Dhinakaran Chelliah : “தர்மம்” ஆபத்தான சொல்!
ஜில்லா பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், அசாம் கண பரிஷத், விதான் பரிஷத்( மேலவை) இப்படி பல பரிஷத் பற்றி கேள்விப் பட்டுள்ளோம்,
ஆனால் “பரிஷத்” ற்கான அர்த்தம் தெரிந்திருக்காது.
அன்றாடம் நாம் புழங்கும் சொற்களில் முக்கியமானது “ தர்மம்”ஆகும், ஆனால் இது எவ்வளவு ஆபத்தான சொல் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
“ஸ்ம்ருதி முக்தாபலம்” என்பது தர்ம சாஸ்திர நூல்கள் அனைத்தையும் திரட்டி வைத்தியநாத தீஷிதர் அவர்களால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
இந்த நூலில்”தர்மம்”பற்றியும் “பரிஷத்”, அதாவது ஒரு நீதி வழங்கும் சபையின் லட்சணம் பற்றியும் வேறு வேறு தர்ம சாஸ்திர நூல்கள் கூறுபவற்றைத் தொகுத்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இனி இந்த நூலில் உள்ள விளக்கத்தைப் பார்ப்போம்;
!!!பரிஷத்தின்(சபை) லக்ஷணம்!!
“யாஜ்ஞவல்கியர்: வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் அறிந்த நான்கு பிராம்மணர்கள் பரிஷத் எனப்படுவர். அல்லது மூன்று வேதங்களையும் அறிந்த மூவராவது பரிஷத் எனப்படும். அந்த பரிஷத் எதைச் சொல்லுமோ அது தர்மமாகும். அல்லது அத்யாத்ம சாஸ்திரமும்(தர்மசாஸ்திரமும்) அறிந்தவரில் சிறந்த ஒருவனாவது எதைச் சொல்வானோ அது தர்மமாகும்.”
“பராசரர்: வேதம் முழுவதும் கற்றவர்கள் நால்வர் அல்லது மூவர் எதைச் சொல்லுவார்களோ அது தர்மமாகும். மற்றவர்(வேதம் கற்காதவர்) ஆயிரம் பேர்கள் சொன்னாலும் தர்மமல்ல. வேதம் கற்றவரும், அக்னிஹோத்ரிகளும், பிராம்மணர்களுள் ஸமர்த்தருமாகிய நால்வர் அல்லது மூவர் கொண்டது பரிஷத் என்று விதிக்கப் பட்டுள்ளது. அனாஹிதாக்னிகளாயும், வேத வேதாந்தங்களை முழுவதும் அறிந்தவரும், தர்மத்தை அறிந்தவருமாகிய பிராம்மணர்கள் ஐந்து அல்லது மூன்று பேர்கள் கொண்டது பரிஷத் எனச் சொல்லப்பட்டுள்ளது. முனிகளாயும், ஆத்மஜ்ஞர்களாயும், யாகங்கள் செய்தவரும், வேத விரதங்கள் அனுஷ்டித்தவரும் ஆகிய பிராம்மணர்ரகளுள் ஒருவர் உள்ளதும் பரிஷத் ஆகும். எந்தப் பிராம்மணர்கள் சாஸ்திர பிராமணத்தை ஆராய்கின்றவராய் தர்மத்தைச் சொல்லுகின்றனரோ, உண்மையான குணத்தைச் சொல்லுகின்ற அவரிடமிருந்து பாபம் பயத்தையடைகிறது. எப்படி கல்லில் உள்ள ஜலம் காற்றினாலும் சூரியனாலும் வற்றுகிறதோ, அப்படி பரிஷத்தானது தன்னுடைய தீர்மானத்தால் அவனுடமுள்ள பாபத்தைப் போக்குகிறது.கர்த்தாவையும் பாபம் அடைவதில்லை. பிரிஷத்தையும் அடைவதில்லை.
எந்தப் பிராம்மணர்கள் வேதத்தைப் படிக்கின்றனரோ, எவர்கள் ஐந்து இந்திரியங்களுக்கு வச்யராயினும் மூவுலகங்களையும் சுத்தம் செய்கின்றனர். தர்மசாஸ்திரமெனும் தேரில் ஏறியவரும், வேதமெனும் கத்தியைத் தரித்தவருமாகிய பிராம்மணர்கள் விளையாட்டிற்காகவாவது எதைச் சொல்லுவாரோ அது சிறந்த தர்மமெனப்பட்டுள்ளது. நான்கு வேதமறிந்தவர்கள், விகல்பி, வேதாந்தங்களை யறிந்தவன், தர்ம சாஸ்திரங்களை யறிந்தவன், பெரியோர்களான மூன்று ஆச்ரமம் உடையவர்கள்(பிரம்மச்சாரீ, க்ருஹஸ்தன்,வானப்ரஸ்தன்) என்று இந்த பத்துப் பேர்கள் அடங்கியதும் தசாவரா பரிஷத் எனச் சொல்லப்பட்டுள்ளது.”
“தேவலர்: கலியுகத்தில் சாந்தர்களும், வித்வான்களுமாகிய பிராம்மணர்களின் கூட்டமே சிறந்ததெனப்படுகிறது. தர்மங்களை அறிந்த பிராம்மணர்கள் அநேகரே அனுக்ரஹம் செய்ய உரியவராகின்றனர்.”
“அங்கிரஸ்: பாதகத்தில் நூறு பேர்கள் கொண்ட பரிஷத் வேண்டும். மஹாபாதகம் முதலியவைகளில் ஆயிரம் பேர்களடங்கிய பரிஷத் இருக்க வேண்டும். உப பாதகங்களில் ஐம்பது பேர்கள் கொண்ட பரிஷத் இருக்க வேண்டும்.”
“மனு: பத்துப் பேர்களுக்குக் குறையாத பரிஷத்தானது எந்த தர்மத்தை விதிக்குமோ, அல்லது மூன்று பேர்களுக்குக் குறையாத தாய் நியமத்துடன் கூடிய சபையானது எந்த தர்மத்தை விதிக்குமோ அந்த தர்மத்தை அசைக்கக் கூடாது. மூன்று வேதங்களை அத்யயனம் செய்தவர்கள், ஸ்ருதி, ஸ்ம்ருதிகளுக்கு விரோதமில்லாத நியாய சாஸ்திரம் அறிந்தவன், மீமாம்ஸரூப தர்க்கத்தை யறிந்தவன், நிருக்தமறிந்தவன், மனுஸ்ம்ருதி முதலிய தர்ம சாஸ்திரம் அறிந்தவன், பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்புரஸ்தன் என்ற இந்தப் பத்துப் பேர்கள் கூடியது தசாவரா பரிஷத் எனப்படுகிறது. ருக்வேதம், யஜூர் வேதம், ஸாம வேதம் இவைகளை அர்த்தத்துடன் அறிந்த மூவர்கள் கூடிய சபை தர்ம ஸம்சய நிர்ணய விஷயத்தில் த்ரயவர பரிஷத் எனப்படுகிறது. வேதமறிந்த வித்வானாகிய ஒருவனாவது எதைத் தர்மமாக நிச்சயிப்பானோ, அது உயர்ந்த தர்மமாக அறியத் தகுந்தது. தர்மம் அறியாத பதினாயிரமவர்கள் சொன்னாலும் அது தர்மம் ஆகாது.”
இனிமேலாவது “தர்மம்” என்ற சொல்லை எழுதும்போது, பேசும்போது கவனமாக பயன்படுத்துவோம்.தர்மம் என்றாலே பாகுபாடு உடையது,வர்ணம் சாதியின்படி மாறக் கூடியதே தர்மம். இதை தர்ம சாஸ்திர நூல்களைப் படித்தால் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக