீட்டுக்குள் அழைத்து மணிக்கணக்கில் செறுப்பால் அடித்த சிறப்பு, ICUவுக்குள் நுழைந்த ஜெயலலிதாவை காலணியை கழற்றச்சொன்ன மருத்துவரை காவல்நிலையத்துக்கு கொண்டுசென்று மிரட்டிய நிகழ்வு என ஜெயலலிதா முன்னெடுத்த வகை வகையான மிரட்டல்களின் வரலாறு நீண்டது நெடியது. பட்டியல் போட்டு மாளாது.
அவர் மறைந்தாலும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு அவர் போட்டுவைத்த இலக்கணம் தான் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் மிரட்டல் கையேடாக இருந்து இன்றுவரை வழிநடத்திக்கொண்டிருக்கிறது. சந்தேகமிருந்தால் தமிழ்நாட்டின் Mainstream mediaவின் செய்திகளை ஒரு எட்டு எடுத்துப்பாருங்கள். ஆட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான விமர்சனங்களின் லட்சணம் பல்லிளிக்கும்.
ஒரு சோற்றுப்பதமாக ஒரு சம்பவம். புகழ்பெற்ற ஊடக குழுமத்தின் தற்போதைய முதலாளியும் அவர் மனைவியும் ஒருநாள் முழுக்க காணாமல் போய் கடைசியில் எப்படி யார் மூலம் எங்கே சரணடைந்து மன்னிப்புகோரி வழக்கில் இருந்து விடுபட்டார்கள்? எந்த செய்திக்காக என்று விசாரித்துப்பாருங்கள். தமிழ்நாட்டு அரசு விளம்பரங்களும் அரசு கேபிளும் தமிழ்நாட்டின் ஊடக சுதந்திரத்தின் கழுத்தில் சுருக்குக்கயிறாக எப்படி இறுக்குகின்றன என்பதை பேசக்கூட வக்கற்று இருக்கின்றன தமிழ்நாட்டு ஊடகங்களும் so called மூத்த ஊடகர்களும்.
மத்தியில் மோடி அரசு தனது அரசியல் எதிர்தரப்பையும் விமர்சனங்களையும் ஊடகங்களையும் கையாள்வதற்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் எதிர்தரப்பையும் விமர்சனங்களையும் ஊடகங்களையும் கையாள்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதன் இன்னொரு வெளிப்பாடுதான் திருமாவின் அவசரகோலத்தில் அழிக்கப்பட்ட Tweet.
கலைஞரின் மகனாக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுவது ஜெயலலிதா/மோடி பாணி அரசியல் சர்வாதிகாரம் தான்.
அதனால் தான் கலைஞரிடம் எப்படியெல்லாமோ வாய்வீரம் காட்டிய கூட்டணிக்கட்சிகள் இவரிடம் பம்மிப்பாதம்பணிந்து கிடக்கின்றன. ஸ்டாலின் திமுகவின் கூட்டணியில் நீடிக்கவேண்டுமானால் அவர்கள் அப்படித்தான் இருந்தாக வேண்டும் என்பதே இன்றைய தமிழ்நாட்டு அரசியல் யதார்த்தம். திமுக தயவு இல்லாமல் இவர்களால் தேர்தலில் வெல்லமுடியாது; தேர்தலில் வெல்லாமல் கல்லா கட்டவும் இயலாது.
இது இவர்களுக்கொன்றும் புதிதல்ல. சேலை கட்டிய
ஜெயலலிதாவிடம் இவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். உதாரணத்துக்கு தேர்தல் நேரத்தில் கூட்டணி இறுதியாகாமலே அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா ஆணவத்தோடு அறிவித்தபின்னும் அவரை எதிர்க்க வக்கற்று அவரிடம் போய் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி தேர்தலில் போட்டியிட்டவர்கள் தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளும் மற்ற கூட்டணிக்கட்சிகளும். அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவுக்கு மேலவை பதவிக்காக அந்த கட்சியின் தலைவர்களை சென்னைக்கும் டில்லிக்கும் ஜெயலலிதா பகிரங்கமாக அலையவிட்ட
அசிங்கத்துக்குப்பின்னும் ராஜா போயஸ்தோட்ட அழைப்புக்காக காத்திருந்த காட்சிகளும் துக்ளக் சோ தூதுபோனபின் அவருக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டபின் அவர் போயஸ்தோட்ட வாசலில் நின்று அதிமுகவுக்கு அரணாக இருப்பேன் என சபதம் எடுத்த காட்சிகளும் இன்னமும் கண் முன் நிற்கின்றன.
அப்படியெல்லாம் சேலைகட்டிய ஜெயலலிதாவிடம் பம்மியவர்கள் தன்னிடமும் அதேபோல் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று வேட்டி கட்டிய ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். இதில் அவரை மட்டும் குற்றம் சாட்ட என்ன இருக்கிறது? உங்களை நாகரீகத்தோடு உரிய மரியாதை கொடுத்து உங்கள் சுயமரியாதைக்கு பொதுவில் ஊனம் நேராமல் நடத்திய கலைஞருக்கு எதிராக நீங்கள் காட்டிய கைம்மாறு என்ன? 2016இல் அவர் ஆறாவது முறை முதல்வராகி வரலாறு படைப்பதை தடுத்ததைத்தவிர? இன்று அவர் மகனிடம் மண்டியிட வைத்திருக்கிறது காலம். தன் வினை தன்னைச்சுடும். எங்கே கேளுங்களேன் பார்ப்போம் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு”. நீங்கள் தான் தைரியமான ஆளாச்சே.
பிகு: மற்ற கட்சிகளிடம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கோரும் இதே திருமாதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பங்கில் இதுவரை காலமும் உரிய பங்கு மறுக்கப்பட்ட அருந்ததியர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயமான உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். என்னே நகைமுரண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக